நேரஞ்சர ஆற்றங்கரையில் தங்கிய கவுதம முனிவர் மைத்ரீ தியானம் செய்து காலம் கழித்தார். அப்போது காடுகளில் தனித்து வசிக்கும்போது அச்சமும் நடுக்கமும் ஏற்படுகின்றன என்று பிராமணர்களும் சிரமணர்களும் கூறுகிறார்களே, அதற்கான காரணம் என்ன என்பதைக் கவுதமர் ஆராய்ந்து பார்த்தார்.
அப்போது அவருக்கு ஓர் உண்மை புலப்பட்டது. மனம், வாக்கு, காயத்தில் (மனசு, பேச்சு, உடல்) குற்றம் இருப்பதாலே இவ்வாறு அச்சமும் நடுக்கமும் ஏற்படுகின்றன என்பதை அறிந்தார்.
அன்புடைமை
தன்னுடைய மனம் வாக்குக் காயங்களில் குற்றம் உள்ளனவா என்று சிந்தித்துப் பார்த்தார். தம்மிடம் அப்படிப்பட்ட குற்றங்கள் எதுவும் இல்லை என்றும், குற்றத்துக்கு மாறாக நற்குணங்களே உள்ளன என்றும் கண்டார். அதாவது தம்முடைய மனம், வாக்கு, காயங்களில் குற்றம் இல்லாததோடு அச்சமின்மை, தைரியமுடைமை, பிறரைவிடத் தான் உயர்ந்தவர் பிறர் தாழ்ந்தவர் என்றும் கருதாமை, அன்புடைமை (மைத்ரீ) என்னும் நற்குணங்கள் இருப்பதைக் கண்டார்.
பிறகு அட்டமி, பாட்டிமை, பவுர்ணமி முதலிய நாட்களில் தனித்து இருந்தால் அச்சம் உண்டாகும் என்று கூறுகிறார்களே, அதற்கான காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும் என்று எண்ணம் கொண்டார். ஆகவே, அந்நாட்களில் இரவு வேளையில் அவ்விடங்களுக்குத் தனியே சென்று தங்கினார்.
நீங்கிய அச்சம்
அப்படித் தங்கியபோது நள்ளிரவிலே அவ்விடத்தில் ஒரு மான் வந்தது. பின்னர் ஒரு பறவை வந்தது. பின்னர் காய்ந்து உலர்ந்த இற்றுப் போன மரக்கிளையொன்று மரத்திலிருந்து ஒடிந்து விழுந்தது. பின்னர் இலைகள் சலசலவென்னும் ஓசையுடன் அசைந்தன.
இவற்றை அனுபவம் மூலம் கண்ட கவுதம முனிவர், இரவு வேளைகளிலே இந்த இடங்களிலே அச்சத்தை உண்டாக்குகிற காரணங்கள் இவைதாம் என்பதை அறிந்து, இவ்விதமான காரணங்களால் ஏற்படும் அச்சத்துக்கு இடம் தரக் கூடாது என்று நினைத்துத் தொடர்ந்து அவ்விடத்திலேயே தங்கியிருந்தார். எவ்விதமான காரணத்தாலும் காடுகளில் அச்சம் ஏற்படும் காலத்தில் அஞ்சாமல் இருப்பதற்குப் பழகிக்கொண்டார்.
இந்தக் காரணங்களை அறியாமல் யாராவது அச்சம் கொண்டால், இக்காரணங்களை எடுத்துக்கூறி அவர்களுடைய அச்சத்தை நீக்கினார்.
நுகர்வைக் குறைத்தல்
கவுதம முனிவர் தூரத்திலுள்ள கிராமத்துக்குச் சென்று உணவைப் பிச்சை ஏற்று உண்பது வழக்கம். சில காலம் சென்ற பின்னர் இவ்வாறு உணவு உட்கொள்வதை நிறுத்தி, காட்டில் பழங்களைப் பறித்து உண்ணப் பழகினார். இவ்வாறு சில காலம் சென்றது.
பிறகு மரத்திலிருந்து கனிகளைப் பறிப்பதை நிறுத்தித் தாமாகவே மரத்திலிருந்து பழுத்து உதிர்ந்து விழுகிற பழங்களை மட்டும் எடுத்துச் சாப்பிட்டுவந்தார். சில காலம் சென்ற பின்னர், உதிர்ந்த பழங்களைக் காட்டிலே சென்று எடுப்பதையும் நிறுத்தித் தாம் இருக்கும் இடத்திலே மரங்களிலிருந்து விழும் பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்தார். இப்படித் தன்னுடைய தேவைகளை ஒவ்வொன்றாகக் குறைத்துக்கொண்டேவந்தார்.
நன்றி: மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘கவுதம புத்தர்'
தொகுப்பு: ஆதி