சிதறிக் கிடக்கும் சக்தியை திரட்டிச் சேர்ப்பதில் வல்லவர்களே! சந்திரன் சாதகமாக இருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் சிங்கத்திற்கு வாலாக இருப்பதைவிட நரிக்குத் தலையாக இருக்கும் முடிவுக்கு வருவீர்கள். வறண்டு கிடக்கும் பணப்பையில் இனி பசபசப்பு அதிகமாகும். விருந்தினர்களின் இடைவிடாத வருகையால் வீடு களைகட்டும். மகிழ்ச்சி கூடும். மனைவியின் அலட்சியம் தீரும். மனைவிவழி உறவினர்கள் மதிக்கும்படி பல வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆகஸ்ட் மாதம் வரை வேலைச்சுமையும் திடீர் பயணங்களும் அதிகரிக்கும்.
சகோதர உறவுகள் உங்களிடம் சரணாகதி அடைவார்கள். பொறுப்புகள் கூடுதலாகும். பால்ய நண்பர்களின் பிரச்சினைகளை முன்னின்று முடிப்பீர்கள். பழைய கடனை பைசல் செய்ய புறநகரிலுள்ள வீட்டு மனையை விற்பீர்கள். வருடக் கடைசிப் பகுதியில் புது வீடு, மனை வாங்குவீர்கள். ஜூன் 18-ம் தேதி முதல் குரு உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் எண்ணெய் வடியும் முகம் பளிச்சிடும். குளியலறையில், உடை மாற்றும் அறையில் வாசனை திரவியங்கள் படை எடுக்கும். முகம் மற்றும் பல்லை நவீன சிகிச்சையால் சீரமைத்துக் கொள்வீர்கள்.
வசீகரம், இளமை கூடும். ஏமாந்த பணம் கைக்கு வரும். தள்ளிப்போன குழந்தை பாக்கியம் கிட்டும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். உயர்கல்விக்காகவும் உங்கள் மகன் உங்களை பிரியும் வாய்ப்பு வரும். வருட முற்பகுதியில் கேதுவும் பிற்பகுதியில் ராகுவும் சாதகமாக இருப்பதால் பங்குச் சந்தையால் பணம் வரும். அண்டை மாநிலத்தாரின் அறிமுகம் பயனுள்ளதாக இருக்கும் அரசியலில் சிலர் நுழைவீர்கள். எடுத்த எடுப்பிலேயே பெரிய பதவிகள் கிடைக்கும்.
ஏழரைச் சனி இருப்பதால் உங்களின் நெருங்கிய நண்பர்களை புதியவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டாம். திடீர் சிநேகிதர்களை வீட்டிற்குள் அழைத்து வருவதை தவிர்க்கவும். இலவசமாக கூடாப்பழக்கங்கள் உங்களை தொற்றிக்கொள்ளக் கூடும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் ஜனவரி, மே, ஜூன், ஆகஸ்ட், நவம்பர் மாதங்கள் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்களால் நிம்மதி அடைவீர்கள். உத்தியோகத்தில் சம்பளம் உயரும். பதவியும் உயரும். கூடுதல் பொறுப்புகளையும் ஏற்கவேண்டி வரும்.
வழிபாடு - மலை மீதிருக்கும் பெருமான்
மதிப்பெண் - ஜனவரி - மே - 55/100, ஜூன் - ஆகஸ்ட் - 60/100, செப்டம்பர் - டிசம்பர் - 90/100