மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்களே! 27.07.2017 முதல் 13.02.2019 வரை ராகுவும் கேதுவும் அடுத்து வரும் ஒன்றரை வருடங்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்துகொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும் மன தைரியத்தையும் பெரிய மனிதர்களின் நட்பையும் கொடுத்துவந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம் ஒருபக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அதற்குத் தகுந்தாற்போல் கொஞ்சம் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். தடைப்பட்டுப் பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் இப்போது கைகூடும்.
குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை பாதிக்கப்படாது. உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு விலகும். பாசம் அதிகரிக்கும். சகோதரியின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். உங்களிடம் கடன் வாங்கிக் கொடுக்காமல் இருந்தவர்கள், பணத்தைத் திருப்பித் தருவார்கள். பால்ய நண்பர்களின் உதவி கிடைக்கும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகு பகவான் செல்வதால் அழகு, இளமை கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சொந்தபந்தங்களால் ஆதாயம் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள்.
5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் சனி பகவானின் பூசம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் திருமணம், கிரகப்பிரவேசம் என வீடு களை கட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடனாகக் கொடுத்திருந்த பணம் கைக்கு வரும். வேற்றுமொழியினர், மதத்தினர் உதவுவார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைவழியில் சொத்து சேரும்.
குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகு பகவான் பயணிப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவியாலும் மனைவிவழி உறவினராலும் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். புதுச் சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்த முயல்வீர்கள். ஆனால், புதிதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து அறிமுகமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள்.
கேதுவின் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து தந்தைக்கு உடல்நலக் குறைவையும் பணப் பற்றாக்குறையையும் தந்த கேது, இப்போது உங்களின் ராசிக்கு எட்டில் வந்தமர்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மன நிம்மதி உண்டு. வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மனைவியிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. முன்கோபம் அதிகமாகும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் எட்டில் நிற்கும் கேது ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவார். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிக வேலைச்சுமையால், நேரந்தவறி வீட்டுக்குச் செல்ல நேரிடுவதால், குடும்பத்தில் சிறிய கருத்து மோதல்கள் வரும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும்.
சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் பணப்புழக்கம் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு கட்டக் கடன் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். இளைய சகோதரர்கள் மதிப்பார்கள். வேலை கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்.
இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி பொதுநலப் போக்கிலிருந்த உங்களைத் தன்னலத்துக்கு மாற்றுவதுடன் சேமிக்க வைக்கவும் செய்வார்.
பரிகாரம்: ஏகாதசி நாட்களில் துளசி மாலை அணிவித்து பெருமாளை வணங்குங்கள். எலுமிச்சை மரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.