உலக யோகா தினத்தை ஒட்டி நாடு முழுவதும் யோகா குறித்த பேச்சுக்கள் உற்சாகத்துடன் ஒலித்தன. பல இடங்களிலும் யோகாசனப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாகவே யோகா குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவந்தாலும், ஜூன் 21-ம் தேதியை ‘உலக யோகா தினம்’ என ஐ.நா. சபை அறிவித்த பிறகு அந்த விழிப்புணர்வு கணிசமாக அதிகரித்திருக்கிறது. யோகாசனப் பயிற்சி பெறுபவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறார்கள். இந்தச் சூழலில் யோகா என்பதன் ஆன்மிக அம்சத்தை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
யோகம் என்பது இந்தியத் தத்துவ இயலில் ஷட் தரிசனங்கள் எனச் சொல்லப்படும் ஆறு தத்துவப் பார்வைகளில் ஒன்று. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை என்பவையே அந்த ஆறு தரிசனங்கள். இவற்றில் யோகம் என்பது என்ன என அறிய நாம் பதஞ்சலி முனிவர் இயற்றிய ‘யோக சாஸ்திரம்’ என்னும் நூலைப் படிக்கலாம். மகாகவி பாரதியார் உள்ளிட்ட பலர் இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
பதஞ்சலியின் யோக சாஸ்திரம் பொதுவாக ராஜ யோகம் என்று சொல்லப்படும் வகையில் வருவது. இதைத் தவிர, கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் ஆகிய யோகங்களும் உள்ளன.
யோகத்தை நோக்கிய பல வழிகள்
இவற்றைப் பார்க்கும்போது ஒரு விஷயம் தெளிவாகப் புலனாகும். யோகம் என்பது யோகாசனம் என்பதோடு மட்டும் தொடர்புடையதல்ல. அது ஆழமானது. விரிவான பொருள் கொண்டது. அது மட்டுமல்ல. யோகம் என்பதை அடையப் பல வழிகளும் உள்ளன.
யுஜ் என்பதுதான் யோகம் என்பதன் வேர்ச்சொல். யுஜ் என்றால் இணைவது என்று பொருள். இணைவது என்றால், ஜீவாத்மா பரமாத்மா இணைவு என்று எளிமையாகப் பொருள் கொள்ளலாம். எல்லைக்குட்பட்ட மனித வாழ்வு எல்லையற்ற பரம்பொருளுடன் இணைவது, அல்லது இரண்டறக் கலப்பது என்று இதை விளக்கலாம்.
பதஞ்சலி முனிவர் எழுதிய யோக சாஸ்திரத்தில் யோகம் எட்டாகப் பகுக்கப்படுகிறது. அதில் இறுதி நிலை சமாதி. அதாவது, பரம்பொருளுடன், அல்லது எல்லையற்ற உயிர் சக்தியுடன் இரண்டறக் கலந்து அதனோடே ஐக்கியமாகிவிடுதல்.
ஒருவர் தான் செய்யும் பணியை யோக உணர்வுடன், அதாவது, விருப்பு வெறுப்பின்றிச் செய்தால் பரம்பொருளை அடைய முடியும் என்கிறது கர்ம யோகம். ஞானத்தின் வழியே யோகத்தை எட்டுவது ஞான யோகம். பக்தியின் வழியே பரம்பொருளுடன் ஐக்கியமாவது பக்தி யோகம். ராஜ யோகம் என்பது மனித வாழ்வு முழுமையையும் தழுவிய அணுகுமுறை. உடல், மனம், அறிவு, அன்றாட வாழ்வு ஆகிய அனைத்தையும் பண்படுத்துவதன் மூலம் பரம்பொருளுடன் ஐக்கியமாகும் வழியைச் சொல்லும் தத்துவம்.
