காவிரி, தாமிரபரணி நதிக்கரையைச் சேர்ந்த ஊர்கள் இசைத் துறைக்கு அளித்துள்ள பங்களிப்புக்கு ஈடாக இல்லாவிட்டாலும், தமிழகத்தின் பழம்பெரும் நதியான பஃறுளி ஆறு என்ற பழையாறு பாயும் கன்னியாகுமரி மாவட்டம் கலைத் துறைக்கு செய்த பங்களிப்பு மிகப் பெரியது.
நாடகத் துறையில் முதலிலும் பின்னர் திரைத் துறையிலும் முத்திரைப் பதித்த அவ்வை டி.கே. சண்முகம் மற்றும் அவரது சகோதரர்கள், என்.எஸ். கிருஷ்ணன், கிருஷ்ணன்கோயில் மகாதேவன் என்ற திரை இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் என தன்னிகரற்ற கலைஞர்கள் பலர் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தென்திருவிதாங்கூரின் ஒரு பகுதியாக இருப்பினும், தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் குமரி மாவட்டத் தமிழர்கள் விடாமல் தூக்கிப் பிடித்து வந்துள்ளனர்.
நாகர்கோயிலில் உள்ள வடவீஸ்வரம் கிராமத்தில் பிறந்த நீலகண்ட சிவம், பத்மநாபபுரத்தில் வசித்தார். அந்த ஊர் கோயிலில் உள்ள சுவாமியின் மீது பக்தி கொண்டிருந்த அவர், தன்னுடைய இயற்பெயரான `சுப்பிரமணியம்’ என்பதை `நீலகண்டதாசன்’ என்று மாற்றிக் கொண்டார். தமிழில் நூற்றுக்கணக்கான கீர்த்தனைகளை எழுதியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் அவர் நடத்திய பஜனைகளில் கலந்து கொண்டிருப்ப தாக பாபநாசம் சிவன் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். முகாரி ராகத்தில் அவர் இயற்றிய `என்றைக்கு சிவகிருபை’ வருமோ என்ற பாடல் மிகவும் உருக்கமானது. எம்.கே. தியாகராஜபாகவதரால் பாடிப் பிரபலப்படுத்தப்பட்ட `ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்’ பாடலும் நீலகண்ட சிவனின் கீர்த்தனையே.
கோயில் திருவிழாக்களில் கர்னாடக இசை
ஒருகாலத்தில் இந்த மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம், பூதப்பாண்டி, நாகராஜாகோயில், வடிவீஸ்வரம், பறக்கை ஆகிய கிராமங்களில் உள்ள கோயில்களில் திருவிழாக் காலங்களில் நடந்த கர்னாடக இசை அரங்குகள் மக்களை ஈர்ப்பதில் முக்கியப் பங்காற்றின. தமிழகத்தில் பெரும்புகழ் பெற்றிருந்த எல்லா இசைக் கலைஞர்களுமே இக்கோயில்களில் இசைக் கச்சேரி நடத்தியிருக்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, இந்த மாவட்டத்தில் இருந்தும் சிறந்த இசைவாணர்கள் உருவாகி, தமிழகமெங்கும் புகழ் பெற்றிருந்தனர். நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி மிகவும் மூத்தவர் என்று கருதப்படுபவர் நாகர்கோயிலைச் சேர்ந்த ஸ்தாணு பாகவதர். வாய்ப்பாட்டுடன் கதாகாலட்சேபமும் செய்து வந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த இவருடைய கச்சேரியை 1941-ம் ஆண்டில் வெளிவந்த இதழில் இப்படி விவரிக்கிறார் கல்கி:
“நாகர்கோயில் ஸ்தாணு பாகவதர் கச்சேரி அப்போது நடந்து கொண்டிருந்தது. பழைய காலத்து மனிதர்; பழையகாலத்துப் பாட்டு. இந்தத் தள்ளாத வயதிலும் பாட்டில் ஜீவகளை ததும்பிற்று. ஒவ்வொரு சமயம் பாட்டில் புதிய அடியை ஆரம்பிக்கும் போது ஆலால மரத்தடியில் வீற்றிருக்கும் தஷிணாமூர்த்தி ஸ்வரூபமாக விளங்கினார்.”
