ஆன்மிகம்

இறைத்தூதர் கதைகள் 03: இறைவனின் பாதையில் நடப்போம்

செய்திப்பிரிவு

அபு தாலிப், பொறுமையாக குரைஷ் தலைவர்கள் கூறிவந்த விஷயங்களைக் கேட்டுவிட்டு அவர்களை அனுப்பிவைத்தார். ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

அதனால், அபு தாலிப்பின் ஆதரவுடன் இறைத்தூதர் அவரது பணிகளைத் தொடர்ந்து மேற் கொண்டார். சிறிது காலம் கழித்து, குரைஷ் தலைவர்கள் மீண்டும் அபு தாலிப்பைச் சந்திக்க வந்தனர்.

“நீங்கள் ஞானமுள்ளவர். எங்களின் மூத்தவர்களில் ஒருவர். உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. நாங்கள் உங்களிடம் உங்கள் சகோதரரின் மகன் முஹம்மதுவைத் தடுத்து நிறுத்துமாறு கோரியிருந்தோம். ஆனால், நீங்கள் அதைச் செய்யவில்லை. எங்கள் முன்னோர்களையும் தெய்வங்களையும் பழித்துப் பேசினால், அதைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம்.

இதைக் கடவுளின் மீது ஆணையாகத் தெரிவிக்கிறோம். ஒன்று, நீங்கள் அவரைத் தடுத்து நிறுத்துங்கள். அல்லது நாங்கள் அவர் மீது போர் தொடுக்கி றோம், நீங்கள் அதில் தலையிடாமல் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.  அதற்குப் பிறகு, அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

தனது இனத்தைச் சேர்ந்தவர்களே தமக்கு எதிரிகளாக மாறுவதை நினைத்து அபு தாலிப் மிகவும் கவலைப்பட்டார். ஆனால், அதே நேரத்தில் இறைத்தூதர் முஹம்மதை, அவர்களிடம் ஒப்படைக்கவும் விரும்பவில்லை.

இறைத்தூதரை அழைத்த அபு தாலிப், “நம் இனத் தலைவர்கள் இன்று என்னைச் சந்தித்து நிறைய விஷயங்களைத் தெரிவித்தனர்.  தயவுசெய்து, என்னிடமும் உன்னிடமும் கருணையுடன் நடந்துகொள். என்னால் தாங்கிக்கொள்ள முடியாத எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளும்படி செய்துவிடாதே” என்று தெரிவித்தார். தனக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டைத் தன் சித்தப்பா மாற்றிக்கொண்டதாகவும், அவர் தன்னைப் பாதுகாப்பதை நிறுத்திவிடுவார் என்றும் இறைத்தூதர் நினைத்தார்.

“ஓ சித்தப்பா, அவர்கள் என் வலது கையில் சூரியனையும் இடது கையில் நிலவையும் வைத்துக் கொடுத்தாலும்கூட, இந்தப் பணியில் அல்லா எனக்கு வெற்றியைக் கொடுக்கும்வரை, அதை நிறுத்தமாட்டேன். அதற்காக நான் இறக்கவும் தயாராக இருக்கிறேன்,” என்றார் இறைத்தூதர்.

இதையெல்லாம் சொன்னபிறகு, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவர் எழுந்து, அபு தாலிப்பின் வீட்டைவிட்டு வெளியேறத் தயாரானார்.

“மகனே, இங்கே வா!” என்று அழைத்தார் அபு தாலிப்.

“ஓ, என் அருமை மகனே, நீ போய் உனக்கு என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ, அவற்றையெல்லாம் போய்ச் சொல். நான் அல்லாவின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். என்ன நடந்தாலும் உன்னை அவர்களிடம் ஒப்படைக்க மாட்டேன்” என்று சொன்னார் அபு தாலிப்.

இறைத்தூதர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். இறைவனின் பாதையில் நடப்பதற்கு அவர் மக்களை அழைக்கத் தொடங்கினார். 

திருத்தம்

சென்ற வாரம் இடம்பெற்ற இறைத்தூதர் கதைகள் கட்டுரையில், அபு தாலிப், முஹம்மதுவின் சித்தப்பா என்று குறிப்பிடப்படுவதற்குப் பதிலாக, மாமா என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுவிட்டது. இந்த வாரம் அது திருத்தப்பட்டிருக்கிறது.

(பயணம் தொடரும்)

தமிழில்: என். கௌரி

(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்’ குட்வர்ட், திருவல்லிக்கேணி)

SCROLL FOR NEXT