இனம், மொழி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் உதவுபவர்களே! உங்களுக்கு 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்
இதுவரை உங்களின் ராசிக்குப் பதினோராம் வீட்டில் அமர்ந்து பிரபலங்களின் நட்பு, திடீர் பணவரவு, வாகன வசதி எனப் பல வகையிலும் முன்னேற்றம் தந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் புதிய முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். இந்த ராகு சுயமாகச் சிந்திக்க வைப்பதுடன், சுயமாகத் தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார்.
குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு,வாகன வசதி பெருகும். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருந்த நீங்கள், இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். தடைப்பட்ட கல்வியைத் தொடருவார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய நண்பர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். என்றாலும் 10-ல் ராகு வருவதால் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்ப்பதால் இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற பதற்றம் இருந்து கொண்டேயிருக்கும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
27.7.2017 முதல் 4.4.2018 வரை புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். உறவினர்கள் மத்தியிலிருந்த கசப்புணர்வு நீங்கும். ஆனால், ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். ஒவ்வாமை, சிறுநீர்த் தொற்று, தூக்கமின்மை வரக்கூடும்.
5.4.2018 முதல் 10.12.2018 வரை சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். வீடு, மனை, வாகனம் புதிதாக வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புறநகர்ப் பகுதியில் வீட்டு மனை வாங்கியிருந்தால் நேரில் சென்று அவ்வப்போது கண்காணித்து வரவும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
11.12.2018 முதல் 13.2.2019 முடிய குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் ராகு பகவான் பயணிப்பதால் வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தில் செல்லும்போது மறவாமல் தலைக்கவசம் அணிந்து செல்வது நல்லது. இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்தாலும் பாசம் குறையாது. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பிப் பெரிய காரியங்களில் இறங்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும்.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற அதிகம் உழைக்க வேண்டி வரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகளைத் திருப்திபடுத்த முயல்வீர்கள். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்களைவிட அனுபவம் குறைந்தவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப்போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கேதுவின் பலன்கள்
இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, உறவினர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகளையும் பல கசப்பான அனுபவங்களையும் தந்த கேது, இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் பதற்றத்திலிருந்து விடுபட வைப்பதுடன் பக்குவப்படுத்துவார். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் இனி நடக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.
வீட்டுக்குத் தேவையான பிரிட்ஜ், ஏசி வாங்குவீர்கள். குலதெய்வக் கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், கேது 4-ல் வந்தமர்வதால் வீடு கட்டத் தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, வீடு கட்டத் தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது, கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகளும் பயணச் செலவுகளும் அதிகரிக்கும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவீர்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். ஆனால், மனைவிக்கு இரும்புச் சத்துக் குறைபாடு வந்து செல்லும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் கொஞ்சம் கவனமாகச் செயல்படுங்கள். சகோதரர்களுடன் வீண் விவாதங்கள் வரக்கூடும்.
சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வேலை கிடைக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஷேர் லாபம் தரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அண்டை வீட்டாரைப் பகைத்துக்கொள்ளாதீர்கள்.
7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். மூத்த சகோதரர்களால் பலனடைவீர்கள். வீண் வதந்திகளும் வரத்தான் செய்யும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. வங்கிக் காசோலைகளைக் கவனமாகக் கையாளுங்கள்.
இந்த ராகு - கேது மாற்றம் உங்களுக்குள் உறங்கிக் கிடந்த திறமையை வெளிப்படுத்துவதுடன், வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தை அமைத்துத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: அஷ்டமி திதி நடைபெறும் நாட்களில் பைரவரை பூசணிக்காய் தீபம் அல்லது தேங்காய் தீபமேற்றி வணங்குங்கள். வேப்பமரக் கன்று நட்டுப் பராமரியுங்கள். தொட்டது துலங்கும்.