ஆன்மிகம்

அருகர்களின் ஆறு திருமேனிகள்

விஜி சக்கரவர்த்தி

மதுரை மாநகருக்கருகில் உள்ள எண்பெருங்குன்றுகள் சமண சமயத்தைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும். அப்படிப்பட்ட மலைகளில் ஒன்றுதான் கீழவளவு மலையாகும். இது மதுரைக்கு அருகே மேலூர் திருப்பத்தூர் சாலையில் உள்ளது.

இம்மலை மீதேற பாறைகளில் செதுக்கிய படிகள் உள்ளன. மேலே சென்றால் ஒரு இயற்கையான குகை உள்ளது. அங்கு நம் பண்டைய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் பறைசாற்றும் சமண மாமுனிவர்களின் கற்படுக்கைகள் காணப்படுகின்றன.

குகையில் உள்ள கல்வெட்டு

அங்கு ஒரு இயற்கையான சுனை உள்ளது. சுனை நீர் படுக்கைகளை ஈரமாக்காதவாறு செல்ல சிறிய வடிகால் ஓரமாகச் செதுக்கப்பட்டுள்ளது. குகையில் பலர் தங்குமளவு இடமுள்ளது. குகையின் மேற்பகுதியில் “உபசன் தொண்டு இலவோன்கொடுபலி” எனத் தமிழ் பிராமி கல்வெட்டு உள்ளது.

அதாவது, உபாசிப்பவன் அல்லது உபவாசம் நோன்பு இருக்கும் இல்லறத்தான், பண்டைய பாண்டிநாட்டின் துறைமுகமான தொண்டியைச் சேர்ந்த இலவோன் செய்து கொடுத்தது என்பதாகும். குகையின் மேல் உயரமான இடத்தில் மூன்றுலகுக்கும் அறம் பகன்ற மூன்று தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் பத்மாசனத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் கீழே வட்டெழுத்துத் தமிழில் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளே தமிழ் செம்மொழியென்பதற்கு நடுவண் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளில் அடங்கியவை ஆகும்.

ஆறு திருமேனிகள்

படுக்கைகளின் இடதுப்புறம் சென்றால் உயிர், உயிரற்றவை, தர்மம், அதர்மம், ஆகாயம், காலம் ஆகியவற்றை விளக்கிய அருகர்களின் ஆறு திருமேனிகள் காணப்படுகின்றன. ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன.இவை கி.பி.9,10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.

இவ்விடம் வழிபாட்டுத்தலமாகவும் திகழ்ந்துள்ளது. நந்தா விளக்குக்காக நெய் வேண்டி ஐம்பது ஆடுகளும், நைவேத்திய பூசைக்காக மூன்றுநாழி அரிசியும் தானமாக வழங்கப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது.இத்தானத்தை சங்கரன் ஸ்ரீ வல்லபன் செய்ததாகச் சிற்பத்தின் கீழேயுள்ள கல்வெட்டுத் தெரிவிக்கிறது.

இம்மலை வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு இந்திய தொல்பொருள்துறையிடம் இருக்கிறது. இருப்பினும் இம்மலைக்குல் கல்குவாரிகளால் ஆபத்துள்ளது.

SCROLL FOR NEXT