ஆன்மிகம்

ஆன்மிக நூலகம் - அவனே ஞானி

செய்திப்பிரிவு

வியாசர், தான் மிகுந்த சிரமம் எடுத்துக் கொண்டு இயற்றிய கிரந்தத்தை தன்னுடைய முக்கிய சிஷ்யரான ஜைமினியிடம் பரிசீலனை செய்யச் சொல்லிக் கொடுத்தார். ஜைமினி ரிஷியும் அந்நூலை அடியிலிருந்து நுனிவரை கவனமாக ஆராய்வதில் முனைந்தார்.

அப்படி மேற்பரிசீலனை செய்து கொண்டே வரும்போது அதில் ஒரு இடத்தில், இப்படி ஒரு அறிக்கை வாசகம் தட்டுப்பட்டது.

`எந்த மனிதனும் பரஸ்த்ரீயுடன் தனிமையில் இருப்பதோ சம்பாஷனை செய்வதோ சிறிதும் உசிதமற்றது. அது நல்லதில்லை. காரணம், தனிமையில் சாதுக்களையும் ஞானிகளையும்கூட, பலசாலிகளான இந்த இந்திரியக் கூட்டம் (ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள் மனம், புத்தி, அகங்காரம் இவை இந்திரியக் கூட்டம் எனப்படுவது) மோஹத்தில் தள்ளிவிடும் அபாயம் உள்ளது.

இந்த அறிக்கையை ஜைமினி ஒரு தடவை இல்லை, திரும்பத் திரும்ப மூன்று நான்கு தடவைகள் படித்தார். ஜைமினியின் மனதில் சந்தேகம் முளைவிட ஆரம்பித்தது. காரணம், இப்படிப்பட்ட அறிக்கை அவருடைய மனதிற்கு யோக்கியமாகப்படவில்லை. அவர் அந்நூலைத் தொடர்ந்து பரிசீலனை செய்வதை அத்துடன் நிறுத்திப் புத்தகத்தையும் மூடிக் கையில் எடுத்துக் கொண்டு உடனே குருவிடம் வந்து வணக்கம் தெரிவித்துச் சொல்லலானார்.

“குரு மஹாராஜ், நூல் மிகவும் சிரேஷ்டமாகவும் எல்லோரும் போற்றிப் புகழும்படியும் அமைந்திருக்கிறது. ஆனால் ஒரு இடத்தில் மட்டும், எனக்கு ஏதோ ஒன்று விபரீத விஷயமாகப்படுகிறது. அதனால் அதை உங்களிடம் தெரிவிக்கலாமென்று வந்தேன்” என்றார்.

அதைக் கேட்ட குரு வியாசர், “ரொம்பவும் நல்லதாகப் போயிற்று. இதற்காகத்தான் இந்த நூலை முதலில் உன்னுடைய மேற்பார்வைக்குக் கொடுத்தேன். உனக்கு என்னுடைய நூலில் எது அயோக்கியம் சரியில்லை என்று படுகிறதோ அதை உடனே சொல்லு” என்றார்.

ஜைமினியும் உடனே அந்தக் கிரந்தத்தை அவர் முன் வைத்து வணங்கியபின், “மனிதன் ஸ்திரீயுடன் தனிமையில் இருக்கும் போது, சாதுக்களையும் ஞானிகளையும் கூட, இந்திரியக் கூட்டம் மோஹத்தில் தள்ளிவிடும் என்றால் எப்படி?

ஞானிகளுக்கு மோஹம் ஏற்படுமா என்ன? ஞானி என்ற வார்த்தை அதன் அர்த்தத்தினாலேயே சுட்டிக் காட்டுவது எதை என்றால் அறியாமையும் மோஹமும் எவனிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறதோ அவனே ஞானி. வித்வத்தா என்றால் அறிவும், ஞானம் என்றால் சத்தியம் எது, அசத்தியம் எது என்றும் உண்மையாக, நிச்சயமாக உணருதல்.

