ஆன்மிகம்

தலை சுற்றவைத்த பல்லவி

பாலா

மிகவும் குறைந்த வயதில் அகாடமியின் பிரதான நேரத்தில் பாடும் கலைஞர்களெனப் பதவி உயர்வு பெற்ற இளைஞர்களில் கே.காயத்ரியும் ஒருவர். இளம் கலைஞர்கள் மதியம் நடைபெறும் இரண்டு இலவச நிகழ்ச்சிகளில் தங்களின் முத்திரையைப் பதித்த பின்புதான் மாலை மற்றும் இரவு நேர கச்சேரிகளுக்கான வாய்ப்பு கிடைக்கும்.

இவற்றுக்கு அனுமதிக் கட்டணம் உண்டு. ஆனால் இலவச நிகழ்ச்சியில் இவர்களின் கச்சேரிகளின்போது அரங்கமே நிரம்பிவழியும். கட்டண நிகழ்ச்சிக்கு மாறிய பிறகு, இவர்களுக்கு வரும் கூட்டம் வெகுவாகக் குறைந்துவிடும் அவல நிலை காணப்படுகிறது.

சென்ற வருடம் சிறந்த பல்லவியைப் பாடிப் பரிசும் பெற்றார் காயத்ரி. மூத்த இசைக் கலைஞர் சுகுணா புருஷோத்தமனிடம் இசை பயிலும் இவர், குருவைப் போல லயத்தில் புலி. இனிமையான குரல் வளமும் உண்டு. நன்றாக வாயைத் திறந்தும் பாடுவார். தேவைக்கேற்ப நெளிவு சுளிவுகளுக்கேற்பக் குரலை அடக்கியும் பாடத் தெரிந்தவர். அன்று அவர் பாடிய பைரவி சம்பிரதாயத்தில் தோய்ந்து அளிக்கப்பட்ட ஒரு குலாப்ஜாமுன்.

பட்ணம் சுப்ரமணிய ஐயரின் `நீ பாதமுலே’ க்ருதியை விச்ராந்தியாகப் பாடி, ஸ்வரக் கல்பனைகளைக் கலந்தளித்துத் தனி ஆவர்த்தனத்திற்கு வழிவகுத்தார். இளம் கலைஞர் பா.சிவராமன், மிருதங்க வித்வான் டி.கே.மூர்த்தியின் சீடர். முதல் சுற்றிலேயே மூன்று கால பிரமாணங்களில் நடைக் கலைவைகளைக் கொடுத்து அசத்தினார். கடம் வாசித்த உடுப்பி பாலகிருஷ்ணன் நன்றாக ஈடுகொடுத்தார்.

பிறகு வாசஸ்பதி ராகத்தை அலசி ஆராய்ந்தார். பத்மா சங்கர் வயலினில் நன்றாக ஈடு கொடுத்தாலும், அவர் வயலினில் பொருத்திய `பிக்-அப்’ மற்ற சப்தங்களையும் பெரிதாக எடுத்துக்காட்டியது. அகாடமியின் ஒலி அமைப்பு சிறப்பான ஒன்றாக இருக்கும்போது, இந்த `பிக்-அப்’ போன்ற விஷயங்களை அவர்களே அனுமதிக்கக் கூடாது.

பல்லவியை ஆரம்பிக்கும் முன் அதைப் பற்றி விளக்கமும் அளித்தார். தலை சுற்றியது. ஒரு கையில் மிஸ்ர ஜம்பை சதுஸ்ர நடை. இன்னொரு கையில் திஸ்ர மட்யம் கண்டநடை. இரண்டுக்கும் தலா 40 மாத்திரைகள். ஜம்ப தாளத்தில் எடுப்பு முக்கால் அட்சரத்தில் வீச்சில் எடுப்பு. மட்யத்தில் கடைசி லகுவில் ஒன்று தள்ளி எடுப்பு. என்ன உங்களுக்கும் தலை சுற்றுகிறதா?

ஆனால் எந்தவித பாதிப்பும் இன்றி, ஏதோ கடையோரத்தில் நின்று காபி குடிப்பது போல், காயத்ரி பல்லவியைப் பாடி முடித்தபோது, ரசிகர்களில் பலர் ஏதோ அவர்களே எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுவிட்டது போல், பெருமூச்சு விட்டனர். கடந்த பல வருடங்களில் இத்தனை கஷ்டமான பல்லவியை அதுவும் இரண்டு கைகளையும் ஒருங்கிணைத்துப் பாடியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த முயற்சி வெற்றிபெற, காயத்ரி முழுவதும் அதே சிந்தனையாக உழைத்திருக்க வேண்டும். பக்கவாத்தியக் கலைஞர்களும் நன்கு ஒத்துழைத்தனர்.

இளைய வித்வாம்சினியான காயத்ரி, ரசிகர்களைத் தன்பால் அழைத்து இன்னும் நீண்ட நாள் நிலைத்திருக்க வேண்டுமெனில், இதுபோன்ற சோதனைகளைக் கருத்தரங்குகளில் அரங்கேற்றுவது நல்லது. கச்சேரிகளில் அத்தி பூத்தாற்போல் எப்பொழுதாவது செய்யலாம்.

SCROLL FOR NEXT