ஆன்மிகப் பயணத் தொடர் - பஞ்ச நரசிம்ம ஷேத்திர தரிசனம் 3
‘மடம் வேசி கூற்சோட்டம்’ என்றால் ஒருகால் மேலே வைத்து, மறுகால் மடித்து அமர்தல். பல்லி என்றால் ஊர், கிராமம், இடம் ஆகியன. அதனால் மடம் பல்லி. மட்டபல்லி.
மட்டபல்லி நாதனின் திருமஞ்சனம் ஆனந்த மயமாக இருந்தது. நரசிம்மருக்குப் பூமாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நரசிம்மர் உற்சவராகக் காட்சியளிக்கிறார். ராமர் போன்ற மெல்லிய உறுதியான உடல்வாகு, சிங்க முகம் கொண்டவராக நரசிம்மர் இருக்கிறார்.
நரசிம்மரை அமர்ந்த வண்ணத்திலேயே பெரும்பாலும் கண்டிருப்பதால், நின்ற திருக்கோலம் புதுமையாக இருக்கிறது. கண் நிறைய அந்தக் கண்ணாளனைத் தரிசித்து தீர்த்தம், சடாரி பெற்று வெளியே வந்தால், ஆண்டாள் சந்நிதி. அழகிய தமிழ் மகள் ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி.
லஷ்மி நரசிம்மர் சந்நிதியை வலம் வருவதுபோல் மலையைச் சுற்றிப் படிகள். அவற்றில் ஏறி வந்தால், பூந்தோட்டம். மஞ்சள், நீலம், சிவப்பு, வெள்ளை எனப் பல வண்ணங்களில் மலர்ந்து மனம் நிறைக்கின்றன. மட்டபல்லி நாதனைவிடச் சுவை மிகுந்த தேன் இருக்க முடியுமா என்பதாலோ என்னவோ தேனீக்கள் இம்மலர்களின் அருகில்கூட வருவதில்லை.
அந்த வழியாக வந்தால் மீண்டும் யக்ஞவாடிகை. நான்கடி உயர முக்கூர் சுவாமிகளின் சிலாரூபத்தையடுத்த சந்நிதியின் உள்ளே சென்றால் அவர் ஆராதித்த சிலாரூபங்கள் மற்றும் படங்கள்.
லஷ்மி நரசிம்ம யக்ஞ மூர்த்தி 108 யக்ஞங்களைப் பெற்றவர். இவருக்கு இடப்புறம் மாலோல நரசிம்மன், வலப்புறம் பானக நரசிம்மன், லஷ்மி நரசிம்மர், வ்யாக்ர நரசிம்மர், லஷ்மி நாராயணன், லஷ்மி ஹயக்கிரீவர், யோக நரசிம்மர், சொர்ண மகாலஷ்மி, சொர்ண நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ஸ்ரீநிவாசன், ஸ்ரீதேவி, பூதேவி, ரங்கநாதப் பெருமாள், ரங்கநாயகித் தாயார் உள்பட பல தெய்வ சொரூபங்கள் நித்ய கொலு வீற்றிருக்கி றார்கள். மேலும் நம்மாழ்வார், கலியன், பாஷ்யகாரர் ராமானுஜர், ஸ்ரீ சுவாமி தேசிகன், ஆதிவண் சடகோப யதீந்திர மகாதேசிகன் மற்றும் முக்கூர் சுவாமிகள் ஆகியோர் விக்கிரரூபத்தில் அருள் பாலிக்கிறார்கள்.
அஹோபில மட அனுஷ்டானத்தில் முக்கூர் சுவாமிகள் வந்துள்ளதால் 42-வது பட்ட இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் முதல் தற்போது உள்ள 46-வது பட்ட அழகிய சிங்கர் ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் ஆகியோரது படங்களும் உள்ளன. ஆண்டாள், சாளக்கிராம சிலைகளும் உண்டு. இங்கிருக்கும் முக்கூர் சுவாமிகளின் பாதுகைக்கு நித்ய பாதுகா ஆராதனம் நடக்கிறது. முக்கூர் சுவாமிகளின் சிலாரூப பூஜையும் தொடர்ந்து நடைபெறுகிறது.
