ஆன்மிகம்

இயந்திரமயமாகும் மனிதம்

சாளை பஷீர்

“உன் சகோதரரைப் புன்னகையுடன் எதிர்கொள்வதும் ஒரு அறச்செயலாகும். கனிவு சொட்டும் எந்த ஒரு சொல்லும் அறச்செயலாகும் . ஒரு இறையடியார் மற்றொரு இறையடியாரின் சகோதரர் ஆவார். அவரை ஆதரவின்றி விட்டு விடமாட்டார். எவர் தன் சகோதரரின் தேவையை நிறைவு செய்கின்றாரோ அவரது தேவையை இறைவன் நிறைவு செய்கின்றான். எவர் ஒரு இறையடியாரின் துன்பத்தை நீக்குகின்றாரோ மறுமை நாளில் இறைவன் அவருடைய துன்பத்தை நீக்குவான்.”

-முஹம்மது நபி

முகநூலில் ஒரு நண்பரின் சமீபத்திய பதிவு இது.

“ நான் என்னுடைய ஊர்தியில் சென்று கொண்டிருக்கும்போது என் நண்பர் தெரு முனையில் நின்றுகொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்துக் கையசைத்தார். நானும் திரும்பக் கையசைத்து விட்டு என் வழியே சென்று விட்டேன். அந்த இரவில் அவர் காலமாகிவிட்டதாகச் செய்தி கிடைத்தது. அவர் கையசைத்தபோது வண்டியை நிறுத்தி இரண்டு சொற்கள் பேசாமல் போய்விட்டோமே என்ற நினைப்பு என் நெஞ்சை உறுத்துகின்றது.’’

நம் வாழ்வில் இது போல எத்தனை கையசைப்புகள், புன்னகைகள், நலம் விசாரிப்புகள், ஆறுதல் சொற்கள் நம்மை விட்டுக் கை நழுவி போயிருக்கும் ?

இயந்திரமயமாகி விட்ட வாழ்க்கை முறையில் ஒவ்வொரு மனிதரும் முடுக்கி விடப்பட்ட பொம்மையாக மாறிப்போயிருக்கிறோம். வாரத்தின் இறுதி நாட்களில்தான் குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடிகிறது. நோயாளிகள் மருத்துவத் தாதியரின் தயவிலும் மூத்த குடிமக்கள் தனிமையின் பிடிக்குள்ளும் தள்ளப்படுகின்றனர்

ஆனால் இந்த இயந்திர மிடுக்கு மனிதர்கள் அனைவருக்குமே ஐபாட் , டேப் எனப்படும் பல வகையான செல்பேசிகளுடனும் கணினித் திரையின் முன்னரும் சமூக வலை தளங்களுடனும் செலவழிக்க நேரம் நிறையவே இருக்கின்றது. நிஜ மனிதர்களை முகத்துக்கு நேராகப் பார்க்கும் தருணங்கள் அருகிப்போய் மின்னியல் சாதனங்களும் அவைகள் உண்டாக்கியிருக்கும் மெய் நிகர் வெளியில் திரியும் அரூப தொடர்புகளும்தான் மனிதர்களின் உற்ற நண்பர்களாக மாறியிருக்கின்றன.

தொழில் நுட்ப வளர்ச்சியின் பயன்பாட்டிற்கும் ஒரு எல்லை உண்டு. அது மனித வாழ்வின் உணர்வு வெளிகளையும் அந்தரங்க வேளைகளையும் ஆக்கிரமிக்கும்போது, மனிதர்கள் இயந்திரங்களாகவும் இயந்திரங்கள் மனிதர்களாகவும் மாறுகின்ற அவலம் நடக்கின்றது. இதன் விளைவாக விதம் விதமான மன நெருக்கடிகள் முளை விடுகின்றன. மின்னியல் சாதனங்களும் இணைய உலகும் உண்டாக்கும் வெறுமையை மதுவும் தற்கொலையும் வேகமாக வந்து நிரப்புகின்றன.

நாம் வாழ்ந்திருக்கும் இந்த கணம் மட்டுமே நம் கையில் உள்ளது. அடுத்த நொடியைப் பற்றிய உத்தரவாதமில்லை என்னும்போது நாம் சந்திக்கும் ஒவ்வொரு ஆளும் உறவும் முக்கியமானவர்களாக ஆகி விடுவர். நாம் எந்த மனித உறவுகளையும் வெறுக்கவும் நிராகரிக்கவும் மாட்டோம். ஏனென்றால் கண்ணீரும் முகமலர்ச்சியும் புன்னகையும் கனிவும் பரிவும் மனித முகத்தில் மட்டுமே பூக்கும் மலர்களாகும்.

SCROLL FOR NEXT