ஆன்மிகம்

வாடாத மலர் ஆண்டாள்

இரா.நரேந்திர குமார்

பன்னிரண்டு முதல் பதினைந்து வயது வரையிலான பெண்ணின் பருவத்தை ‘வாலை' என்பர். பதினாறுக்கும் முப்பதுக்கும் இடையிலான ‘தருணி' பருவத்தைக் கோதை ஆண்டாள் தொட்டிருக்க வாய்ப்பில்லை. வாலைக்குமரியாம் ஆண்டாள் பாடிய 30 பாசுரங்கள் ‘திருப்பாவை' எனவும், ஏனைய 143 பாசுரங்கள் ‘நாச்சியார் திருமொழி' எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வழிதேடி உழல்வோருக்கு வழிகாட்டும் வகையிலமைந்த ஆற்றுப் படை இலக்கியமான திருப்பாவைக்கு ஆண்டாள் சூட்டிய பெயர் ‘சங்கத் தமிழ் மாலை'. திருப்பாவையின் நிறைவுப் பாசுரத்தில் ‘பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே' என்கிறாள் ஆண்டாள். இதனுள் ஒரு வரலாற்றுக் கூறுமுண்டு.

ஆண்டாளின் இயற்பெயர் கோதை என்பதே அது. ‘நாச்சியார் திருமொழி', ஒவ்வொரு திருமொழியின் நிறைவுப் பாசுரத்திலும் தன் இயற்பெயரை உறுதிப்படுத்தியிருக்கிறாள் ஆண்டாள். ஆண்டாள் வாழ்ந்த கால கட்டத்தில் ‘நாச்சியார்' என்ற சொல் வழக்கிலிருக்க நியாயமில்லை. சுமார் நானூறு ஆண்டு கால எல்லைக்குள் புழங்கி வரும் இச்சொல்லினைக் குந்தவையுடன் இணைத்தல் கூடப் பொருத்தமற்றது.

இன்றைய மேடைக் கச்சேரி வடிவத்தை அறிமுகப்படுத்திய அரியக்குடி ராமானுஜ அய்யங்காரே திருப்பாவைப் பாசுரங்களுக்குப் பண்ணமைத்துத் தந்தவர். திருப்பாவைக்குத் தந்த சீர்மையை வைணவம் நாச்சியார் திருமொழிக்கு அளிப்பதில்லை. ‘வாரணம் ஆயிரம்' மட்டும் விதிவிலக்கு.

திருமொழியில் இழையோடும் பாலியல் விழைவானது, உச்சி முகரவேண்டிய கவிதையை ஒதுக்கி வைக்கக் காரணமானது. காமம் என்பது உலகியல் பிணைப்புக்கான காரணி. ஆண்டாளின் பாசுரங்களால் காம வயப்பட்டவர் எவருமுண்டோ? என்றாலும், கட்டற்றத் தன்மையைக் காரணமாக்கி இருளில் தள்ளப்பட்ட நாச்சியார் திருமொழிக்கு இலக்கிய உலகில் ஏற்றமிகு இடமுண்டு.

பாற்கடலில் பயணம் செய்யும் தெப்பம்

கடவுளுக்கு அஞ்சி ஒடுங்கும் இறையச்சம் ஆண்டாளிடம் இல்லை. உலங்குண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து உயிர்ப்பூவை உறிஞ்சி உலரச் செய்த கண்ணன் எனும் கருந்தெய்வத்துக்காக ஏங்கியவள் அவள். தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்கிய ஆண்டாளின் விவரிப்புகள், காலம் - வெளி - இடம் - புலன் கடந்த மெய்யியல் சமன்பாடு. இறைவனை அணுகத் தடையாக இருப்பது காமம் என்கிறது உலகியல். ஆண்டாளுக்கோ அது பாற்கடலில் பயணம் செய்ய உதவும் தெப்பமாகிறது.

பொன்வானம் புலர்வதற்குள் ஆண்டாள் எனும் மார்கழித் தோழி கல், சாணம், மலர், மரம் ஆகியவற்றை வணங்கும் மரபின் அடியொற்றிக் கைக்கொண்ட ‘பாவை' நோன்பு, மாணிக்கவாசகருடைய திருவெம்பாவையின் பரவலுக்கும் வழி கோலியிருக்கிறது. இது மறுக்கமுடியாத உண்மை. எலும்பையும் உருகச் செய்யும் திருவாசகம் காலத்தை வென்று நிற்பது போல, மனதைக் கரையச் செய்யும் நாச்சியார் திருமொழியும் பேரிலக்கியமாய் கால வெள்ளத்தில் கரை சேர்ந்திருக்கிறது.