சுடச் சுட நெய் மணக்கும் கேசரியும், கைவிரலிடையே நெய் வழியும் வெண் பொங்கலும் பிரசாதமாக வந்தது. அந்த நேரத்தில் அங்கு வந்திருந்த கிராம மக்களுக்கு மட்டுமல்ல யக்ஞ வாடிகையில் தங்கியிருந்த அனைவருக்கும் இந்தப் பிரசாதம் காலை உணவாக விநியோகிக்கப்பட்டது. மட்டபல்லி யக்ஞ வாடிகை மடப்பள்ளியில் இருந்து கிளம்பும் அனைத்துப் பக்தர்களுக்கும் தேவைக்கு ஏற்ப இங்கே கட்டுசாதம் உண்டு.
சுயம்பு நரசிம்மர்
இங்கிருந்து கேதவரம் செல்ல நீர் வழி, நில வழி என்ற இரு வழிகள் உண்டு. நீர் வழியில் ஃபெர்ரியில் செல்ல வேண்டும். இந்த வழியில் சென்றால் ஐம்பது கி.மீ தூரத்தைக் குறைத்துவிடலாம். நில வழி என்றால் குண்டும் குழியுமான மண் சாலைதான். யக்ஞம் நிகழ்த்த பெருமாள் தேர்ந்தெடுத்துக் கொடுத்த இடம்தான் கேதவரம் என்றார் முக்கூர் சீனிவாசன்.
“இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் எங்கிருக்கிறது என்றே தெரியாது. போஸ்ட் ஆபீசில் கேட்டால் அவர்களுக்கும் தெரியவில்லை. கம்பை எடுத்துக் கொண்டாயா என்று கேட்பார் அப்பா. வழியில் மழை நீர் தேங்கி இருந்தால் எவ்வளவு ஆழம் என்று அளக்க எப்போதும் எடுத்துக் கொள்ளும் கழி அது. குண்டும் குழியுமாக இருந்த சாலை வழியே முதல் முறை அங்கு போய்ச் சேர்ந்தபோது மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. கிருஷ்ணா நதிக்கரையில் ஆளரவமற்ற இடத்தில் கோயில்” என்று விவரித்தார் அவர்.
இங்கு யக்ஞ மந்திரத்தை ஸ்ரீமுக்கூர் சுவாமிகளுடன் சீனிவாசனும் இணைந்து ஜபித்தாராம். கேதவரம் என்பது அந்த ஊர் ராஜாவின் பெயரையொட்டி வந்தது. கேத ராஜூ என்ற பெயர் அவருக்கு.
கேதவரம் நரசிம்மரை கிருஷ்ணா நதிக் கரையில் இருந்து, இங்குள்ள மலைக்கோயிலில் எழுந்தருளப் பண்ணி இருக்கிறார்கள். அதையொட்டிய அடர்ந்த காடு உள்ள மலையின் மீது கரடு முரடான பாதையில் ஏறினால் சுயம்புவாக நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். அதற்கும் மேலே மீண்டும் தொடர்ந்து கரடு முரடான மலைப்பாதையில் ஏறினால் சுயம்புவாகத் தாயார்.
வெயில் கொளுத்தும் நடு மத்தியானம். அத்துவானக் காடு. இப்போதும் ஆளரவமற்ற இடம்தான். ஆனால் இனிமையான இயற்கை சூழ்ந்த இடம். இந்தத் திருக்கோயிலில் குடிகொண்டிருக்கும் இரு நரசிம்மரையும் வணங்கிய பின், வெளியே வந்தால்
கிருஷ்ணா நதியின் சொத்தான கூழாங்கற்கள் விரவிக் கிடக்க, காலைப் பதிய வைத்து நடக்கவே தடுமாற்றமாக இருக்கிறது. இந்தக் கேதவரம் நரசிம்மர் கேட்ட வரம் அளிப்பவர். இன்று பெருமாள் மலையடிவாரத்தில் தானும் பாதுகாப்பாக இருந்து கொண்டு, பக்தர்களையும் பாதுகாக்கிறார் என்பது நிதர்சனம். இங்கிருந்து அடுத்து செல்லவிருப்பது வாடபல்லி.
ஸ்ரீ புத்ர ப்ராப்த்யஷ்டகம்
முக்கூர் சுவாமிகள் அருளிய ஸ்ரீ புத்ர ப்ராப்த்யஷ்டகத்தின் முதல் சுலோகம். குழந்தை பிறக்க மற்றும் பிறந்த குழந்தைகள் சிறப்புடன் வாழ அருளிச் செய்தது.
ப்ரஹ்லாத வரதம் ச்ரேஷ்டம் ராஜ்யலஷ்ம்யா ஸமந்விதம்
புத்ரார்த்தம் ப்ரார்த்தயே தேவம் மட்டபல்யாதிபம் ஹரிம்
சுதம் தேஹி! சுதம் தேஹி! சுதம் தேஹி!