1930-களின் தொடக்கத்தில் சென்னையில் உள்ள பல இசை அரங்குகளில், குறிப்பாக சென்னை சங்கீத வித்வத் சபை என்ற மியூசிக் அகாதெமியில் ஸ்தாணு பாகவதரின் கதாகாலட்சேபங்கள் நடந்துள்ளன. கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றிய ஸ்தாணு பாகவதர் இசையின் மீதிருந்த ஈடுபாட்டின் காரணமாக அப்பணியை விட்டு, முழு நேரமாக இசைப் பணியாற்றியதாக 1946-ல் வெளிவந்த `ஹனுமான்’ என்ற பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
ஸ்தாணு பாகவதரின் இரண்டு மகன்களான கணேச ஐயரும் ஹரிகர ஐயரும் 1930-களின் பிற்பகுதில் ஆரம்பித்து தொடர்ந்து இசை உலகில் கோலோச்சி வந்திருக்கிறார்கள். கணேச ஐயர் மிருதங்க வித்வான். ஹரிகர ஐயர் வாய்ப்பாட்டுடன் வயலின் கச்சேரியும் செய்து வந்திருக்கிறார்.
சென்னையில் தடம்பதித்த குமரிக் கலைஞர்கள்
மியூசிக் அகாதெமியின் பழைய நிகழ்ச்சி நிரல்களில் இச் சகோதரர்களின் பெயர்கள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. 1935-ஆம் ஆண்டு மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் பாட்டுக்கு கணேச ஐயர்தான் மிருதங்கம்.
“இன்று இசைத் தட்டுகளாகக் கிடைக்கும் விஸ்வநாத ஐயரின் கச்சேரிகள் பெரும் பான்மையானவற்றுக்கு என்னுடைய தந்தையாரும் பெரியப்பாவும்தான் வாசித்திருக் கிறார்கள்” என்கிறார் ஹரிகர ஐயரின் மகனான வயலின் வித்வான் விஸ்வநாத ஐயர். சென்னை வாசியான அவர் கடந்த ஆண்டு முதல் பெங்களூர்வாசியாகி விட்டார்.
மியூசிக் அகாதெமியில் ஜி.என். பாலசுப்பிரமணியத்தின் முதல் கச்சேரிக்கும் கணேச ஐயரே வாசித்திருக்கிறார். 1939-ஆம் ஆண்டு டி.கே. பட்டம்மாளுக்கு வயலின் வாசித்த ஹரிகர ஐயர் வாய்ப்பாட்டும் பாடியிருக்கிறார். இவருடைய வாய்ப் பாட்டுக்கு திருவாலங்காடு சுந்தரேசய்யர் வயலின் வாசித்திருப்பதை அக்காலப் பத்திரிகைகள் சிலாகித்து எழுதியுள்ளன.
1948-ம் ஆண்டு வெள்ளிமணியில் வெளியான இசை விமர்சனம் ஹரிகர ஐயரின் பாட்டை இப்படி விவரிக்கிறது:
“ஆபோகி வர்ணத்தில் ஆரம்பித்த கச்சேரி கடைசிவரை விறுவிறுப்பாகவே இருந்தது. அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் சாரீரத்தில் காண்கின்ற ரீங்கார நாதம் இவர் சாரீரத்தில் அமைந்துள்ளது. ஸ்வரம் பாடும் முறையும் இராகங்களை கர்நாடக சுத்தமாகப் பாடும் முறையும் கச்சேரியைச் சிறப்படைய செய்கிறது என்பதை பாடகர் நன்றாக உணர்ந்திருக்கிறார்.”
கணேச அய்யரைப் பொறுத்தவரை, முடிகொண்டான் வெங்கட்ராமய்யர், முசிறி சுப்பிரமணியய்யர், ஆலத்தூர் சகோதரர்கள், ஜி.என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர் என்று அவர் காலத்தில் இருந்த பெரும் இசைக்கலைஞர்களுக்கு வாசித்திருக்கிறார்.
பழனி சுப்பிரமணியபிள்ளையும் பாலக்காட்டு மணி ஐயரும் ஒரு பாடகருக்கு வாசிக்கிறார்கள் என்றால், அந்த டிசம்பர் இசை விழாவில் கணேச ஐயரும் அவர்களுக்கு இணையாகப் பெரும் கலைஞர்களுக்கு வாசித்திருக்கிறார் என்பதை மியூசிக் அகாதமெயின் நிகழ்ச்சி நிரல்கள் தெரிவிக்கின்றன.
