ஆன்மிகம்

‘கொன்னக்கோல்’ வி.வி.எஸ்.மணியன்

பாலா

முந்தையக் காலத்தில் நடந்த கச்சேரி மேடைகளில் தாளவாத்திய கலைஞர்களின் வரிசையில் கொன்னக்கோல் கலைஞரும் இருப்பார். கச்சேரிகளில் இந்தக் கலைஞர்களுக்கு ஆதரவு இல்லாததால் காலப்போக்கில் கொன்னக்கோலை கையாள்பவர்கள் குறைந்து விட்டனர். இன்றைக்கு கொன்னக்கோல் வித்வான்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அடிப்படையில், தாள வாத்தியக் கலைஞர்கள், முதலில் தாளக்கட்டுக்களை வாயினால் உரக்கச் சொல்லி பயிற்சி செய்து, பின்னர் அதனை வாயினால் கூறியபடி, வாத்தியத்தில் இசைத்து பயிற்சி செய்வதுதான் முறையாகும். இந்த தாளக்கட்டுக்களை நயம்பட, இடம், பொருள், ஏவல் அறிந்து ஒரு கச்சேரியின் பொழுது அளிப்பதே ஒரு கொன்னக்கோல் கலைஞரை அடையாளம் காட்டும்.

இந்தக் கலையை நன்றாகப் பயின்று சென்னையில் பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் மாணவர்களுக்கு அதை முழுநேரம் பயிற்றுவிப்பவராக பணிபுரிந்து வருகிறார் திருச்சி வி.வி.எஸ்.மணியன்.

“வைஜயந்திமாலாவின் நடன நிகழ்ச்சி ஒன்றில் என்னுடைய கொன்னக்கோல் பங்களிப்பைப் பாராட்டி, தொலைநோக்குப் பார்வையோடு மாணவர்களின் அறிவு தளத்தை விரிவுபடுத்தும் முயற்சியாக, உடனே அவர்களின் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியராக நியமித்தார் திருமதி ஒய்.ஜி.பி. அதை என்றைக்கும் நான் மறக்கமாட்டேன்” என்கிறார் வி.வி.எஸ். மணியன். வி.வி.எஸ். மணியன் தன் குருநாதரைப் பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசத் தொடங்கினார்.

“சுமார் 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க புதுக்கோட்டை ஸ்ரீ மான்பூண்டியா பிள்ளை, அழகர் நம்பியாப் பிள்ளை அவர்களின் வழியில்வந்த புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்தி பிள்ளை பிரபல தாள வாத்தியக் கலைஞர். பூச்சி சீனிவாச ஐயங்கார், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அவர்களுக் கெல்லாம் பக்கவாத்தியம் வாசித்தவர். அவர்களின் பிரதம சீடரான திருச்சி தாயுமான வன்தான் என்னுடைய குரு. சுமார் 10 ஆண்டுகாலம் அவர்களிடம் நான் தாள வாத்தியக் கலையை அவருக்குச் சேவை செய்தபடி கற்றுக் கொண்டேன்.

1973-ம் ஆண்டு திருச்சி நன்னுடையான் கோயிலில் என் அரங்கேற்றம் நடைப்பெற்றது. ஆலத்தூர் நிவாஸ ஐயர் பாடினார். அன்று கச்சேரிக்கு வந்த பிரபல வித்வான்கள் என்னுடையக் கொன்னக்கோலைக் கேட்டு வியந்து பாராட்டினார்கள். இந்தப் பட்டியலில் திருச்சி உலகநாதப் பிள்ளை, எம்.கே.கோவிந்தராஜ பாகவதர் (எம்.கே.டி.யின் சகோதரர்), சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கிளாரிநெட் வித்வான் ஏ.கே.சி.நடராஜன் ஆகியோர் அடங்குவர். சிறுவனாக இருந்த எனக்கு அவர்களின் ஆசிகள் கிடைத்ததாலேயே இந்த அளவுக்கு வந்துள்ளேன்” என்கிறார்.

பத்மா சேஷாத்ரி பள்ளியில் 4, 5, 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு கொன்னக்கோல் பயிற்றுவிக்கிறார். தமிழ் உச்சரிப்பு மேம்படுதல், தொன்மையான தமிழ்க் கவிதைகளை மனனம் செய்தல், ஞாபக சக்தி அதிகரிப்பு போன்ற நன்மைகளை அளிக்கிறது இந்தக் கொன்னக்கோல் கலை.

திருக்குறள், கொன்றைவேந்தன், ஆத்திச்சூடி போன்ற தொகுப்புகளை ஒரு தாளக்கட்டுக்குள் அமைத்து முதலில் கொன்னக்கோல் சொற்களாகப் பயிற்றுவித்தபின், அச்செய்யுட்களை அந்தச் சந்தத்திற்குள் பொருத்தி அதைச் சொல்கிறார் மணியன். வெறும் ஒப்பித்தலோடு போகாமல் அதற்குரிய அர்த்தங்களையும் போதிக்கும் ஒரு தமிழ் ஆசிரிய ராகவும் பரிமளிக்கிறார் மணியன். 3 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு 5 வகை தாள நடைகளும் ஏழு ஜாதி தாளங்களும் அத்துப்படியாகிவிடுமாம்.

கச்சேரிகளிலும் நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் மணியனுக்கு சங்கீத உலகின் ஆதரவு இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. கோவையில் செம்மொழி மாநாட்டில் திருக்குறளை ஏறக்குறைய 1 லட்சத்துக்கும் அதிகமான ஆர்வலர்களின் முன்பாக கொன்னக்கோல் இசைத்து பாடியதை பெருமையுடன் நினைவுகூர்கிறார் மணியன்.

SCROLL FOR NEXT