நரசிம்மரை அதிகமாகக் கொண்டாடும் மாநிலம் ஆந்திரம். இங்குதான் நரசிம்மருக்கான கோயில்கள் அதிகம். அதில் முக்கியமானவை நான்கு. இதில் கடற்கரையோரம் பிரசித்தி பெற்று பொலிவுற அமைந்துள்ளது சிம்மாச்சலம்.
கடல் கொஞ்சும் பட்டினம் விசாகப்பட்டினம். ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது சிம்மாச்சலம். இந்த இடத்தில் நிற்கும் போதே, மரங்களின் மூலிகைகளின் வாசத்தையும் அள்ளிக்கொண்டு வரும் காற்று நம்மைத் தழுவிச் செல்கிறது. கோயில் கொண்டிருக்கும் உக்கிர மூர்த்தியையும் சாந்தப்படுத்தும் காற்று, பக்தர்களின் மனதில் ஒருமுகப்படுத்தும் அமைதியையும் பக்தியையும் ஏற்படுத்துகிறது.
விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனைக் கொல்ல இரண்யகசிபு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவை பயனற்றுப்போயின. பிரகலாதனைக் கடலில் வீச ஆணையிட்டான் இரண்யகசிபு. ஆனால், பரந்தாமன் அந்த மலைமீது இறங்கி அவனைக் காத்தார். அதுதான் சிம்மாத்ரி (இன்றைய சிம்மாச்சலம்). இது ஸ்கந்த புராணத்தில் புண்ணியத் தலமாகக் குறிப்பிடப்படுகிறது. முனிவர்கள் பக்தர்களின் வேண்டுகோளின்படி வராக நரசிம்மராக அங்கேயே குடிகொண்டார்.
தல புராணத்தின்படி தந்தையின் மறைவுக்குப் பிறகு தனயன் அகோரருக்குக் கோயில் கட்டினான். ஆனால், அந்த யுகத்தின் முடிவில் கோயில் கேட்பாரற்று அழியத் தொடங்கியது. மூலவரைச் சுற்றி மணல் குவிந்தது. அடுத்த யுகத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த புரூரவன் என்ற மன்னன் தெய்வீக சக்தியின் உந்துதலால் இந்த இடத்துக்கு வந்து அந்தச் சிலையைக் கண்டெடுத்துக் கோயிலும் கட்டினான்.
அந்தச் சமயத்தில் அசரிரீயானது அந்த உருவத்தை அம்பலப்படுத்திவிடாமல் சந்தனத்தால் மூடி வைக்கும்படி கூறியது. வருடத்தில் ஒரு முறைதான் அவருடைய நிஜஸ்வரூபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டது. அது போலவே இன்றும் வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் நரசிம்மரின் திவ்ய தரிசனம் கிட்டும். மற்ற நாட்களில் சந்தன மேனியுடன்தான் காட்சி தருவார்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சிம்மாத்ரி ஆந்திராவின் கடலோரம் அமைந்துள்ள கோயில்களுள் மிகச் சிறப்பாகச் செதுக்கப்பட்ட கோயிலாகும். விஜயநகரத்தின் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்தான் இந்தக் கோயிலின் அறங்காவலர். பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த குலோத்துங்கச் சோழன் கால கல்வெட்டுகள் இந்தக் கோயிலைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. 13-ம் நூற்றாண்டில் கங்கை மன்னர்கள் இந்தக் கோயிலை அலங்கரித்துள்ளனர். மூல விக்கிரகத்தின் சிறப்பம்சம், அது வராக, நரசிம்ம அவதாரங்களின் அடையாளமாக உள்ளதுதான்.
கோயிலின் சிற்பங்களிலும் கட்டிடக் கலையிலும் ஒரிய பாணி பரவியுள்ளதைக் காணலாம். மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியில் இருபது நிமிடம் பிடிக்கிறது. வண்டிகள் கோயிலுக்குச் சற்றுத் தள்ளியே நிறுத்தப்படுகின்றன. படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் எற வேண்டும். ஒரு மணி நேரம் ஆகும்.
கருவறைக்கு இடப் பக்கத்தில் கப்பஸ்தம்பம் என்ற தூண். மணிகளாலும் பட்டு துணியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கீழே சந்தான கோபாலரின் இயந்திரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் இதைக் கட்டிக்கொள்பவர்கள் புத்திர பாக்கியம் பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முதன்மை வாயில், கலி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. வளாகத்தின் நடுவே கருவறை உள்ளது. அதற்கு நடுவில் ஒரு சிறிய மேடையின் மேல் மூலவர் நிற்கிறார்.
சந்தனப் பூச்சுடன் கூடிய லிங்கம் காட்சி தருகிறது. வைகாசி மாதம் அவருடைய நிஜஸ்வரூபம் வெளிப்படுத்தப்படுகிறது. இதில் அவர் த்ரிபங்க தோரணையுடன், இரண்டு கைகள், காட்டுப் பன்றியின் தலை, சிங்க வால், மனித உடலுடன் காட்சி தருவார். இரு பக்கங்களிலும் ஸ்ரீதேவியும் பூதேவியும். கையில் தாமரையுடன் ஆண்டாள் , லட்சுமி, ஆழ்வார் ஆகியோருக்குத் தனித் தனியே சன்னிநிதிகள் உள்ளன.
பிரகாரத்தைச் சுற்றி வந்தால் கண்ணுக்கு விருந்தளிக்கும் தெய்வீகச் சிற்பங்கள். கருவறையின் தெற்குச் சுவரில் நரஹரி இரணியனின் வயிற்றைக் கிழித்து வதம் செய்யும் காட்சி பொறிக்கப்பட்டிருக்கும். அருகிலேயே வராக மூர்த்தி இருப்பார். பக்தர்கள் கோயிலைச் சுற்றி வலம் வந்து இங்கே கன்றுகளை நேர்ந்து விடுகிறார்கள். இது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பாகும். முதன்மைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் அனுமாருக்குக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கிருக்கும் வழிபாட்டு முறை பஞ்சராத்ரா முறையைச் சேர்ந்தது.
சந்தன யாத்திரை
ஆலய வைபவங்களில் ஆண்டுக்கு ஒரு முறை வரும் கல்யாணோற்சவம், சந்தனயாத்திரோட்சவம் ஆகியவை முக்கிய வைபவங்களாகப் பக்தர்களால் போற்றப்படுகின்றன. தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து பக்தர்கள் பங்கேற்கும் அளவுக்கு பிரசித்தி பெற்ற வைபவம் சந்தன யாத்திரை. அன்றுதான் சந்தனம் அகற்றப்பட்டு சுவாமி அசல் ரூபத்தில் காட்சி தருவார். இது அட்சய திருதியை அன்று நடைபெறும். அடுத்த முறை விசாகப்பட்டினத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்லும்போது அவசியம் நரசிம்மரையும் தரிசித்துவிட்டு வாருங்கள்.