நாகர்கோயிலைச் சேர்ந்த இன்னொரு முக்கியமான இசைக்கலைஞர் மிருதங்க வித்வானான எஸ். தாணு ஐயர். கணிதத்தில் பெரிய நிபுணரான இவர் நாகர்கோயில் எஸ்.எல்.பி. பள்ளிக்கூடத்தில் படிக்கையில் மாநில அளவில் முதலிடம் பெற்றிருக்கிறார்.
“இரயில்வேயில் தொடக்கத்தில் பணியாற்றிய அவர், கச்சேரிகளுக்குச் செல்வதற்கு வசதியாக இல்லை என்பதால் அந்த வேலையை விட்டுவிட்டார். தொடர்ந்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே மிருதங்கமும் வாசித்திருக்கிறார்” என்கிறார் அவருடைய மகளான உமா இராமச்சந்திரன்.
தொடக்கத்தில் பூதப்பாண்டி அருணாசல அண்ணாவியிடம் பயின்ற தாணு ஐயர், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மைலாட்டூர் வி. சாமி ஐயரிடம் பயின்று சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார்.
பல்கலைக்கழகத்தில் பயிலும்போதே டி.கே. ரங்காச்சாரி, மைலம் வஜ்ரவேலு முதலியார், திருப்பாம்புரம் சுவாமிநாதபிள்ளை ஆகியோருக்கு வாசித்திருக்கிறார்.
ஒருமுறை சிதம்பரம் அருகே ஒரு கிராமத்தில் நாகசுர வித்வான் டி.என். இராஜரத்தினம் பிள்ளையின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. அன்று அவருக்கு தவில் வாசிக்க வேண்டிய நாச்சியார்கோயில் இராகவபிள்ளை கச்சேரிக்கு வரத் தாமதமானதால், தாணு ஐயரின் மிருதங்கத்தை வைத்தே கச்சேரியை இராஜரத்தினம் பிள்ளை முடித்துவிட்டார். இத்தகவல் `கல்கி’ இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், பறக்கையில் கச்சேரி செய்யும்போது மிருதங்கத்தின் ஒரு பக்கம் தளர்ந்து போனதால், உள்ளூர் பஜனை மடத்தில் இருந்த மிருதங்கத்தை எடுத்துக்கொண்டு, இரண்டு மிருதங்கத்தையும் தபேலா போல் வாசித்தார் என்ற தகவலும் `கல்கி’ இதழில் காணப்படுகிறது. எம்.கே. தியாகராஜபாகவதர் கச்சேரி செய்யும் போதெல்லாம் தாணு ஐயரே மிருதங்கம்.
திரையிலும் முத்திரை பதித்த குமரி
இவர்கள் ஒருபுறம் இருக்க கே.வி. மகாதேவன் திரையுலகில் செய்த சாதனை மகத்தானது. இவரும் அருணாசல அண்ணாவியிடம்தான் இசைப் பயின்றார். அருணாசல அண்ணாவி ஒரு இசை அறிஞர். பாடுவார்; மிருதங்கம் வாசிப்பார். அத்துடன் தமிழிலும் மிகச் சிறந்த அறிஞர்.
அருணாசல அண்ணாவியின் மகன் பி.ஏ. சிதம்பரநாதன் வயலின் கலைஞர். கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளையின் மாணவரான அவர், பிற்காலத்தில் எம்.எம். தண்டபாணி தேசிகர் போன்றவர்களுக்கு வயலின் வாசித்திருக்கிறார்.
பின்னர் திரை உலகில் நுழைந்து, மலையாளத் திரைப்பட உலகில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாள ராகத் திகழ்ந்தார். அத்துடன் பல மலையாள பக்திப் பாடல்களுக்கும் இசையமைத்தார். `கங்கையாறு பிறக்கும்’ என்ற பாடல் ஜேசு தாசின் குரலில் இன்றும் மனத்தை மயக்குகிறது.
கன்னியாகுமரி சுடலையாண்டிக் கம்பர், பறக்கை இராகவய்யர் போன்றோர் குடத்திலிட்ட விளக்காய் இருந்து மறைந்தனர். தவில் கலைஞர் வலையப்பட்டி சுப்பிரமணியம் சுடலையாண்டிக் கம்பரின் குழுவில்தான் தொடக்கத்தில் வாசித்தார் என்பது அவருடைய தகுதிக்கு சான்று. இராகவய்யர் இரண்டு கீர்த்தனைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.