ஆன்மிகம்

கேளுங்கள் கொடுக்கப்படும்

சுவாமி விவேகானந்தர்

ஒரு விருப்பத்துக்கும் வேறொரு விருப்பத்துக்குமிடையே வேறுபாடு உண்டென்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு சிஷ்யன் தன் குருவிடம் சென்றான்.

“ஐயனே! எனக்குச் சமயம் வேண்டும்” என்று கூறினான்.

குருநாதன் அந்த இளைஞனைப் பார்த்தார். ஒன்றும் பேசாமல் சற்றே சிரித்தார். அந்த இளைஞன் தினமும் வருவான். சமயம் வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்வான். ஆனால் அந்த இளைஞனைவிடப் பெரியவருக்கு விஷயங்களெல்லாம் நன்கு தெரியும். ஒருநாள் உஷ்ணம் அதிகமாக இருந்தது.

ஆற்றுக்குப் போய் குளித்துவிட்டு வரலாமென்று அந்த இளைஞனைப் பெரியவர் அழைத்துப் போனார். ஆற்றுக்குப் போனதும் இளைஞன் நீரில் மூழ்கினான். பெரியவர் அவனைப் பின்தொடர்ந்து சென்று அவன் தண்ணீருக்குள் இருக்கும்பொழுது அவனை அழுத்திவைத்துப் பிடித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் அந்த இளைஞன் திக்குமுக்காடித் துடித்த பிறகு அவனை விட்டுவிட்டார்.

“தண்ணீருக்குள் இருந்தபோது நீ மிக முக்கியமாக எதை விரும்பினாய்?” என்று கேட்டார்.

“ஒரு தடவை மூச்சு இழுத்து விடுவதற்காகக் காற்றை விரும்பினேன்” என்று பதிலளித்தான் சிஷ்யன்.

“அந்த அளவு தீவிரத்துடன் நீ கடவுளைக் காண வேண்டுமென விரும்புகிறாயா? அப்படி விரும்பினால் ஒரு கணத்திலேயே அவனை அடைவாய்” என்று குரு கூறினார்.

“அத்தகைய தாகம், அத்தகைய தீவிர விருப்பம் இல்லையேல் சமயம் உனக்குக் கிடைக்காது. உனது மூளை, அறிவு, உனது புத்தகங்கள், உனது அமைப்பு முறைகள் இவை எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு நீ எவ்வளவுதான் போராடினாலும் உனக்குச் சமயம் கிடைக்காது” என்றார் குரு.

SCROLL FOR NEXT