நம் உடலில் இருக்கும் உயிராகிய பரம்பொருளே உடல் முழுவதும் வியாபித்திருக்கிறது. நம் உச்சி முதல் உள்ளங்கால்வரை உயிர் ஆற்றல் நிறைந்து உடல் செயல்படுத்தப்படுகிறது.
உடல் முழுவதும் உயிர் பரவி இருப்பதைப் போல சிவலிங்கத் திருமேனியும் எட்டுத் திசைகளில் வியாபித்திருக்கிற அருட்கதையை இங்கே காண்போம். திருநெல்வேலி மாவட்டத்தில் நவகயிலாயங்கள் அமைந்து நவக்கிரஹ தோஷங்களைப் போக்கும் தலங்களாக விளங்குகின்றன. நவதிருப்பதிகளும் அதே வரிசையில் நலம் கூட்டும வைணவ திவ்ய தேசங்களாக விளங்குகின்றன.
அதைப் போலவே, தருமமிகு சென்னை என்று திருவருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளால் போற்றப்பட்ட சென்னை மாநகரத்தின் தென்பாகத்தில் திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருவேற்காடு தலத்தில் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் சிவாயத்தைச் சுற்றிலும் எட்டு திசைகளிலும் எண் கயிலாயத் தலங்களாகப் புராண காலத்தின் பெருமைகளைக் கூறும்படி அமைந்திருக்கின்றன.
வேதங்களே வேல மரங்களாய்
திருவேற்காடு என்ற பெயர் வரக் காரணமாக இருந்த வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் இறைவன் திருமணக் கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தர வேலமரங்களே வேதங்களாகச் சுற்றி நிற்பதால் இந்த புனிதபூமிக்கு முன்பு வேற்காடு எனப் பெயர் இருந்துவந்தது. ஒரு சமயம் அகத்திய மகாமுனிவர் இந்தத் தலம் வழியாகச் சென்றபோது இறைவனைப் பாடிவிட்டுப் புறப்படும் சமயம், இத்தலத்திலாவது தேவியுடன் காட்சிதர வேண்டும் என்று கேட்க, அவ்வாறே காட்சி தந்தோம் என்று உமையம்மையோடு தோன்றினார். வரலாற்று ஏடுகளில் சொன்னபடி சிவாலயத்தின் கருவறையின் இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.
பார்வதி கேட்ட கேள்வி
தவமுனிவர்களுக்கும், மகரிஷிகளுக்கும் மட்டும் கேட்ட உடனே காட்சி கொடுக்கும் சிவன் உலக ஜீவன்களுக்கு மட்டும் காட்சி அளிப்பதை தாமதப்படுத்த லாமா? என்று உமாதேவியார் கேட்டார். அதற்கு சிவபெருமான், “சொல்லுக்கு இலக்கணதாரியான அகத்தியனுக்கு ஒரு மேனியில் காட்சி தந்தோம். ஆனால் இந்தத் திருத்தலத்தில் நீயும் உன் மக்களும் உலகத்து ஆன்மாக்களும் ஆனந்தம் பெறும் பொருட்டு எமது சிவலிங்கத் திருமேனியை மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் எட்டு திசைகளிலும் காட்சி நிற்போம்” என்றார். உடனே தன்னுடைய ஞானக் கண்ணிலிருந்தும், அங்கங்களிலிருந்தும் எட்டு வகை லிங்கத் திருமேனிகளைச் சிதறும்படி விட்டார்.
எட்டு லிங்கங்கள்
அவையே, திருவள்ளூர் மாவட்ட எல்லையில் எண்திரசக் காவலர்களாக அஷ்டதிக் பாலகர்கள் போல அஷ்டதிக் கஜங்களாக எண்வகைத் திருமகள்களைப் போல ஐஸ்வர்யம் தரும் அஷ்ட லிங்கங்களாய் அமர்ந்துவிட்டன.
அநபாயச் சோழனின் அருட்பணி
தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த சோழ மன்னனாகிய அநபாயன் தென்திசையின் சிவனருட் செல்வராக அவதரித்த தெய்வச் சேக்கிழார் பெருமானுடன் ஒரு சமயத்தில் வேதபுரீஸ்வரரை வழிபட்டு சிவனருட் பணியையும் தொடங்கினான். இதற்கு அடையாளமாக வேதபுரீஸ்வரர் கருவறைக்குப் பின்னால் சோழ மன்னனையும் சேக்கிழாரையும் தெய்வச் சிலையாக வைத்திருப்பதை இன்றும் கண்டு தரிசிக்கலாம்.
காண்பவர் கண்கள் குளிர்ந்திட வும், நினைப்பவர் நெஞ்சங்களில் தீவினைகள் அகன்று நன்மைகள் பெருகவும், சிவபுண்ணிய பூமியில் கால் பதித்துவிட்டு அஷ்டலிங்கத் திருமேனிகளைத் தரிசிப்பவர்களுக்கு எட்டு ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் தரிசனத்தை முடித்துக்கொண்ட பின் மூன்று மணி நேரத்திற்குள் சுமார் 23 கி.மீ. தொலைவுக்குள் உள்ள சிவன் தலங்களைக் கண்டு வழிபட்டு விடலாம். ஒவ்வொரு ஆலயத்திலும் மூன்று நெய்தீபங்கள் ஏற்ற வேண்டும்.
எண் திசை லிங்கங்களைத் தரிசிக்கும் முறையை அடுத்த பகுதியில் தெரிந்துகொள்வோம்.
(அடுத்த வாரம் நிறைவுறும்)