ஒரு பெண்ணின் வாழ்க்கை எத்தகைய உன்னத நிலைகளை எட்ட முடியும் என்பதற்கு அன்னையின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். அன்னையின் வாழ்க்கையை ஆழ்ந்து சிந்திப்பது, உள்ளத்தைப் புனிதப்படுத்துவதற்கான ஆன்மிக வழி.
“சகோதரா, சக்தி இல்லாமல் உலகுக்கு முன்னேற்றம் கிடையாது. நம் நாடு அனைத்து நாடுகளிலும் கடைசியில் இருப்பது ஏன்? நம் நாட்டில் சக்தி அவமதிக்கப்படுவதுதான் காரணம். இந்தியாவில் அந்த மகா சக்தியை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்வதற்கே அன்னை தோன்றியுள்ளார். அவரை ஆதாரமாகக் கொண்டு மீண்டும் கார்க்கிகளும் மைத்ரேயிகளும் உலகில் தோன்றுவார்கள்” என்று விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்.
எளிய வாழ்வு
சொற்பொழிவுகள் ஆற்றுவது, நூல்கள் எழுதுவது என்று தன்னை முன்னிலைப்படுத்தியது அல்ல அன்னையின் வாழ்க்கை. யாரும் காணாத இரவு வேளையில் மெல்லெனப் பெய்து, மலர்களை மலரச் செய்வது போன்ற அற்புத வாழ்வு அது. நெருங்கிய சீடர்களில் பலரும் அன்னையின் முகத்தை ஏதோ ஓரிரு முறைதான் தரிசிக்க முடிந்திருக்கிறது. அந்த அளவுக்குத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் வாழ்ந்தவர் அவர்.
அன்னை ஸ்ரீசாரதா தேவி கொல்கத்தாவின் உள்ள ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் நாள் பிறந்தார். தந்தை ராமசந்திர முகர்ஜி, தாய் சியாமா சுந்தரி தேவி. கிராமத்து வாழ்க்கைகே உரிய இலக்கணப்படிதான் இவரது இளமைப் பருவம் கழிந்தது. மூத்த மகளாக இருந்ததால் இளைய குழந்தைகளைப் பராமரித்தல் மாடுகளைப் பேணுதல், வயலில் வேலை செய்யும் தந்தைக்கும் மற்றவர்களுக்கும் உணவு கொண்டு செல்லுதல் ஆகியவை இவரது தினசரி கடமைகள். பள்ளி சென்று பாடம் படித்ததில்லை. பின்னாளில் தன் சொந்த முயற்சியால் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார்.
குருவின் வழியில்
அன்னை ஐந்து வயதில் குருதேவரின் வாழ்க்கைத் துணைவியானார். அப்போது குருதேவருக்கு 23 வயது. ஆனால் அன்னை தன் 19-ம் வயதுக்குப் பிறகே குருதேவரின் அருகில் வாழ முடிந்தது. அந்த நாட்கள் அன்னை ஆனந்தத்தில் திளைத்த நாட்கள். குருதேவருக்குச் சேவை, அவருக்கும் அவரைக் காண வரும் பக்தர்களுக்கும் சமையல், கிடைக்கும் நேரத்தில் எல்லாம் ஜப தியானம் என்று தன் வாழ்க்கையை வரையறுத்துக் கொண்டார். 50 சதுர அடிக்கும் குறைவான ஒரு சிறிய அறையே அன்னையின் வசிக்கும் அறையாகவும் பொருட்கள் வைப்பதற்கும், சமையல் செய்வதற்கும், விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்கும் பயன்பட்டது.
அன்னையின் தந்தை காலமான பிறகு, குடும்ப பாரம் முழுவதும் அன்னையின் தாயிடம் விழுந்தது. அவரது சுமையைக் குறைப்பதற்காக ஜெயராம்பாடிக்குச் செல்லும்போதெல்லாம் நெல்லைக் குற்றியெடுக்க உதவுவார்.
அன்னையின் ஆசி
தட்சிணேசுவர நாட்களில்தான் குருதேவரின் கொள்கைகளைத் தன்மயமாக்கிக்கொண்டார். குருதேவரிடம் பெற்ற பயிற்சியாலும் ஆன்மிகச் சிந்தனையாலும் அன்னையிடம் பொதிந்து கிடந்த தாய்மைப் பண்பு வெளிப்பட்டது. குருதேவரால் ஆரம்பிக்கப்பட இருந்த இயக்கத்தின் பொறுப்பை ஏற்று நடத்தும் பக்குவம் வளர்ந்தது. ஆனால் அந்த அமைப்பு ஏற்படுவதற்குள் குருதேவர் மறைந்துவிட்டார். பிறகு அன்னை பிருந்தாவனத்துக்குப் புனித யாத்திரை மேற்கொண்டார்.
துறவியருக்கும் இல்லறத்தாருக்கும் மந்திர தீட்சை வழங்கி ஆன்மிக வழியைக் காட்டியதுடன் மற்றொரு முக்கியமான பொறுப்பையும் அன்னை ஏற்றுக்கொண்டார். உலகம் முழுவதும் பரந்து நிற்கும் ராமகிருஷ்ண இயக்கத்தின் சங்க ஜனனியாக அன்னை போற்றப்படுகிறார். சங்க ஜனனி என்றால் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் என்று
பொருள்.
“மகளே, யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வரவில்லையோ, இனி யாரெல்லாம் வரப் போகிறார்களோ, அந்த என் பிள்ளைகளுக்கெல்லாம் என் அன்பைத் தெரிவி. என் நல்லாசிகள் எப்போதும் அவர்களுக்கு உண்டு” - இதுவே அன்னை உலகிற்குத் தந்த கடைசி உபதேசம்.