40 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கரணியில் இருந்து வெளியே வந்து தரிசனம் தரும் அத்தி வரதர், இன்று ஜூலை 1ம் தேதி முதல் தரிசனம் தரத்தொடங்கிவிட்டார்.
நகரேஷூ காஞ்சி என்று போற்றப்படும் காஞ்சி மாநகரில் உள்ளது வரதராஜ பெருமாள் கோயில். விஸ்வகர்மாவால் அத்திமரத்தால் செய்யப்பட்ட வரதராஜர்தான் இந்தக் கோயிலின் மூலவர். அந்நியப் படையெடுப்பின் போது, அத்தி வரதரின் திருமேனியைப் பாதுகாக்கும் பொருட்டு, ஆலயத்தின் புஷ்கரணியில், நீருக்குள் ஒளித்து வைத்திருந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.
பிறகு பல வருடங்கள் கழித்து, காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள பழைய சீவரத்தில் உள்ள மலையில் வரதராஜரின் திருமேனி கண்டெடுக்கப்பட்டது. பின்னர், எல்லோரும் கூடி, ‘இவரே இனி மூலவர்’ என உறுதி செய்து, ஆலயத்தின் கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார்கள்.
ஒருகட்டத்தில், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள திருவுளம் கொண்டார் அத்தி வரதர். கோயிலின் குளமானது, வற்றவே வற்றாது என்பார்கள். ஆனால், குளத்தில் நீர் வற்றியது. உள்ளிருந்த அத்தி வரதர் அகிலத்து மக்களுக்கு திருக்காட்சி தந்தார். அப்போது ஊர்ப்பெரியவர்களும் நிர்வாகிகளும் கூடிப் பேசினார்கள். ‘இப்போது அத்தி வரதருக்கு பூஜைகள் செய்துவிட்டு, ஒருமண்டல காலத்துக்குப் பிறகு, மீண்டும் புஷ்கரணியில் நீருக்குள் விட்டுவிடுவோம். அதன் பின்னர், 40 வருடத்துக்கு ஒருமுறை வெளியே எடுத்து, பூஜைகள் செய்வோம்’ என முடிவு செய்தார்கள்.
அதன்படி இன்றளவும் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வந்து, மக்களுக்கு சேவை சாதிக்கிறார் அத்தி வரதர். இன்று ஜூலை 1ம் தேதி தொடங்கி, ஒருமண்டல காலத்துக்கு, அத்தி வரதரைத் தரிசிக்கலாம். இவரைத் தரிசிப்பதற்காக, தமிழகம் மற்றும் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் கூட, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து பிரார்த்தித்துச் செல்வார்கள்.
இத்தனை பெருமை மிகுந்த வரதராஜர் ஆலயத்துக்கும் வலிமை மிக்க காயத்ரி மந்திரத்துக்கும் பல தொடர்புகள் உள்ளன.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலின் மதில், மிகப்பிரமாண்டமாக உயர்ந்து நிற்பதைப் பார்க்கலாம். காயத்ரி மந்திரத்தின் எழுத்துகள் 24. இந்தப் பிரமாண்டமான மதிலும் 24 அடி உயரங்களைக் கொண்டது.
இந்தக் கோயிலில் இரண்டு திருக்குளங்கள் உள்ளன. கோயில் குளத்துக்கான படிக்கட்டுகள் 24 என்றே அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு அடுக்குகள் கொண்ட சந்நிதி இங்கே அமைந்துள்ளது. நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் வரதராஜரைத் தரிசிப்பதற்கு 24 படிகளைக் கடந்து செல்லவேண்டும்.
இன்னொரு சுவாரஸ்யம்... திருக்குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு காட்சி தந்துகொண்டிருக்கிறாரே அத்தி வரதர். இவரை இன்று முதல் (ஜூலை 1ம் தேதி முதல் )தரிசித்துக்கொண்டிருக்கிறோம். முதல் 24 நாட்கள், சயன திருக்கோலத்தில் தரிசனம் தருவார் அத்தி வரதர். பிறகு அடுத்த 24 நாட்களுக்கு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவார் என்கிறார் காஞ்சி வரதராஜ கோயிலின் கிட்டு பட்டாச்சார்யர்.