‘நி
விர்த்தி ஞானதேவ் சோபானு முக்தபாய் ஏக்நாத் நாம்தேவ் துக்காராம்’ என்பது வாரகரி யாத்திரை செல்பவர்களின் மந்திரம். இந்த மந்திரத்தைச் சொல்லியபடியே சுமார் இருபது லட்சம் பேர் யாத்திரையில் செல்வார்கள். அப்படிப்பட்ட வாரகரி யாத்திரையில் மஹாபெரியவரும் ஆலந்தி என்ற தொடக்க இடத்தில் இருந்து கிளம்பி, பண்டரிநாதன் கோயில் கொண்டுள்ள பண்டரிபுரம் வரை நடந்தே சென்றுள்ளார். சுமார் இருபது லட்சம் பேர் இருபது நாட்கள் இருநூற்று அறுபது கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்வார்கள்.
ஆடி மாதம் ஏகாதசியன்று தொடங்கும் இந்த யாத்திரைக்குத்தான் வாரகரி என்று பெயர். இதில்தான் மஹா பெரியவர் ஏழை எளிய மக்களுடன் நடந்தே வந்தார். பிறகு ஒரு நாள், விட்டல், ரகுமாயி தாயார் குடிகொண்டுள்ள விட்டல் மந்திர் எனப்படும் திருக்கோயிலில், செங்கற்கள் மீது ஏறி நிற்கும் கோலத்தில் விட்டல் காட்சியளிப்பதைப் பார்த்தார். அப்போது. விட்டலின் தலை கிரீடத்தைத் தூக்கிக் காட்டுமாறு மஹாபெரியவர் கேட்டார்.
விட்டலின் தலைக்கு மேல் இருப்பது மஸ்தக லிங்கம் என்று கூறினார் . ஒரு நாள் மஹாபெரியவர் முகாமிட்டிருந்த இடத்துக்கு அருகில் உள்ள த்ரியம்பகேஸ்வரர் திருக்கோயிலுக்குத் தரிசனம் செய்துவிட்டு வந்தார். அப்போது சில பண்டிதர்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் அத்திருக்கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் மக்கள் ‘ஆலய பிரவேசம்’ செய்ததாகவும், அதனால் தாங்கள் யாரும் அதன் பின் அத்திருக்கோயிலுக்குள் நுழைவதில்லை எனவும் தெரிவித்தனர். மஹாபெரியவரே இப்படிச் செய்யலாமா என்றும் வாதிட்டனர்.
மஹாபெரியவர், விட்டல் விஹாரின் தல புராணத்தைக் கூறி அவர்களின் வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமத்துவச் சமுதாயத்தை பகவான் விரும்பியதை உணர்த்தினார். ஆதிசங்கரரின் ‘பரப்பிரம்ம லிங்கம் பாண்டுரங்கம்’ என்று தொடங்கும் ஸ்ரீபாண்டுரங்க அஷ்டகத்தையும் குறிப்பிட்டு உரையாற்றினார்.
வைகுந்தத்தில் பெருமாளிடம், நாரதர் பூலோகத்தில் பார்க்க வேண்டிய அற்புதர் புண்டலீகன் என்று தெரிவித்தார். ஆச்சரியமடைந்த பெருமாளும் புண்டலீகன் இல்லத்து வாசலுக்கு வந்தார். அங்கிருந்தே புண்டலீகனை அழைத்தார். உதட்டின் மீது கைவைத்துச் சப்தமிடாமல் இருக்கச் சொன்னான் புண்டலீகன். அப்போது பெருத்த மழை கொட்டியது. அதனால் வீட்டின் உள்ளே இருந்து இரண்டு செங்கற்களை எடுத்து வெளியில் தூக்கி எறிந்து, அதன்மீது பகவானை ஏறி நிற்கச் சொன்னான். பெருமாளும் அவ்வாறே செய்து காத்திருந்தார்.
தன் தாய், தந்தையரை உறங்கச் செய்துவிட்டு, இல்லத்துக்கு வெளியே வந்த புண்டலீகன், பெருமாளை வலம்வந்து நமஸ்கரித்தான். பெருமாளும் தான் பகவான் என்று தெரியுமா எனக் கேட்க, அறிவேன் என்றான் புண்டலீகன். அது தெரிந்தும் என்னைக் காக்க வைத்தது ஏன் என்று கேட்டார் பகவான். அதற்கு புண்டலீகன் மாதா, பிதா குரு, தெய்வம் என்ற சாஸ்திர விதியின்படி தாய், தந்தையருக்கே முதன்முதலில் சேவை செய்ய வேண்டும்.
அதன்படி செய்துவிட்டு வந்தேன் என்றான். பகவானும் அவனுடைய பெற்றோர் மீதான பக்தியைக் கண்டு ஆச்சரியப்பட்டு வேண்டும் வரம் என்ன என்று கேட்டார். “அதோ ஓடுகிறதே சந்திரபாகா நதி! அது என் இல்லத்துக்கு அருகில் ஓட வேண்டும். அப்படிச் செய்துவிட்டால், என் பெற்றோர் ஸ்நானம் செய்ய ஏதுவாக இருக்கும்” என்றான்.
அவ்வாறே செய்த பகவான், அதற்குப் பின்னர் சந்திரனின் பாகம் அதாவது பிறைச் சந்திரன் போல் அந்நதி ஓடியதால், அதற்கு சந்திரபாகா என்பது திருநாமம். புண்டலீகா உனக்கென்று வரம் ஒன்று கேள் என்றார். தனக்கென்று ஒன்றும் வேண்டாம் என்று கூறிய புண்டலீகன், பகவானைப் பண்டரியிலேயே கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
பகவானும் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த புண்டலீகன் அளித்த அதே செங்கற்களுடன் ரகுமாயி தாயாருடன், விட்டல் விஹாரில் திருக்கோயில் கொண்டான். அனைத்துக் குலத்தையும் சேர்ந்த பக்தர்கள் அனைவரும் அந்தச் செங்கற்களில் தலையை வைத்து பண்டரிநாதனை பிரார்த்தித்துக் கொள்வது இன்றும் நிகழ்கிறது.
சந்திரபாகா நதியில் ஒரே நாளில் மூன்று முறை ஸ்நானம் செய்த மஹாபெரியவர் கேள்வி கேட்ட பண்டிதர்களை, விட்டலின் பாதத்தின் அடியில் உள்ள செங்கற்களில் தலை வைத்து வணங்கினீர்களா எனக் கேட்டாராம். அவர்கள் ‘ஆம்’ என்று சொன்னார்கள். உடனே மகாபெரியவர் அர்த்தபுஷ்டியுடன் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தாராம்.