ஆன்மிகம்

மூன்று முழம் நிலம்

இக்வான் அமீர்

பாக்தாத்தின் புகழ்பெற்ற இறைஞானி பஹ்லூல் அடிக்கடி ‘கபர்ஸ்தான்’ எனப்படும் இடுகாடு சென்று சமாதிகளைத் தரிசிப்பார். மரணத்தை நினைவுப்படுத்துவதாலும், நிலையாமையை மனதில் பசுமையாக்கி வைப்பதாலும் அவர் அப்படி செய்துவந்தார்.

மண்ணறைகளைத் தரிசிக்கும்போது பஹ்லூல், “இங்கிருப்போர் எவ்வளவு நல்லவர்கள்! புறம்பேசாத உத்தமர்கள்!” என்று சிலாகித்துக் கூறுவார்.

வழக்கம் போல அன்றும் பஹ்லூல் கபர்ஸ்தானுக்குச் சென்றார். அவரது கையில் ஒரு நீண்ட கைத்தடி இருந்தது. சிதறி கிடந்த மண்டை ஓடுகளை அந்தத் தடியால் புரட்டிப் புரட்டி பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த வழியே, ஜனாதிபதி ஹாருன் ரஷீத் சென்றார். பஹ்லூலின் செயல் அவருக்கு வியப்பூட்டியது. அருகே சென்றவர் முகமன் கூறிவிட்டு “பஹ்லூல்! இந்த மண்டை ஓடுகளோடு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று விசாரித்தார்.

“பெரிதாக ஒன்றுமில்லை ஜனாதிபதி அவர்களே! இந்த மண்டை ஓடுகளில் ஆண்டிகள் மற்றும் அரசர்களின் மண்டை ஓடுகளை இனம் பிரிக்க முயன்று கொண்டிருக்கிறேன். என்னால் முடியவில்லை. எல்லாம் ஒன்றுபோலவே இருக்கின்றன.” என்றார் பளிச்சென்று.

ஒரு கணம் திகைத்து நின்ற ஹாருன் ரஷீத், “சரி.. இந்த கைத்தடி எதற்காக?” என்று திரும்பவும் கேட்டார்.

“ கைத்தடியால் நிலத்தை அளந்து கொண்டிருக்கின்றேன்!” என்றார்.

“என்ன நிலத்தை அளக்கிறீர்களா?” என்று வியப்பு மேலிட ஹாருன் ரஷீத் கேட்க, “ஆம். ஜனாதிபதி அவர்களே! ஏழ்மையும், தரித்திரமும் கொண்ட எனக்கும் மூன்று முழம் நிலம்தான்! செல்வமும், செல்வாக்கும் கொண்ட ஆட்சியாளரான உங்களைப் போன்றவர்களுக்கும் அதே மூன்று முழம் நிலம்தான். என்ன ஆச்சரியம்” என்றவாறே அங்கிருந்து சென்றுவிட்டார்.

SCROLL FOR NEXT