ஆன்மிகம்

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே

செய்திப்பிரிவு

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே, ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்ற பாடலை பாரதியார் இயற்றினார். இப்பாடலின் வார்த்தைகளைத் தேனில் ஊற வைத்து, மென்மை மீதூறத் தன் இனிய குரலில் பாடியவர் டி.கே. பட்டம்மாள்.

ஆறு வயதில் தொடங்கிய இவரது இசைப் பயணத்தில் இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விபூஷண் பெற்றபோது இவருக்கு வயது எண்பது. டைகர் வரதாச்சாரியாரால் கான சரஸ்வதி என்று அழைக்கப்பட்ட இவருக்கு சங்கீத கலாநிதி என்ற விருதினை அளித்துக் கவுரவித்தது மியூசிக் அகாடமி.

தமிழ் மீது இருந்த தணியாத தாகம் இவரைப் பல தமிழ்ப் பாடல்களைச் சிறந்த உச்சரிப்புடன் பாட வைத்தது. பாரதியார் பாடல்கள் என்றால் பட்டம்மாள்தான் என்று ரசிகர்கள் குறிப்பிடுவது வழக்கம். தீராத விளையாட்டுப் பிள்ளை, வெற்றி எட்டுத் திக்கும் எட்ட, பாருக்குள்ளே நல்ல நாடு போன்ற, தற்போது எங்கும் பாடப்படும் பாடல்களின் ராக வடிவங்களை உருவாக்கியவர் தா.கி. அலமேலு என்ற டி.கே. பட்டம்மாள்.

ரசிகர்களுக்கு இசையைப் பரிமாறியதில் அவரது நேர்த்தி அபாரமானது. கனமான கீர்த்தனைகளைப் பாடிவிட்டு இறுதியில் காந்தி மகானைப் போற்றும் ‘சாந்தி நிலவ வேண்டும்’ பாடலை இவர் பாடும்பொழுது, அந்தப் பாடல் மென்மையான போர்வைபோல ரசிகர்கள் மீது படர்ந்து கூட்டம் முழுவதையும் அரவணைத்துவிடும்.

இவரது கச்சேரிகளை நேரடியாகக் கேட்டவர்கள் பாக்கியசாலிகள். அவர் இசை மேடைகளில் பவனி வந்ததுகூட அதிருஷ்டவசமானது என்றுதான் சொல்ல வேண்டும். ஆச்சாரம் மிகுந்த பிராமணக் குடும்பத்தில் நிறைந்த இசை ஞானம் கொண்ட அவரது அம்மாவிற்குக் கிடைக்காத அனுமதி அக்குலத்தில் பிறந்த இவருக்குக் கிடைத்தது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் பட்டம்மாள். குடும்பத்தினரால் அன்புடன் பட்டா என்று அழைக்கப்பட்ட இவர் ஆரம்ப காலங்களில் தன் தாயிடம் நேரடியாகக் கீர்த்தனைகள் கற்றார். தான் இசையின் ஆரம்பகாலப் பாடங்களைக் கற்கவில்லை என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அவரது குரலின் அருமையை அவரது ரசிகர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். கீர்த்தனையின் `பாவ’த்தை முழுமையாக உணர்ந்து வெகு கவனமான வெளிப்பாட்டைக் கொண்டுவருவார். அனைத்தையும் சீக்கிரமாக முடித்து விட வேண்டும் என்று கீர்த்தனைகளை விரட்டி முடிக்கும் வழக்கம் இவரிடம் கிடையாது. துரித காலத்தில் பாடும்பொழுதுகூட அதற்குரிய நேர்த்தியுடன் கீர்த்தனைகள் அமைந்திருக்கும்.

1947-ம் ஆண்டு இந்திய தேசம் விடுதலை அடைந்த அந்த நள்ளிரவில், ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று வானொலியில் வீரம் தொனிக்க ஓங்கி ஒலித்த தமிழ் குரலுக்குச் சொந்தக்காரர் இவர்.

SCROLL FOR NEXT