காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்களே! 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டத்தில் ராகு-கேது மாறுவதால் என்ன செய்ய போகிறார்கள் என்று பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்குப் பன்னிரெண்டில் அமர்ந்துகொண்டு அடுக்கடுக்காகப் பல பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவதால் தன்னம்பிக்கையையும் பணவரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். கலகம், கலாட்டாவாக இருந்த குடும்பத்தில் இனி அமைதி திரும்பும்.
உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தைப்பேறு கிட்டும். அதிக வட்டிக் கடனை அடைத்து முடிப்பீர்கள். பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள்; உயர்கல்வியில் வெற்றிபெறுவார்கள். மகனின் அடிமனதில் இருக்கும் தனித் திறமைகளைக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். 11-ல் ராகு இருப்பதால் அரைகுறையாக நின்றுபோன பல வேலைகள் உடனே முடியும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
27.7.2017 முதல் 4.4.2018 வரை புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் பிரச்சினைகள் எப்படி இருந்தாலும் அதைச் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த முயல்வீர்கள்.
5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகு பகவான் சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். மகன் கூடாப்பழக்கங்களிலிருந்து மீள்வார். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணத்தை நடத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளைக் குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பழைய கடன் பிரச்சினை ஒன்று தீரும்.
11.12.2018 முதல் 13.2.2019 முடிய குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் ராகு பகவான் பயணிப்பதால் கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். ஆனாலும் பணவரவுக்குக் குறைவிருக்காது. புதிதாக ஆடை, ஆபரணங்கள் சேரும்.
வியாபாரம் செழிக்கும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். வெளிமாநிலம், வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியால் சிலர் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய தொலைநோக்குச் சிந்தனைக்குப் பாராட்டுகள் கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்
இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆனால், அவர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சேமித்து வைத்த காசில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவீர்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால், உள்மனதில் ஒருவிதத் தயக்கமும் தடுமாற்றமும் சந்தேகமும் வந்து நீங்கும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்
27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால் சொத்து வாங்குவது, விற்பதில் கவனம் தேவை. குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் பணம், நகைகளையெல்லாம் வங்கி லாக்கரில் வைத்துவிட்டுச் செல்வது நல்லது. சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
30.11.2017 முதல் 06.08.2018 வரை சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். புதுப் பதவிகள், பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும்.
7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் பழைய வீட்டை இடித்துக் கட்டுவதற்குச் சில புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அரசு காரியங்கள் சற்று தாமதமாகி முடியும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.
இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி பழைய பிரச்சினைகளிலிருந்து விடுபட வைப்பதுடன் புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவதாக அமையும்.
பரிகாரம்: சதுர்த்தி திதி நாட்களில் ஸ்ரீவிநாயகப் பெருமானை அருகம்புல் தந்து வணங்குங்கள். பவழ மல்லி நட்டுப் பராமரியுங்கள். செல்வம் சேரும்.