எப்போதும் லட்சியத்தை நோக்கிப் பயணிப்பவர்களே! 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும் கேதுவும் இணைந்து என்ன பலன்களைத் தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்து கொண்டு உங்களை நாலாபுறமும் பந்தாடியதுடன், அம்மாவுடன் வீண் வாக்குவாதங்களையும் உடல்நலக் குறைவையும் கொடுத்து வந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு 3-ம் வீட்டுக்கு வந்தமருவதால் எதிலும் வெற்றியுண்டாகும். தடைபட்ட சுபகாரியங்களை இனி சிறப்பாக நடத்துவீர்கள். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.
கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாயின் ஆரோக்கியம் சீராகும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துப் பெரிய முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்வி, வேலைக்காக வெளிநாடு அனுப்பிவைப்பீர்கள். வீட்டில் பழுதான மின்னணு, மின்சாரச் சாதனங்களை மாற்றுவீர்கள். நீங்கள் வெகுநாட்களாக மனதுக்குள்ளேயே கட்டிவைத்திருந்த கனவு வீடு நிஜமாகும் வாய்ப்பு அமையும். அதற்கான வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். பிரபலங்களின் நட்பு வட்டம் இனி விரியும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
27.7.2017 முதல் 4.4.2018 வரை உங்களின் தன பூர்வ புண்ணியாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் உங்களின் யோகாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். புதிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நவீனரக வாகனம் வாங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும்.
11.12.2018 முதல் 13.2.2019 முடிய உங்களின் அஷ்டம லாபாதிபதியான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் ராகு பகவான் பயணிப்பதால் மூத்த சகோதர வகையில் கருத்து மோதல்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.
வியாபாரத்தில் பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையாட்கள் தங்களது தவறை உணருவார்கள். கல்வித் தகுதியில் சிறந்த அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.
கேதுவின் பலன்கள்
இதுவரையில் உங்கள் ராசிக்குப் பத்தாமிடத்தில் அமர்ந்து எந்த வேலையையும் முழுமையாகச் செய்யவிடாமல் தடுத்த கேது, இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்கிறார். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பநிலை மாறும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களின் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள். கேது ஒன்பதாம் வீட்டுக்கு வருவதால் தந்தையாருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தந்தைவழிச் சொத்துகளால் அலைச்சல்களும் செலவுகளும் ஏற்படும். பத்திரங்களைக் கவனமாகக் கையாளுங்கள். வேலையின்றித் தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அலைச்சல் குறையும். சகோதரர் சாதகமாக இருப்பார். சொத்து சேரும். கமிஷன் வகைகளால் ஆதாயமடைவீர்கள். மனைவி பக்கபலமாக இருப்பார். அவருக்கு வேலை கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள்.
விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். என்றாலும் மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புதுப் பதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். சில நேரங்களில் சளித் தொந்தரவு, கழுத்து வலி வந்து நீங்கும்.
7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சிக்கனமாக இருப்பது நல்லது. அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
ராகு, கேது பெயர்ச்சி கஷ்டநஷ்டங்களிலிருந்து உங்களைக் கரையேற்றுவதுடன் வசதியையும் நிம்மதியையும் அதிகரிக்க வைக்கும்.
பரிகாரம்: பிரதோஷ நாட்களில் இளநீர் தந்து சிவபெருமனையும், நந்தீஸ்வரரையும் வணங்குங்கள். மாதுளை மரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். எதிலும் வெற்றி கிடைக்கும்.