தேவாரப் பாடல் பாடப்பெற்ற பாண்டிய நாட்டுத் திருத்தலங்களில் 13-வது திருத்தலமாகத் திகழ்கிறது திருக்குற்றாலநாதர் கோயில். சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிற 64 சக்தி பீடங்களில் இது பராசக்தி பீடம். அப்பனாகத் திருக்குற்றாலநாதரும், அம்மையாக செண்பகக்குழல்வாய்மொழியும் அருள் பாலிக்கிறார்கள். தல விருட்சமான குறும்பலாவில் காய்க்கும் பலாச் சுளைகள் இன்றும் லிங்க வடிவில் காய்ப்பது சிவபெருமானின் சிருஷ்டி அதிசயங்களில் ஒன்று.
சித்திர வடிவில் நடராஜர்
திருநெல்வேலி மாவட்டம், தென்காசியிலிருந்து 5 கி.மீ. தொலைவில், இயற்கை எழில் சூழ்ந்த வனப்பரப்பைக் கொண்டிருக்கிற குற்றால அருவிகளில் ஒன்றான பேரருவியின் கரையில் அமைந்துள்ளது இந்தக் கோயில். நடராஜ அவதாரத்தில் சிவன் அம்பலமாடிய ஐந்து திருச்சபைகளில் ஒன்றான சித்திர சபை இந்தக் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு மூலிகைச் சாற்றில் வண்ணப் பொடிகளைக் கலந்து, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட பல அழகிய வண்ணச் சித்திரங்களைப் பார்க்கலாம்.
சித்திர சபையின் முன்னால் உள்ள தெப்பக்குளத்தில் நீராழி மண்டபம் ஒன்று, கலை நுணுக்கத்துக்குக் கட்டியம் சொல்லியபடி உயர்ந்த கோபுரத்துடன் காட்சியளிக்கிறது. சித்திர சபையின் செப்புக்கூரை அற்புதமானது. இதன் வெளிப்புறச் சுவர்களில் சிங்கமுகன், சூரபத்மன் போன்ற புராணக் கதாபாத்திரங்கள் கையில் வில்லெடுத்து நாணேற்றும் காட்சிகள் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கின்றன. இந்தச் சித்திர சபை, பராக்கிரம பாண்டியன் காலத்தில் உருவாக்கப்பட்டது.
தல வரலாறு
இமயமலையில் சிவன், பார்வதி திருமணம் நிகழ்ந்த நாளில் மூன்று உலகமும் கூடியதால் வடபுறம் தாழ்ந்தும் தென்புறம் உயர்ந்தும் இருந்தன. இதனைச் சமன் செய்யும் பொருட்டுத் தேவர் கூட்டத்துக்குச் சமமாக அகத்திய முனிவரைச் சிவன் திரிகூட மலைக்கு அனுப்பினார். அவ்வாறு அகத்தியர் பொதிகை மலைக்கு வந்தபோது இந்தக் கோயில் வைணவக் கோயிலாக இருந்ததாம். மந்திரமும் மருந்துமாகிய திருவெண்ணீரும் ருத்திராட்சமும் தரித்து அகத்திய முனிவர் கோயிலுக்குச் செல்ல முயன்றபோது, சைவர் என்ற முறையிலே துவார பாலகர்களால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் அகத்திய மாமுனிவர் இலஞ்சிக்குச் சென்று தனக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை எண்ணி அங்கிருந்த குமரனை வணங்கி வேண்டினார். “வஞ்சக மறையோரை வஞ்சக வடிவத்தாலே வெல்ல வேண்டும். ஆதலால் நீர் வைணவர் போன்று கோயிலுக்குள் சென்று திருமாலைச் சிவனாக்கி மகுடாகமப்படி வழிபடுவீர்” என்று இலஞ்சி குமரனிடமிருந்து அருள்வாக்கு உத்தரவு வந்தது. அகத்தியரும் வைணவர் வேடம் பூண்டு அருவியில் நீராடி திருமாலை வணங்குபவர் போன்று கோயிலினுள் நுழைந்து பெருமாளின் தலையில் கைவைத்து ‘குறு குறு குற்றாலநாதா..’ எனக் கூறி சிவனாக உருமாற்றினாராம். ஆதியில் வைணவத் தலமாக இருந்ததன் அடையாளமாக இந்தக் கோயில் சங்கு வடிவில் அமைந்துள்ளது.
பெருமாளைச் சிவனாக மாற்றுவதற்காகத் தலையில் கைவைத்து அகத்தியர் அழுத்தியதன் விளைவால் குற்றால நாதருக்குத் தீராத தலைவலி ஏற்பட்டதால் அதைப் போக்கத் தினமும் காலசந்தி அபிஷேகத்தின்போது 64 மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சந்தனாதி தைலம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும், அர்த்தசாம பூசையின்போது மூலிகைகளைக் கொண்டு கஷாயம் தயாரித்து இறைவனுக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் தோல் நோயால் அவதிப்படுபவர்களும் குற்றால அருவியில் நீராடி குற்றால நாதரை வழிபட்டால் நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தீராத தலைவலி உள்ளவர்கள் இங்கே தரப்படுகிற தைலத்தைத் தலையில் தேய்த்துக் கொண்டால் தலைவலி தீரும் என்பது ஐதீகம்.