ஆன்மிகம்

உட்பொருள் அறிவோம் 22: விஸ்வரூபம் என்ற தரிசனம்

சிந்துகுமாரன்

நம் புராணங்களில் விஸ்வரூபத்தைப் பற்றிப் பல இடங்களில் படித்திருக்கிறோம். கிருஷ்ணர் தூது சென்றபோது கௌரவ சபையில் ஒரு முறையும், குருக்ஷேத்திரத்தில் அர்ச்சுனனுக்கு கீதோபதேசத்தின்போது ஒரு முறையும் கர்ணனுக்கு அவன் வாழ்வின் கடைசி கணங்களிலும் தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியிருக்கிறார். ஆஞ்சநேயர் பீமனுக்கு ஒரு முறையும், பல முறை தன் உடலை வளர்த்துக் காட்டியதையும் நம் புராணங்கள் சொல்லுகின்றன. என்ன அது விஸ்வரூபம்? 

கிருஷ்ணர் அல்லது ஆஞ்சநேயரின் உடல் பெரிதாக, மிகப் பெரிதாக, வானளாவ ஓங்கி வளர்ந்து நிற்கும். அர்ச்சுனனுக்கு அவர் அந்தத் தரிசனத்தைக் காட்டியபோது உலகில் உள்ள அனைவரும், குருக்ஷேத்திரத்தில் அர்ச்சுனனும் கிருஷ்ணனும் நிற்கும் காட்சியும் கூட அந்த விஸ்வரூபத்தில் அர்ச்சுனனுக்குத் தெரிந்தது. உண்மையில் விஸ்வரூபம் என்பதுதான் என்ன?

நம் புராணங்கள் அற்புதமான, எளிதாகச் சொல்லிவிட முடியாத உண்மைகளைக் கதைகளாகவும் அவற்றில் வரும் காட்சிகளாகவும் சம்பவங்களாகவும் காட்டுகின்றன. அதனால் முதலில் சாதாரண ரூபம் என்ன என்பதை முதலில் நாம் புரிந்துகொள்வோம். விஸ்வரூபம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு அது உதவியாக இருக்கும்.

நமது உடல் நமது உணர்வு

நம் உடலில் ஐம்பது டிரில்லியன் செல்கள் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு செல்லுக்கும் தனி இருப்பு இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் தனியாகப் பிறப்பு, வாழ்வு, இறப்பு உள்ளது. ஒவ்வொரு செல்லும் தன்னை உணர்கிறது. ஆனால், ஏதோ ஒரு உறுப்பின் அங்கமாகத் தான் இருப்பதை அது அறிவதில்லை.

கல்லீரலில் உள்ள ஒரு செல்லுக்குத் தான் அந்தக் கல்லீரலின் பகுதியாகத் தான் இருப்பது தெரியாது. கல்லீரலுக்குத் தன்னைத் தெரிந்தாலும் தான் ஒரு முழு உடலின் அங்கமாக இருப்பதை அது அறியாது. மூளை தன்னை அறியும் காரணத்தால் அந்த உடலின் அங்கமாக இருக்கும் ஒவ்வொரு உறுப்பையும், அந்த உறுப்புகளில் இருக்கும் ஒவ்வொரு செல்லையும், ‘தான்’ என்று உணர்கிறது. இதன் காரணமாக உடலுக்குத் தன்னைத் தெரிகிறது.

ஒவ்வொரு கணமும் செல்கள் இறந்துகொண்டே இருக்கின்றன. புதிய செல்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், உடல் தொடர்ச்சியாக இருந்துகொண்டே இருக்கிறது, நாம் ஒவ்வொருவரும் இந்தப் பிரபஞ்சத்தின் அங்கமாக இருக்கிறோம். நம்மை நமக்குத் தெரிகிறது.

ஆனால், பிரம்மாண்டத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இருப்பதை நாம் அனுபவபூர்வமாக உணர்வதில்லை.

மரணம் பற்றிய புரிதல்

நமக்கு உடல் இருக்கிறது. அதன் உள்ளிருந்து இயங்கும் மனம் இருக்கிறது. மனத்துக்கு அடிப்படையாக ‘நான்' என்னும் சுயப் பிரக்ஞை நிற்கிறது. நாம் இப்போது கொண்டிருக்கும் கருத்தின்படி, நம் ஒவ்வொருவருக்கும் தனியான ஒரு ‘நான்' இருக்கிறது. உன்னுடைய ‘நான்' வேறு, என்னுடைய ‘நான்' வேறு என்று எண்ணுகிறோம். இந்தக் கருத்து சரியானதல்ல.

நமக்கு ‘இறப்பு' என்பதைப் பற்றிப் போதுமான புரிதல் ஏற்படவில்லை. அதனால் ‘நான்' என்பதைப் பற்றியும் ஒரு புரிதலும் இல்லை. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. மரணத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல் ‘நான்' என்னும் சுய உணர்வைப் பற்றி நம்மால் ஒன்றும் தெரிந்துகொள்ள முடியாது.