ஆண்டாள் இருந்தாளா?

கோதைத் தமிழ் மீதான விவாதங்களும், புதிர்களும், புதுப் புரிதல்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை / துடைவை என்றிவை யெல்லாம் / வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே / வளைப்பகம் வகுத்துக் கொண்டிருந்தேன்' என்கிறது பெரியாழ்வார் திருமொழி (437). உன் திருவடி நிழலில் ஒதுங்கி நிற்பதன் கருணையினால் நான் தோட்டம், மனைவி, பசு, தொழுவம், ஓடை, நிலம் போன்ற செல்வங்களைப் பெற்றேன் என வரிசைப்படுத்தும் பெரியாழ்வார் ஆண்டாள் என்கின்ற மகளைக் குறிப்பிடவில்லையே என்பவர் உண்டு.

‘பெரியாழ்வார் தனது கிருஷ்ண காமத்தைக் கவியுக்தியாக வெளிப்படுத்தக் கற்பனை செய்து கொண்ட கற்பனை மகளே ஆண்டாள்' என்பது ராஜாஜியின் கருத்து. ‘ஒரு மகள் தன்னை உடையேன், அவளைத் திருமகள் போல வளர்த்தேன்' எனப் பெரியாழ்வார் வெளிப்படுத்திய தந்தைப் பாசம் முன்பு ராஜாஜியின் வாதம் தகர்ந்தே போனது. பெரியாழ்வாருக்கு ஒரு மகனும் இருந்ததாகக் கருத இடமுண்டு. திருவரங்கக் கோயிலை நிர்வகித்துக் கொண்டிருந்த அவருடைய மரபினரே உத்தம நம்பிகள் மரபு என ‘உத்தம நம்பி வைபவம்' நூல் கூறுகிறது.

சங்க காலப் பெண் கவிஞர்களாகப் பட்டியலிடப் படும் 41 பேரின் நீட்சியே ஆண்டாள். தாவரங்கள், மலர்கள், பறவைகள், இன்ன பிற உயிரினங்களுடனும், இயற்கையுடனும் அன்பு பூண்டு வாழ்ந்த வாழ்க்கை சங்க காலச் சிறப்பு. ஒரு பாசுரத்தில் ஆண்டாள் ஆனைச் சாத்தனைப் பாடுகிறாள். சங்க இலக்கியங்கள் பேசும் யானையங்குருகே (குறுந்தொகை 34) இந்தப் புள்ளினம் என்கிறார் உ.வே.சா.

பூவில்லா வழிபாடு முழுமையில்லை. ஆண்டாளின் பாசுரங்களில் இடம் பெற்ற மலர்கள் பதினான்கு. முல்லை, பாரிஜாதம், ஞாழல், ஆம்பல், புன்னை, தோன்றி, கொன்றை, செருத்தி, பூவைப்பூ, குருக்கத்தி, முருகம்பூ, சூதகம், கருவிளை, கருங்குவளை ஆகியனவே அவை. கார்க்கோடப்பூ எனவும் சங்குப்பூ எனவும் அழைக்கப்படும் நீலநிற காக்கண மலர்கள் (கருவிளை) ஆண்டாளின் பல்வேறு பாசுரங்களில் இடம் பெற்றுள்ளன.

கருவிளை மலர்களும் காயா மலர்களும் அவளுக்குக் கொண்டல் வண்ணனை நினைப்பூட்டுகின்றன. கருவிளை என்பது நீலக் காக்கணம். செருவிளை என்பது வெள்ளைக் காக்கணம். குயிலும் மயிலும் கருவிளையும் களாக்கனியும் காயாமலரும் கருநீலம் என்பதால் ஆண்டாளுக்கு நெருக்கம். தன் நெஞ்சில் நிறைந்த நீலக் காக்கணத்தை கார்க்கோடப்பூ என்கிறாள் ஆண்டாள்.

கார்தண் முகிலுடனும், கருவிளை - காயாமலர் - கமலப்பூ உடனும் ஆண்டாள் பேசுகிறாள். “கார்கோடப் பூக்காள்; கார் கடல் வண்ணன் என் மேல் உம்மை / போர்க்கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்” என்பது அவளுடைய புலம்பல். தமிழ் இருக்கும் காலம்வரை வாடாத மலராக ஆண்டாள் இருப்பாள்.

SCROLL FOR NEXT