ஆன்மிகம்

சேலத்தில் ஒரு சபரிமலை

வி.சீனிவாசன்

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ள முடியாத முடியாத வயோதிகர்களும், மூதாட்டிகளும், குழந்தைகளும், சேலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி, விரதம் இருந்து 18 படி ஏறும் பாக்கியத்தைப் பெற்றுவருகின்றனர். ஆண்டு முழுவதும் பெண்கள் ஐயப்பனைத் தரிசனம் செய்து செல்லும் சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு.

மன ஒழுக்கமும், உடல் சுத்தமும் ஒரு சேர குவிந்த நிலை கொண்டவர்கள் மட்டுமே சபரி மலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்க முடியும்.

சபரி மலைக்குச் செல்லும் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள இயலாத வயோதிகர்கள், மூதாட்டிகள், இளம் சிறார்கள் ஆகியோரின் பக்தி வேட்கையைப் பிஞ்சுகளின் ஆன்மிக பக்தி மார்க்கத்தை பூர்த்தி செய்யும் விதமாக, சேலம் ஆனந்தா பாலம் அருகே, ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் இருக்கிறது.

சபரி மலையில் ஆண்டுதோறும் தமிழ் மாத பிறப்புகளில் ஐந்து நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு, ஐந்தாம் நாள் படி பூஜை நடத்தப்படும். அதுபோன்று, இங்கு தமிழ் மாதப் பிறப்பில் சிறப்புப் பூஜை, படி பூஜை நடத்தப்படுகிறது. சபரி மலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல பக்தர்கள் கடை பிடிக்கும் ஆன்மிக விதிமுறைகளை, இக்கோவிலிலும் கடைப்பிடிக்க வேண்டும். மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி கட்டி வரும் பக்தர்கள், தர்ம சாஸ்தா கோவிலில் உள்ள 18 படிகளில் ஏறிச் சென்று ஐயப்பனைத் தரிசிக்கலாம்.

மீண்டும் அதே படி வழியாக இறங்கி வந்து, தேங்காய் உடைக்கலாம். சபரி மலை ஐயப்பன் கோவிலில் 18 படி ஏறிய பக்தர்கள் மீண்டும் அந்த படி வழியாக இறங்கிவிட முடியாது. ஆனால், 18 படி உணர்த்திடும் மெய்ஞான தத்துவத்தை ஐயப்பன் பக்தர்கள் நன்குணர்ந்து, வாழ்வில் மேன்மையும், இறை அருளைப் பூர்ணமாகப் பெற வேண்டி, தர்ம சாஸ்தா கோவிலில் மீண்டும் 18 படி இறங்கி வர வழி வகை செய்து கொடுத்தள்ளனர்.

இக்கோவிலில், கோசாலை அமைக்கப்பட்டு 25 பசு,கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. பசு அளிக்கும் பாலைக் கொண்டு தினமும் கோவிலில் அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு அபிஷேகம், பகல் 11 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு சாயரட்சனம், இரவு 9 மணிக்கு ஹரிவராசனம் என நான்கு கால பூஜை நடக்கிறது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் 48 நாட்கள் மண்டல பூஜை வெகு சிறப்பாகவும், தினமும் இன்னிசை, பஜனை, உபன்யாசம், பரதம் என ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆன்மிக சம்பந்தமாக நடக்கும் அனைத்து நிகழ்ச்சிக்கும் கோவிலில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கின்றனர்.

SCROLL FOR NEXT