ஸ்ரீராமர், சீதை, லட்சுமணரோடு வனவாசம் செல்லும் போது அத்திரி மகரிஷி ஆசிரமத்துக்குச் சென்றார்கள். அவரை விழுந்து வணங்கி அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, மகரிஷியின் பத்தினியான அனுசுயா தேவி, தாய் பாசத்தோடு சீதையை அழைத்து அலங்காரம் செய்கிறாள்.
மகாலட்சுமியான சீதை, அனைத்துச் செல்வங்களையும் துறந்து வனவாசம் வந்திருக்கிறாரென்று அனுசுயா எண்ணி வருந்தினார். சீதையின் மரவுரியைக் களைந்து பட்டாடை உடுத்த வைத்து, ஆபரணங்களை எல்லாம் சூட்டி, தலைவாரி மலர்களை அணிவித்து, ஒரு தாய் எப்படித் தன் மகளுக்கு அலங்காரம் செய்து அழகுப்படுத்தி பார்ப்பாளோ அப்படியாகச் சீதைக்கும் ஒப்பனையிட்டுப் பார்த்தாள்.
இதைப் பார்த்த ராமர் சீதையிடம், மணக்கோலத்தில் பார்த்த போதிருந்த அழகைவிடப் பல மடங்கு அழகாக காட்சி தருகிறாயே என்றார். அப்படித்தான் சீதைக்குத் தாயானாள் அனுசுயா.
அனுசுயா தேவி ஒரு பதி விரதை; கணவரின் பாத பூஜை முடித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொண்டபிறகே, தன் அன்றாட வேலைகளைச் செய்வாள். அவளின் பத்தினி தன்மையைச் சோதிக்க வந்த மும்மூர்த்திகளையுமே குழந்தைகளாக்கி தொட்டிலில் இட்டவள் அனுசுயா.
மும்மூர்த்திகளின் மனைவிகள் வந்து தங்கள் கணவர்களை அனுப்ப சொல்லிக் கேட்டும் மூவரையும் ஒன்று சேர்த்து தத்தாத்ரேயராய் வளர்த்து, மும்மூர்த்திகளுக்கும் தாயானாள் அனுசுயா.
ஒரு சாதாரணப் பெண் நினைத்தால் ஸ்ரீமகாலட்சுமிக்கும், மும்மூர்த்திகளுக்கும் தாயாக முடியும் என்று நிரூபித்தவள் அனுசுயா.
சீதைக்குக் காட்டில் அப்படி ஒரு தாயார் கிடைத்தாளே! பூலோக அன்னை சீதைக்குப் பணிசெய்யும் மனமும் அனுசுயாவுக்கு இருந்ததே என்று ஆச்சரியப்படுகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை. சீதைக்குப் பணிவிடைகளை செய்தது போல தாயாரின் வஸ்திரங்களைத் தான் சுத்தி செய்யவில்லையே என்று புலம்புகிறாள்.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு:
uyirullavaraiusha@gmail.com