பதஞ்சலியைப் பொறுத்தவரை யோகம் என்பது மனித வாழ்வை மேலான தளத்துக்குக் கொண்டு செல்லும் ஆன்மிகப் பயிற்சி. அந்தப் பயிற்சியில் அன்றாடச் செயல்பாடுகள், உணர்வுகள், சொல், செயல், சிந்தனை, உடல் நிலை ஆகிய அனைத்தையும் கடுமையான பயிற்சிக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டு அங்கங்களைக் கொண்ட இந்த யோகம், ஒரு மனிதனின் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
உதாரணமாக, யமம் என்னும் பயிற்சியில் அஹிம்சை, சத்தியம் ஆகியவை இடம்பெறுகின்றன. நியமம் என்பதில், உடல் தூய்மை, உறக்கம், உணவு ஆகிய அம்சங்கள் பேசப்படுகின்றன. ஆசனம் என்பது உடற்பயிற்சி. பிராணாயாமம் என்பது மூச்சுப் பயிற்சி. பிரத்யாஹாரம் என்பது புலன்களை உள்முகமாகத் திருப்புதல். தாரணை என்பது ஏதேனும் ஒரு பொருளில் மனதைக் குவித்தல். அதிலேயே ஆழ்ந்திருப்பதுதான் தியானம். அதில் ஐக்கியமாகிவிடும் நிலை சமாதி எனப்படுகிறது. இவ்வாறாக பதஞ்சலியின் யோக சாஸ்திரம் ஆன்மிகப் பயணத்தைத் துல்லியமாக வரையறுக்கிறது. குறிப்பிட்ட எந்தக் கடவுளும் இதில் முதன்மைப் படுத்தப்படுவதில்லை.
உடலுக்கு ஆரோக்கியம் மனதுக்கு அமைதி
இதில் மூன்றாவது, நான்காவது அம்சங்களான ஆசனம், பிராணாயாமம் ஆகியவற்றையே யோகாசனப் பயிற்சிகளில் நாம் கற்கிறோம். இந்தப் பயிற்சிகள் உடலுக்கு ஆரோக்கியத்தையும் மனதுக்கு அமைதியையும் தர வல்லவை. ஆனால் இவற்றை வெறுமனே ஆரோக்கியத்துக்கான கருவிகளாக மட்டும் பயன்படுத்துவது யோகத்தின் முழுப்பயனையும் பெறுவது ஆகாது. பெரிய விருந்தில் இனிப்பை மட்டும் எடுத்துச் சாப்பிடுவதுபோல ஆகிவிடும்.
மாறாக, யோக சாஸ்திரம் சொல்லும் எட்டு அங்கங்களையும் சிரத்தையோடு கடைப்பிடித்தால் வாழ்வில் மகத்தான மாறுதல்கள் ஏற்படலாம். மனித வாழ்வின் லட்சியமே இறைவனை அடைதல் என இந்திய ஆன்மிகம் கூறுகிறது. அந்த லட்சியத்தை அடையப் பல வழிகளையும் அது சொல்கிறது. ராஜ யோகம் காட்டும் வழி நமது வாழ்வு முழுவதையும் பண்படுத்தி, நம்மை இறை நிலைக்கு உயர்த்தக்கூடிய வழி.
உலக யோகா தினத்தை ஒட்டி ஆசனங்களையும் மூச்சுப் பயிற்சியையும் பலரும் செய்யத் தொடங்கியிருப்பார்கள். ஏற்கெனவே செய்துவருபவர்கள் மேலும் உற்சாகத்துடன் செய்யும் முனைப்பைப் பெற்றிருப்பார்கள். யோகத்தின் அனைத்து அங்கங்களையும் கடைப்பிடிக்கும் முயற்சியை இதன் அடுத்த கட்டமாக வைத்துக்கொள்ளலாம்.
ஆன்மிக ரீதியாக நம் வாழ்வு மலர, முழுமையை நோக்கி விரிவடைய உதவக்கூடியது யோகம். அத்தகைய யோகத்தைப் பெறும் விதமாய் நம் வாழ்வை மாற்றும் தினமாக உலக யோகா தினத்தை நாம் அமைத்துக்கொள்ளலாம்.