சூரியன் மற்றும் சந்திரன் பாதைகளின் அக வெட்டு 'கேது'. எனவே, இவரின் காரகத்துவங்கள் மனிதனின் அக ஒழுக்கங்களான - அதாவது மனம் சார்ந்த ஒழுக்கங்களான (ஞானம், தியானம், தவம், மௌனம், வைராக்கியம், நிதானம், மனவெறுப்பு, விரக்தி, சந்நியாசம், ஆன்மீக உணர்வு, பிடிப்பு இல்லாமை, வேதாந்தம்) இவற்றின் குறீயீடாக கேது உள்ளது.
கேது என்பது மூலாதார அடித்தளத்தில் சுருண்டு கிடக்கும். இதுவே ஞானத்தின் ஆரம்பப் புள்ளி. அதனால் தான் இவரின் அதிபதி முழு முதற்கடவுள் 'விநாயகர்'. விநாயகர் ஞானத்தின் மூலப்பொருள் என்று இந்து மதம் விளக்குகிறது. இவரின் வாகனம் சிறிய எலி. அதாவது எலி என்பது நம் கட்டுக்குள் அகப்படாமல், ஓடியும் ஒளிந்தும் செல்லும் மனதின் குறீயீடு ஆகும். அதன் மீது அமர்ந்து, அதனை தான் வசம் வைத்து அடக்கி, ஞானத்தை கொடுப்பவர் 'ஸ்ரீ விநாயகர்'. இதனை அறிந்த நம் சித்த பெருமக்கள், கேதுவின் அதிபதியாக விநாயகரை வைத்துள்ளனர்.
மேலும், கேதுவின் இன்னொரு அதிபதி 'சித்திரகுப்தன்'. இவர் நம் பாவ புண்ணிய கணக்குகளை பதிவு செய்பவர். இதை, நம் உடல் செல்லின் மூலக்கூறு (DNA) என்று பொருள் கொள்ளலாம். அவ்வாறு நம் மூதாதையர் செய்த பதிவு பாவ புண்ணியங்கள் DNA வில் பதிவு செய்யப்பட்டு, நாம் வருங்கால சந்ததியினரை பாதிக்கும். எனவே தான், ராகு - தந்தை வழி பாட்டன், கேது - தாய் வழி பாட்டன் குறிக்கிறது.
மனதின் இருளை குறிக்கும் கேது, சந்திரனை பிரிக்கும் செந்நாகம் என்று அழைக்கப்படுகிறது. ஆதாவது மனதில் பல குழப்பங்களை உருவாக்கி பின் தெளிய வைப்பது கேதுவின் வேலை. எனவே கேது விரக்தி உருவாக்கும் கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
மனவிரக்தி அடைந்த மனிதன் முதலில் தான் ஏன் பிறந்திருக்கிறோம் என்றும் தனது பிறப்பின் நோக்கம் என்ன என்றுமே சிந்திக்க முயல்வார். மேலும் ஆன்மீக பற்றும் ஏற்படும். எனவே, கேது ஞானம் தரும் ஞானகாரகன் ஆவார்.
சனி கர்மகாரகன் என்பது நமக்குத் தெரியும். சனி யாரிடம் எல்லாம் சேருகிறாரோ, அவர் மூலம் நாம் முற்பிறவியில் பாதிக்கப்பட்டு இருப்போம். உதாரணமாக, சனி ராகுவுடன் பகை ராசியில் இருந்தால், தந்தை வழி பாட்டன் மூலம் ஏற்பட்ட பாவங்கள் நம்மை பாதிக்கும்.
சனி கேதுவுடன் இருந்தால், தாய் வழி பாட்டன் மூலம் ஏற்பட்ட பாவங்கள் நம்மை பாதிக்கும். சனி சூரியனுடன் இருந்தால், பித்ருக்கள் சாந்தி செய்யாத செய்த பாவத்தை குறிக்கும்.
(மேலும் ஆராய்வோம்)