ஆன்மிகம்

தெய்வத்தின் குரல்: குருவாகத் திருமால்

செய்திப்பிரிவு

‘நாராயணம் பத்மபுவம்’ என்று ஆரம்பித்தே, ஸ்ரீ சங்கர பகவத் பாதரைப் பின்பற்றும் பிரம்ம வித்யா சம்பிரதாயத்திற்கு குரு பரம்பரை சொல்வதால், இங்கே அந்த முதல் குருவான விஷ்ணுவைக் குறிப்பிட்டுச் சொல்வது ரொம்பவும் பொருத்தமாயிருக்கிறது. சகஸ்ரநாமத்தில் அவருக்கு குரு’ என்றும் ‘குரு - தமன்’ என்றும் நாமாக்கள் கொடுத்திருக்கிறது. குரு - தமன் என்றால் ஏனைய குருமார்களைவிட ச்ரேஷ்டமான உத்தம குரு என்று அர்த்தம்.

இங்கே குரு என்பதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும்போது, மஹாவிஷ்ணு சர்வ வித்யைகளையும் உபதேசிப்பதால் குருவாகிறார் என்று சொல்லி, அதோடு இன்னொரு அர்த்தமாக சர்வ ஜீவர்களையும் பிறப்பிப்பவர் என்பதாலும் அவர் குரு என்று சொல்லியிருக்கிறார்.

இதிலிருந்து பிறப்பைத் தரும் பிதாவைக் குரு என்று சொல்வதுண்டு என்று புரிந்துகொள்ளலாம். நன்றாகத் தெரிந்த விஷயம் - அப்பாவுக்கு குருப் பட்டம் உண்டு என்பது.

‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்த பொது வசனம். இதில் மாதா-பிதா இரண்டு பேருமே குருவின் காரியமான நல்வழிப்படுத்துதலையும் செய்பவர்கள்தான். ரொம்பக் குழந்தையாக இருக்கும்போது அம்மா பரம இதமாக கொஞ்சம் கொஞ்சம் நல்லதைச் சொல்லிக் கொடுப்பாள்.

அப்புறம் கொஞ்சம் விவரம் தெரிகிற வயசிலிருந்து எட்டு வயசில் குரு என்றே இருப்பவரிடம் குருகுலவாசம் பண்ணுவதற்காகக் குழந்தையை ஒப்படைக்கிற வரையில் அப்பா, அம்மாவைவிடக் கொஞ்சம் கண்டிப்புக் காட்டி, ‘இப்படியிப்படி இருக்கணும், பண்ணணும்’ என்று அநேக நல்ல விஷயங்கள் சொல்லிக் கொடுப்பார். அதனால் அவருக்கே குரு பெயர் ஏற்பட்டிருக்கிறது.

‘குரு’ என்றால், அட்சரம் அட்சரமாகப் பிரிக்காமல் நேராக ஒரே வார்த்தையாக அர்த்தம் பண்ணும்போது ‘பெரியவர்’ என்றே அர்த்தம். அகத்திற்குப் பெரியவர் head of the family - அப்பாதானே? அதனால் அவர் குரு.

சாகிற ஜன்மாவைத் தரும் அப்பாவே சாகாமையில் ஜன்மிக்கச் செய்கிற குருவாகவும் ஆகி - (சிரித்து) ‘கொஞ்சம்’ அப்பா, ‘முழு’ அப்பா இரண்டும் ஆகி - இருப்பதையும் ஆதியிலிருந்து நிறையப் பார்க்கிறோம். இப்படித் தொடர் சங்கிலியாகப் போய் அப்பா - பிள்ளை வம்சாவளியே குரு - சிஷ்ய வம்சாவளியாக இருந்திருப்பதும் உண்டு.

நம்முடைய பிரம்ம வித்யா குரு பரம்பரையே அப்படித்தான் முதல் அஞ்சு, ஆறு பேர்வரை போகிறது. இந்த சம்பிரதாயத்தில் முதல் குரு நாராயணன். அவர் நேர் குருவாக இருந்து அவரிடம் உபதேசம் பெற்று இச்சம்பிரதாயத்தில் அடுத்த குருவாக ஆனவர் யாரென்றால், அவருடைய பிள்ளையான பிரம்மாதான். அந்தப் பிரம்மாவை குருவாகக்கொண்டு அவருக்கு அடுத்து குரு ஸ்தானம் வகிக்கிறவர் வசிஷ்டர்.

அவர் பிரம்ம புத்ரர்தான். அவருக்கு அடுத்தவர் வசிஷ்டருடைய புத்ரரான சக்தி. அடுத்தவர் இந்தச் சக்தி மகரிஷியின் புத்ரரான பராசரர்.

பராசரருக்கு அப்புறம் அவருடைய புத்ரரான வியாஸாசார்யாள், பௌத்ரரான சுகாசார்யாள் என்று அதுவரை அப்பா - பிள்ளைகளே குரு - சிஷ்யர்களாக அமைந்துதான் நம் குரு பரம்பரை உருவாகியிருக்கிறது.

நைஷ்டிகப் பிரம்மசாரியான சுகாசார்யாவில் இருந்துதான் மாறுதல். அவர் சந்நியாசியான கௌடபாதருக்கு குருவாகி உபதேசித்ததிலிருந்து கௌடபாதருக்கு அப்புறம் கோவிந்த பகவத்பாதர், நம்முடைய ஆசார்யாள்.

அவருடைய சந்நியாச சிஷ்யர்கள், அவர்களுடைய பரிபாலனத்தில் வந்த மடாலய அதிபதிகளின் பரம்பரை என்பதாக, குருவும் சந்நியாசி, சிஷ்யரும் சந்நியாசி என்றாயிற்று.

ஜெனரலாகவே குரு வம்சங்கள் முழுவதும் வெறும் அப்பா, பிள்ளை வம்சம் மட்டுமில்லை. அந்த அப்பா, பிள்ளைகளே குரு, சிஷ்யர்களாகவும் இருந்த வித்யா சம்பிரதாய பரம்பரைகள்தான்.

தெய்வத்தின் குரல்
(மூன்றாம் பாகம்)

SCROLL FOR NEXT