ஆன்மிகம்

யாரோ, இவர் யாரோ, என்ன பேரோ

என்.ராஜேஸ்வரி

மும்மூர்த்திகள் என்பதற்கு கர்னாடக இசையில் முக்கிய இடமொன்று உண்டு. இவ்வகையில் தமிழ் கீர்த்தனைகளுக்கு என்றே உள்ள மும்மூர்த்திகள் அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்துத் தாண்டவர் ஆகியோர் ஆவர்.

இதில் ராமாயண நிகழ்ச்சிகளை கொண்டு தனிப்பாடல்கள் அமைத்தவர் அருணாச்சலக் கவிராயர். இவர் தனது ராம நாடகத்தை, ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார். இப்பாடல்கள் வாய்ப்பாட்டாக கேட்பதற்கு மட்டுமல்ல, பரதத்தில் அபிநயம் பிடிக்கவும் சிறந்த இடமளிக்கிறது.

அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ‘யாரோ இவர் யாரோ என்ன பேரோ’ என்று தொடங்கும் கீர்த்தனை. ராமனோ விஷ்ணுவின் அவதாரம். சீதையும் அந்த மகாலஷ்மி அவதாரம். இவர்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் பிறந்து வளர்ந்தார்கள். பதின்பருவத்தில் மிதிலையில் கன்னி மாடத்தில் சீதை இருக்க, மிதிலைத் சாலையில் ராமன் நடந்து வருகிறான். அப்போது அவளும் நோக்க அண்ணலும் நோக்குகிறார்.

அபூர்வ கணத்தைப் படம்பிடித்தவர்

இந்த அபூர்வ கணத்தை அருணாசல கவிராயர் தம் கவிதையில் படம் பிடிக்கிறார். `அந்த நாளின் சொந்தம் போல` என்று எழுதுகிறார். ஒவ்வொரு பிறவியிலும் என்னுடன் இருந்த சகியே என்று ராமனின் மனம் கசிந்ததை `உருகினார்` என்ற பதத்தைப் போட்டு கேட்பவர்களை உருக்கிவிட்டார் அருணாசல கவிராயர்.

பாடல்களை இயற்றிப் பாடியதற்காகத் தமது காலத்திலேயே பெரும்புகழ் பெற்றிருந்தார் கவிராயர். இந்தப் பாடலை புகழ் உச்சிக்கே கொண்டு சென்றவர் எம்.எஸ்.சுப்புலஷ்மி. ‘ஏன் பள்ளி கொண்டீர் ஐயா’ பாடலை சுதா ரகுநாதனும், ‘கண்டேன் கண்டேன்’ பாடலை செளம்யாவும், ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே பாடலை நித்யஸ்ரீயும், எப்படி மனம் துணிந்ததோ சுவாமியை பாம்பே ஜெயஸ்ரீயும் பாடக் கேட்டால் ஆனந்தம்.

ஆன்மிகத்தில் வீர ரசம்

வீரமான விடுதலைப் பாடல்கள் என்றால் அதற்கு பாரதியாரைக் குறிப்பிடுவார்கள். வீர உணர்ச்சியைத் தூண்டும் பாடல்கள் இயற்றுவதில் அருணாசல கவிராயர் குறிப்பிடத் தக்க சாகித்திய கர்த்தா. ஆன்மிக நிகழ்ச்சிகளை பாடலாக்கி அதை வீர ரசம் சொட்டச் சொட்ட இசை அமைத்து பாடுவதில் வல்லவர். இந்த வகையில் அவரது வீர தீரத்தை பறைசாற்றியதில் வரலாற்று நிகழ்ச்சிக்குப் பெரும்பங்கு உண்டு.

அப்போது தஞ்சைக் கோட்டையை நவாப்பின் படை கள் முற்றுகையிட்டுவிட்டன. தஞ்சை வீரர்களோ மன எழுச்சியின்றி முடங்கிப் போய்விட்டனர். இவர்களை எழுச்சியுறச் செய்ய, வீர தீ்ரமான கதையும், பாடலும் தேவையாக இருந்தது. இதனை வெளிப்படுத்தக் கூடிய வளமான கம்பீரமான குரலும் இருக்க வேண்டும்.

இவை அனைத்தையும் ஒருங்கே கொண்ட அருணாசாலக் கவிராயரிடம் பிரச்சினையினை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். அவரும் ராமாயணத்தில் ராமனின் தூதனாகச் சென்ற அனுமனின் வீரத்தையும், ராமனிடம் கொண்ட பக்தியால் பெற்ற சமயோஜித புத்தியையும் எடுத்துக் கூற முடிவு செய்தாராம்.

ராமாயணத்தில் அனுமன் இலங்கைக்குச் சென்ற இடத்திலிருந்து தொடங்குவது போல ‘அனுமன் விஜயம்’ என்ற தலைப்பை எடுத்துக் கொண்டார். பேச்சும், பாட்டுமாக ஹரிகதை பாணியில், அனுமனுக்கும் ராவணனுக்கும் நடக்கும் சந்திப்பை விளக்கத் தொடங்கினார்.

கதைநடுவில் தெள்ளிய தமிழில், வீர உணர்ச்சிக்கு என்று அமைந்த அடானா ராகத்தில் அந்த ராவணனைக் கண்டு ‘சும்மா போனால், என்ன அனுமன் நானே என்று’ பாடி தோல்வியுற்று திரும்பிச் சென்றால் அவமானம் ஏற்பட்டுவிடும் என்பதை வீரர்களுக்குச் நேரிடையாகச் சொல்லாமல் மறைமுகமாகப் பாடலில் உணர்த்தினார்.

இதனைக் கேட்டு நெஞ்சை நிமிர்த்தினர் வீரர்கள். இதனை தக்க சமயமாகக் கொண்டு, ‘அடிக்காமலும், கைகளை ஒடிக்காமலும், நெஞ்சிலே

இடிக்காமலும், என் கோபம் முடிக்காமலும் போவேனோ?’ என்று பாடி நிறுத்தியபோது, வீரர்கள் ஆரவாரக் கூச்சல் எழுப்பினார்களாம். பின்னர் பாய்ந்தானே அனுமான் என்று படை முழங்கிக் கொண்டு சென்று, வெற்றி பெற்றது தனிக்கதை.

அறுவகை உணர்வுகளை பாடல்களில் மிளிரச் செய்தவர் அருணாசலக் கவிராயர்.

SCROLL FOR NEXT