ஆன்மிகம்

‘ஐ’ பிறந்து தை பிறந்தது

விஜி சக்கரவர்த்தி

தமிழுக்கும் மலைகளுக்கும் எப்பொழுதும் தொடர்புண்டு. அதன் வழியில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையின் வடக்கே திருநாதர் குன்று எனும் சிறிய மலை உள்ளது. இதனை சிறுகடம்பூர் மலையென்றும் இப்பகுதியை சிம்மபுரி என்றும் அழைப்பர்.இம்மலை தமிழ் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இம்மலையின் உச்சியில் ஒரு பெரிய கற்பாறை உள்ளது.

அதில் சமண அறத்தைப் பரப்பிய இருபத்து நான்கு தீர்த்தங்கர்களின் திருமேனிகள் செதுக்கப் பட்டுள்ளன. அவை அமர்ந்த நிலையில், இருவரிசையில் இரு விழிகளையும் கவருமாறு அமைக்கப்பட்டு, கழுகுமலையில் உள்ள சமணச் சிற்பங்கள் போலுள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்கரரின் தலையின் மேற்பகுதியில் முக்குடை காணப்படுகிறது. இரு சாமரங்கள் குறுக்காகப் பிணைந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

பாறையின் வலதுபக்கத்தில் ஒரு தீர்த்தங்கரர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிலைகள் அனைத்தும் பாறையின் உச்சிப்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன.சிலைகளுள்ள பகுதியை கோயில் என்கின்றனர். கற்பாறையின் மேற்குப்பகுதியில் குகை காணப்படுகிறது.

வீழ்ந்து கிடக்கும் சிலை

மலையின் நடுப்பகுதியில் ஒரு பெரிய பாறையில் பத்மாசனத்தில் ஒரு தீர்த்தங்கரரின் சிலையும், சிலையின் மேற்பகுதியில் கல்வெட்டுச் சான்றும் இருந்துள்ளன.ஆனால் அது இரண்டாக உடைக்கப்பட்டு தற்போது வீழ்ந்து கிடக்கிறது. மதுரையில் மதம் மாறிய கூன்பாண்டியன் எண்ணாயிரம் சமணரைக் கழுவற்றியதாகப் பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், தக்கயாகப்பரணி முதலானவை கூறுகின்றன.ஆனால் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறிய மகேந்திரப்பல்லவனோ இம்மலை அருகிலேயே மற்றொரு மலையில் அரங்கநாதர் கோயில் ஒன்றை சமண சான்றுகளை அழிக்காமலேயே கட்டியுள்ளான்.

மலை மீது மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முதிர்ந்தநிலை பிராமி மொழியிலிருந்து வட்டெழுத்தாக தமிழ் வளர்ந்த, மாறுதல் அடைகிற காலக்கட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இங்குதான் முதன்முதலில் தென்படுகிறது என்று அழகாக விளக்குகிறார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வெங்கடேசன்.

தமிழுக்கு எழுத்தைத் தந்த மலை

மலையின் சிறப்பாக, ‘ஐ’ எனும் தமிழ் எழுத்தும் திருநாதர்குன்று கல்வெட்டில்தான் பிறந்துள்ளது என்கிறார் அவர். ஆகவே இங்கு ‘ஐ’ பிறந்து தை பிறந்தது எனலாம்.இதனால் இம்மலை தமிழுக்கு எழுத்து தந்த மலையாகிறது. இங்குள்ள ஒரு கல்வெட்டு,சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்கிறது.

மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார் என்கிறது. சமீபத்தில் காணப்பட்ட கல்வெட்டு கோயிலில் விளக்கேற்ற நானூறு ஆடுகள் தானம் தரப்பட்டதாகத் தெரிவிக்கிறது. இவ்வளவு சிறந்த மலையை அரசு நன்கு பராமரிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT