ஆன்மிகம்

இறைமை இயற்கை 08: புதியன பிறக்கச் செய்யும் நெருப்பு

செய்திப்பிரிவு

தீ என்றால் தீவிரம்; நெருப்பு என்றால் நேர்மை; கனல் என்றால் கண்டிப்பு; தணல் என்றால் தண்டிப்பு. இவை அனைத்தும் கவித்துவமான உவமைகள் அல்ல; வெப்பத்தின் இயல்பே இப்படித்தான்.

வெப்பம் ஒரு கடமை தவறாத போர் வீரன். சிறு பொறியாக இருந்தாலும், மிகப்பெரிய நெருப்புக் கோளமாக இருந்தாலும், தான் எடுத்துக்கொண்ட பணியைச் செய்து முடிப்பதில் வெப்பத்துக்கு நிகர் வேறில்லை.

கோடி கோடி ஆண்டுகளாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது கதிரவ விளக்கு. அதைப் பிரபஞ்சத்தின் இதயம் என்று சொல்லலாம். பிறப்பு முதல் இறப்புவரை துடித்துக்கொண்டே இருக்கும் இதயத்தை மனித உடம்பின் கதிரவன் என்று சொல்லலாம்.

ஏனென்றால், மனித உடம்பின் வெப்பநிலையைப் பராமரிப்பதில் இதயத்துக்குப் பெரும் பங்குண்டு. பிரபஞ்சத்தின் வெப்பநிலையைத் தக்க வைப்பதில் கதிரவனுக்குப் பெரும் பங்குண்டு.

கடமை தவறக் கூடாது

‘மாதிவர் பாகன் மறைபயின்ற

வாசகன் மாமலர் மேயசோதி’

(திருவாசகம் – திருவார்த்தை: பாடல் 1)

- என்று ஈசனை இதயத்தில் வைக்கிறார் மாணிக்கவாசகர். ‘பெண்ணின் இட பாகத்தில் இருப்பவன், மறைகளைச் சொன்னவன், மலர் போன்ற இதயத்தில் வீற்றிருக்கும் ஒளி விளக்கானவன்’ என்பது இதன் பொருள்.

உடம்புக்குள் உறைந்திருக்கும் இதயமோ அல்லது பிரபஞ்சத்தில் உறைந்திருக்கும் கதிரவனோ, ஒரு கணம் கூட தனது கடமையிலிருந்து தவறினாலும் நிலைமை என்னவாகும் என யோசித்துப் பாருங்கள். வெப்பம் கடமை தவறாது இருப்பதனால்தான், இந்த உலகம் நிலைமை தவறாது இருக்கிறது.

பொய் சொன்னால் கோயில் இல்லை

ஐம்பூதத் தலங்களில் நெருப்புக்கான தலம், திருவண்ணாமலை. அதன் தல புராணம் சொல்லும் செய்தி, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் ஒளி விளக்காக இருக்கக்கூடியது.

முன்பொரு நாளில், பிரம்மனுக்கும் திருமாலுக்கும் தங்களில் யார் பெரியவர் என்கிற கேள்வி எழுந்து, வாக்குவாதமாக மாறியது. இந்த சச்சரவு ஈசனிடம் வந்தது. ஈசன், ‘யார் ஒருவர் எனது முடியையும் அடியையும் பார்த்து வருகிறார்களோ அவரே பெரியவர்’ என்று கூறிவிட்டு, வானுக்கும் மண்ணுக்குமாய் ஒளிப் பிழம்பாக, எரிதழலாக எழுந்து நின்றான்.

ஈசனின் திருவடியைக் காண வராக அவதாரம் எடுத்து திருமாலும், தலைமுடியைக் காண அன்னப்பறவை அவதாரம் எடுத்து பிரம்மனும் புறப்பட்டுப் போனார்கள். ஈசனின் திருவடியைக் காண முடியாது திருமால் திரும்பிவர, பிரம்மனோ ஈசனின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவைக் கொண்டுவந்து கொடுத்து, தலைமுடியைக் கண்டுவிட்டதாகப் பொய் சொன்னான். அதைத் தாழம்பூவும் ஆமோதித்தது. இதைக் கேட்டு சினம் கொண்ட ஈசன், பொய் சொன்ன பாவத்துக்காக பிரம்மனுக்கு மண்ணுலகில் கோயில் இல்லை எனவும், தாழம்பூவுக்கு சிவபூசையில் இடமில்லை எனவும் தீர்ப்பிட்டான்.

நெருப்பு என்றால் நேர்மை. நெருப்புக்குப் பொய் ஆகாது. பொய் என்கிற நூலினால் பூக்களைக் கட்டலாம்; ஆனால், உண்மையைக் கட்டி வைக்க முடியாது என்பதே திருவண்ணாமலையின் தல புராணம் சொல்லும் செய்தி.

விழித்துக்கொள்வோம்

திருவண்ணாமலையில் இருந்தபடி, மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவைப் பாடல்கள் அனைத்தும் விடியலைப் பற்றியவை. அதன் ஒவ்வொரு பாடலிலும் ‘தோழிகளே எழுந்திருங்கள்; பொழுது விடியப் போகிறது’ என்று சொல்லி இறைவன் இருக்கும் திசை நோக்கி பூபாளம் பாடுகிறார் மாணிக்கவாசகர். ‘இறைவனை அறியாமல், அஞ்ஞானம் என்கிற உறக்கத்தில் இருப்பவர்களே! இறையனுபூதி என்கிற கதிரவ ஒளி வந்துவிட்டது, விழித்துக் கொள்ளுங்கள்!’ என்பதே அவற்றுக்கான பொருள்.

இறைவனின் தோற்றம் ஒளியைப் போன்றது, இறைவனின் குணம் வெப்பத்தைப் போன்றது என்பதில் சைவமும் வைணவமும் வேறுபட்டு நிற்கவில்லை.

நேர்மை நெருப்பு

‘அனைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி…’

(திருமந்திரம் – அக்கினி காரியம் – பாடல்: 3)

- என்பது திருமூலரின் திருமந்திரத்தில் ஒரு மந்திரம். இந்தப் பாடலின் மூலம் அந்தணர் வளர்க்கின்ற தீயினுள் தீயாக இருக்கக்கூடிய இறைவனே உயிர்களுக்குத் துணையாக இருப்பவன் என்கிறார் திருமூலர்.

‘சூழ்ந்ததனில் பெரிய பரநன் மலர்ச் சோதீயோ

சூழ்ந்ததனில் பெரிய சுடர்ஞான இன்பமேயோ’

(நாலாயிர திவ்யப் பிரபந்தம் – திருவாய்மொழி – பாடல் 10)

- என்கிறார் நம்மாழ்வார். ஒளி வடிவான இறைவன் ஒரு மலரைப் போல பூத்திருக்கிறான்; இன்ப வடிவான ஞானம் ஒரு சுடரைப் போல ஒளிவிடுகிறது என்பது நம்மாழ்வாரின் இறையனுபவம்.

ஆகவே, மனிதர்கள் நெருப்பைப் போல நேர்மையாளர்களாக இருக்க வேண்டும். மனிதர்கள் நெருப்பைப் போல கடமை தவறாதவர்களாக இருக்க வேண்டும். மனிதர்கள் நெருப்பைப் போல ஓயாது உழைப்பவர்களாக இருக்க வேண்டும்.

ஆக்கமே தரும்

நெருப்பைப் போல இருப்பது என்பது அழிவு குணம் அல்ல. அது ஆக்கத்துக்கான குணம். ஏனென்றால், வெப்பம் எப்போதும் ஆக்கத்தையே தரும். வெப்பத்தால் ஒன்று அழிகிறது என்றால், இன்னொன்று பிறக்கிறது என்று பொருள்.

கோடையில் கொளுத்தும் வெப்பமே, மழைக் காலத்தின் மகத்துவத்தை உணர்த்துகிறது. சூழலில் அதிகரிக்கும் வெப்பமே சலனமாக மாறி மழையாகப் பொழிகிறது. காய்ச்சலின்போது உடம்பில் அதிகரிக்கும் வெப்பமே, ஊறு செய்யும் நுண்ணுயிரிகளை அழித்து, உடம்பில் ஆற்றலைப் பெருக்குகிறது. வெப்பத்தால் எது அழிந்தாலும், இன்னொன்று பிறக்கப் போகிறது என்று அர்த்தம். இத்தகைய வெப்பத்தைத் தணியாமல் காக்க வேண்டுமானால், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உண்மை என்கிற விளக்கு எரிந்துகொண்டே இருக்க வேண்டும்.

கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகள் யாவும் இறைவனின் முகத்தைப் பார்ப்பதற்காக ஏற்றப்படுபவை அல்ல; இறைவனுக்கு எதிரில் நிற்பவர்கள் தங்களின் அகத்தைப் பார்ப்பதற்காக ஏற்றப்படுபவை.

தொடர்புக்கு: b.kalanidhi@gmail.com

SCROLL FOR NEXT