ஆன்மிகம்

நிமித்தக் குறிகள்

விஜி சக்கரவர்த்தி

சமணமதத்தின் முக்குடை நாயகன் முனிசுவிரத சுவாமி இருபதாவது தீர்த்தங்கரர் ஆவார். நவக்கிரக நாயகர்களில் சனிபகவானாகக் கருதப்படுகிறார். இவரின் திருவுருவத்தை முடியில் தரித்து, அப்பரே பாடிய திருநறுங்கொண்டை எனும் திருத்தலத்தில் சனிபகவான் தனியாக நின்று அருள் தருகிறார். அருகர் முனிசுவிரதர் வாழ்க்கை வரலாற்றில் நிமித்தக் குறிகளைப்பற்றி ஸ்ரீ புராணம் விவரிக்கிறது.

நிமித்தக் குறி சாத்திரங்கள் எட்டு வகைப்படும். அவை: அந்தரிக்ஷம், பௌமம், அங்கம், ஸ்வரம், இவ்யஞ்ஜனம், லட்சணம், சிந்நம், சொப்பனம் ஆகும்.

அந்தரிக்ஷ நிமித்தம்

வானிலுள்ள சூரியன், சந்திரன் போன்ற கிரகங்கள், விண் மீன்கள், இவற்றைக் கண்டு நடக்கப்போகும் நன்மை தீமைகளைக் கூறுவது.அந்தரிக்ஷம் மூலம்தான் பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.

பௌமம்

பூமியில் ஒரு குழியைத் தோண்டி வேள்விக் குண்டம் முதலானவற்றைக் கொண்டு பலன்களை உரைப்பது.

அங்க நிமித்தம்

மனிதன், மிருகம் ஆகியவற்றின் ரசம், இரத்தம், உடலுறுப்புகளைப் பார்த்து நன்மை தீமைகளை உரைப்பது. தற்கால உடல் பரிசோதனை நிலையத்தில் நோயைக் கண்டுபிடிப்பது போலாகும்.

ஸ்வரநிமித்தம்

குரல்களைக் கேட்டும் உயிரெழுத்துக்களைக் கொண்டும் நல்லது கெட்டது உரைப்பது. ஆந்தை அலறல், நாய் அழுதல் போன்றவை.

இவ்யஞ்ஜன நிமித்தம்

உடலின் நிறம் முதலானவற்றைக் கொண்டு நன்மை தீமைகளை நிர்ணயிப்பது.

லட்சணநிமித்தம்

உடலில் சூரியன், சந்திரன்.சுவஸ்திகம், கலப்பை,ஈட்டி, தீவு, கடல், மாளிகை, விமானம், பர்ணம்,பட்டிணம், கோபுரம், இந்திரக்கொடி, சங்கு, கொடி, உலக்கை, குதிரை, ஆமை, அங்குசம், சிங்கம், யானை, எருது, மீன், குடை, படுக்கை, இருக்கை, வர்த்தமானம்,  வத்ஸம், சக்கரம், அக்கினி,கும்பம் என முப்பத்திரண்டு சுபலட்சணங்களைப் பார்த்து நன்மை தீமைகளை நிர்ணயிப்பது.

சிந்நநிமித்தம்

ஆயுதம், முள்,எலி இவற்றால் ஏற்பட்ட வெட்டுகளைக் கொண்டு பலன் சொல்வது.

சொப்பனநிமித்தம்

கனவில் தோன்றுவதைக்கொண்டு பலன் கூறுவது. தீர்த்தங்கரர்களின் பிறப்பு இந்த நிமித்தத்தால் அறியப்பட்டது.

பெருங்கதைக் காப்பியத்தில் மதனமஞ்சிகை எனும் மங்கை பந்தாடும் போது மாளிகையிலிருந்து பந்து வீதியில் வீழ்கிறது.அந்தப் பந்து யாருடையது என்று அறிய,கோமுகன் என்பவன் அந்தப் பந்தில் பதிந்திருந்த கைரேகையைக்கொண்டு,

“விரலும்,விரலுக்கு ஏற்ற அங்கையும்

அங்கைக்கு ஏற்ற பைந்தொடி முன்கையும்

முன்கைக்கு ஏற்ற நன்கு அமைதோளும்

தோளிற்கு ஏற்ற வாள் ஒளி முகமும்” என ஒவ்வொரு அங்கமாக ஒரு முழுப் பெண்ணின் வடிவத்தைக் கூறி,“இதன் வடிவு ஒப்பாள் இந்நகர் வரைப்பின் மதன மஞ்சிகை ஆகும்” என்றுக் கூறி கைரேகக் கலையின் மூலமும் சாமுத்ரிக சாத்திரம் மூலமும் இந்தப் பெண்ணெனத் துல்லியமாகக் கூறுகிறான்.

இந்தக் கலைகளைக் கற்றுத்தந்த ஆச்சாரியர்கள் தம் மாணவர்களைச் சோதித்தும் பார்த்துள்ளனர். இவை இக்காலத் தடயவியல் என்று பரிணமிக்கின்றன

இவ்வாறு ஜைனமத நூல்களில் நிமித்தங்கள் பற்றி ஜைனர்களால் விளக்கப்பட்டுள்ளன. பத்ரபாகு முனிவரின் சம்ஹிதை என்ற நூல் சோதிடத்தைப்பற்றிய முதல் நூலாகும். ஜினேந்திர மாலை, உள்ளமுடையான் போன்ற சோதிட நூல்களையும் சமணம் தமிழுக்கு அர்ப்பணித்துள்ளது.

SCROLL FOR NEXT