இப்பொழுது, இப்படிச் சத்தியம், அசத்தியம் இவற்றை நன்கு உணர்ந்தபின், அசத்தியத்தில் மயங்கி, இந்திரியக் கூட்டங்களால் மோஹம் அடைவது என்பது எப்படி அறியாமை என்ற அஞ்ஞானத்தைச் சேர்ந்ததோ, அப்படிப்பட்ட அறியாமை எவர்களிடமிருந்து அடியோடு நாசமடைந்துவிட்டதோ அவர்களைத்தானே ஞானி புருஷர்கள் என்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஞானி புருஷனுக்கு, மோஹம் உண்டாவது என்பது எப்படிச் சம்பவிக்கும்? அது சாத்தியமேயில்லை. அவனுடைய மேலான நிலையிலிருந்து வீழ்ச்சி எப்படி ஏற்படும்? யார் முதலிலேயே மோஹத்திலிருந்து விடுபட்டவரோ அவன்தானே ஞானி. குரு மஹாராஜ், இது ஞானிகளையும் மஹா புருஷர்களையும் அவமதிப்பது போல் இருக்கிறது. ஆகையால் ஐயனே, தாங்கள் இந்த வாசகத்தை மட்டும் நீக்கி, இந்த விலை மதிப்பில்லாத நூலை அதனுடைய அபவாதத்திலிருந்து விடுவிக்க வேண்டுகிறேன்” என்றார்.

வியாசர் சிறிது புன்னகையுடன் சொன்னார். “ஜைமினி, ஈசுவரனுடைய இந்த மாயை எவ்வளவு வீரியமுள்ளது என்பதை நீ புரிந்துகொள்ளவில்லையா? அகில உலகத்தையுமே ஆட்டிப் படைப்பவள். ஜகம் முழுவதையுமே மோஹத்துக்கு உள்ளாக்கி, அதில் முழுக வைப்பவள். இந்த மஹா மோஹினிதான் `மாயை’ எனப்படுபவள். ஜகத்தில், ஈசுவரன் தோன்றிய போதே இவளும் தோன்றியவள். ஆதிகாரணி, ஆதிசக்தி, புருஷோத்தமன் என்ற ஸ்ரீ ஹரியினுடைய மூலப்ரகிருதி இவள். இந்த மாயையினால்தான் உலகம் உண்மை போல் தோன்றுகிறது.

இந்த ஈசுவரீ மாயை கடப்பதற்கு அரியவள். இவளைத்தாண்டிப் போவது முடியாத காரியம். இந்த ஈசுவரீ மாயையில் பெரிய பெரிய யோக புருஷர்கள்கூட மோஹமடைந்திருக்கிறார்கள். யோகரிஷி விஸ்வாமித்திரர் போன்றவர்களைக்கூட இந்த மாயை மயங்க வைத்திருக்கிறாள். அப்படி இருக்கும்போது, நான் எழுதிய இந்த ஸூத்திர விதி எப்படிப் பொருந்தாது போகும்?” என்றார் வியாசர்.

- சந்திரஹாரம் குஜராத்தி மொழி பக்திக் காவியம்.

தமிழில்: சிவஹரி அம்பாமயி.

வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தியாகராய நகர், சென்னை-17.

தொடர்புக்கு: 044-24334397, விலை: ரூ.200/-

நீங்களும் பங்கேற்கலாம்

உங்கள் பகுதியில் நடைபெறும் சமயத் திருவிழாக்கள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனந்த ஜோதி ஆன்மிக இணைப்பு குறித்த உங்கள் கருத்துகளையும் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். உங்கள் படைப்புகளையும் எண்ணங்களையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

கடிதத் தொடர்புக்கு: தி இந்து, கஸ்தூரி மையம், எண்.124,

வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: anandhajothi@thehindutamil.co.in

SCROLL FOR NEXT