‘நான் இன்னார்' என்று நாம் ஒவ்வொருவரும் நம்பிக் கொண்டிருப்பது, நினைவுகளும் அறிவும் கற்பனையும் சேர்ந்து மனத்தளத்தில் உருவாகியிருக்கும் ஒரு பிம்பம். தனிமனங்களைக் கடந்த பிரக்ஞையின் ஒளி அந்தப் பிம்பத்தின் மீது பட்டுப் பிரதிபலிக்கும்போது, அந்தப் பிரதிபலிப்பின் வழியாக உடலும் மனமும் சுயப் பிரக்ஞை கொண்டு இயங்குகின்றன.

எல்லையும் வடிவமுமற்ற உணர்வு வெளி

உண்மையின் இயல்பான பிரக்ஞை யாருக்கும் சொந்தமானது இல்லை. அது எல்லையும் வடிவமுமற்ற ஒரு உணர்வுவெளி. அகண்டாகாரமானது. பிரபஞ்ச ரீதியானது. உடலைக் கொண்டு வாழும் ஒவ்வொரு ஜீவனின் பிரக்ஞையிலும் அது பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு ஜீவனும் தன் அறியாமையினால் அந்தப் பிரதிபலிப்பைத் தனியான ஒரு ‘நான்' என்று கொள்கிறது.

ஒரு ஜீவனின் மரணத்தின்போது மனம் என்னும் அறிவு மண்டலம் செயலற்றுப் போய்விடுகிறது. அதனால் அதில் பிரபஞ்ச ரீதியான ‘நான்' பிரதிபலிப்பதில்லை. அந்த உடலிலும் மனத்திலும் இயங்கிய சுய உணர்வு மறுபடியும் பிரபஞ்ச உணர்வு மண்டலத்தில் போய்க் கலந்துவிடுகிறது.

இந்தக் காரணத்தால் நம் அனைவரின் பின்னாலும் இருந்து இயங்கும் ‘நான்' ஒரே ‘நான்'தான். பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஒரு ‘நான்'தான் இருந்து இயங்குகிறது.

சரி, இதற்கும் விஸ்வரூபம் என்பதற்கும் என்ன தொடர்பு? மறுபடியும் நம் சாதாரண ரூபத்துக்கு வருவோம். நம் உடலிலும் மனத்திலும் இயங்கும் பிரபஞ்சப் பிரக்ஞை நம்மை நமக்கு ‘நான்' என்று அடையாளம் காட்டுகிறது. அதேபோல் பிரபஞ்சப் பிரக்ஞையான ‘நான்' தன்னை என்னவாகக் காண்கிறது? இந்த மாபெரும் பிரபஞ்சத்தை, விஸ்வத்தை, தன் உடலாகத்தான் அது காண முடியும், அல்லவா? தன் ரூபத்தை அது விஸ்வரூபமாகத்தானே காண முடியும்?

நம் ஒவ்வொருவரின் பின்னாலும் இருந்து இயங்கும் அந்த அகண்டாகாரமான ‘நான்'தான் உண்மையில் நம் ஒவ்வொருவரின் உடல்-மனம் வழியாகத் தன்னை அறிந்துகொள்கிறது என்னும் உண்மை புரியும்போது, அந்தத் தளத்திலிருந்து நம்மை நாமே பார்த்துக்கொள்ள முடியும். அப்போது நம்மையே நாம் விஸ்வரூபமாகக் காணமுடியும். தேகாத்ம புத்தியை (‘இந்த உடல் மட்டும்தான் நான்’ என்னும் கருத்து) விடுத்து, தனக்குள் இருந்து இயங்கும் பிரக்ஞை உண்மையில் பிரபஞ்சப் பிரக்ஞை என்று புரிந்துகொண்டால்தான் விஸ்வரூபம் என்னும் கருத்தின் உட்பொருளை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்துகொள்ள முடியும். இந்த உண்மை தெளிவாகப் புரியும்போது, ‘என்` மரணம் என்று தனியாக ஏதுமில்லை என்று தெரியும். மரண பயம் என்பது முற்றிலும் அற்றுப் போய்விடும்.

இது வெறும் சிந்தனையின் ஓட்டத்தினால் மட்டும் எழும் எண்ணமல்ல. ஒவ்வொருவரும் நேரடியாக அனுபவம் கொள்ளக்கூடிய உண்மை.

பிரபஞ்சம் நம் அனைவரின் வழியாகவும் படிப்படியாகத் தன்னைத் தானே உணர்ந்துகொள்கிறது. பரிணாமத்தின் அர்த்தம் இதுதான். நம் வாழ்க்கை என்னும் இந்த ஜாலம் மிகுந்த அனுபவத்தின் அடிப்படைப் பயனே நாம் இந்தப் பிரபஞ்சம்தான் என்னும் உண்மையை நேரடியாக உணர்ந்துகொள்வதுதான்.

(மேலும் அறிவோம்) கட்டுரையாளர், தொடர்புக்கு:

sindhukumaran2019@gmail.com

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருள் பாலிக்கும் 'அத்தி வரதர்' வைபவம் 

SCROLL FOR NEXT