ஆன்மிகம்

வெல்லும் சீர் கோவிந்தா

ஸ்ரீ விஷ்ணு

நாராயணன் பறை தருவான் என்ற குறிக்கோளை நோக்கி ஆண்டாள் பல செயல்களைச் செய்கிறாள். அவற்றினை விரதம் என்கிறாள். அந்த விரதத்திற்கு விதிகளை அமைக்கிறாள். அவ்விதிகளை முறையாகப் பின்பற்றி கண்ணனிடம் பறை என்ற நோன்பின் பயனையும் பெறுகிறாள். கண்ணனும் ஆண்டாளை மணப்பதாக உறுதி அளிக்கிறான்.

ஊரில் உள்ள கன்னிப் பெண்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு குழுவாகவே விரதம் இருக்கிறாள். ஆனால் இக்குழுவில் ஸ்ரீ ரங்க மன்னாரை மணந்தது ஆண்டாள் மட்டுமே. பிற பெண்களெல்லாம் எங்கே?

கண்ணனை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. ஆனால் கால பலன் காரணமாக அவனுக்கு எதிரிகள் இருந்தார்கள். கம்சன் முக்கிய எதிரியாக இருந்தான்.கண்ணனுடன் கூடி, அவனைப் பாடி பறை என்னும் நோன்பின் பயனை பெற்றதே சன்மானம் என்ற சம்பளம். இதனால் ஆண்டாளுக்கு நாடு முழுவதும் புகழ் கிடைத்தது.

அதனைக் கொண்டாட வேண்டும். ஒரு கொண்டாட்டம் என்றால் நகைகள் அணிந்து புத்தாடை உடுத்திக் காட்சி அளிப்பது வழக்கம். சூடகமே என்ற கையில் அணியும் நகை. தோளில் அணியும் அணிகலன். தோடு காதில் அணியும் நகை. செவிப்பூவே என்பது தோடு அணியும் இடத்திற்கு சற்று மேலே அணியப்படும் கர்ணப்பூ என்னும் நகை. பாடகம் என்னும் காலில் அணியும் கொலுசு போன்ற நகை. தலை முதல் பாதம் வரை பல அணிகலன்களை அணிந்து கொண்டு புத்தாடைகளையும் அணிவோம் என்றாள்.

ஆண்டாள் கடைப்பிடித்த கட்டுப்பாடுகள்

இது நாள் வரை விரதமிருந்த காரணத்தால், கண்களுக்கு மையிட்டு எழுதவில்லை. தலைக்கு மலரிட்டும் முடியவில்லை. தற்போது ஆனந்தமாக சன்மானம் பெற்றாகிவிட்டது. இனி கொண்டாட்டத்திற்கு தடையேதுமில்லை. கொண்டாட்டம் என்றாலே உணவுதான் அதிமுக்கியம். அந்த உணவும் புதுமையாகவும், மிக உயர்ந்ததாகவும் இருக்க வேண்டும். அதுவே அக்கார அடிசில் என்கின்ற அமுது. இவ்வுலகப் பொருளும், அவ்வுலகப் பேறும் பெற்று வாழ இப்பாசுரம் வழி காட்டும்.

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உன் தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

SCROLL FOR NEXT