திருப்பதியில் வேங்கடவன் கோயிலுக்குச் செல்லும் காட்டுப் பாதைக்குச் சற்றுத் தள்ளி இருந்த குடிசையில் ஒரு குயவர் வாழ்ந்தார். அவர் தினமும் மண் பாண்டங்கள் செய்யும் சக்கரத்தைச் சுழற்றிப் பானைகள், குவளைகள் செய்வார். அந்தப் பாத்திரங்களை மலை ஏறிச் செல்லும் பக்தர்களுக்கு வழங்குவார். திருமலையில் புதிய மண்பாண்டங்களிலேயே பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கும் சம்பிரதாயம் உண்டு. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மண் பாண்டங்கள் வழங்க வேண்டியிருந்தது. அதற்காக அவர் கடுமையாக உழைத்தார்.
தினமும் அதிகாலையில் எழுந்து அருகிலுள்ள கழனிவெளிக்குச் செல்வார். நல்ல சுத்தமான களிமண்ணைத் தேர்ந்தெடுத்து, அதைப் புளிக்கவைத்த பிறகு, காலால் மிதித்துப் பிசைந்து சக்கரத்தில் வைத்துச் சுழற்றி, பானைகளாகவும் குவளைகளாகவும் வனைவார். காய்ந்த பிறகு அவற்றை பக்தர்களுக்கு வழங்குவார். அதற்கு பதிலாக பக்தர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டார். அவர்களே விரும்பிக் கொடுப்பதை ஏற்றுக்கொள்வார். சூரிய உதயத்திலிருந்து அந்திப் பொழுது வரை ஓயாமல் உழைத்த அவருக்கு, பெருமாளை நினைக்கக்கூட நேரமில்லை. கோயில், குளமென்று போய் பூசித்ததும் இல்லை.
பிடி மண்ணில் பிரதிஷ்டை
ஒன்றை மட்டும் தவறாமல் செய்தார். காலையில் வேலையைத் தொடங்குவதற்கு முன்பாக ஒரு பிடி மண்ணெடுத்து அதைக் குழைத்துப் பக்குவப்படுத்தி வேங்கடவனின் திரு உருவத்தைச் சமைப்பார். அதை ஒரு பலகையின் மேல் நிறுத்திக் கும்பிட்டுவிட்டு எழுவார். பிறகு மாலையில் வேலை எல்லாம் முடிந்து கையை அலம்பும் வேளையில், கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் மண்ணையெல்லாம் வழித்துச் சேர்த்து அதை ஒரு தாமரை மலராக வடித்து, மணையின்மேல் நிறுத்தியிருக்கும் பெருமாளின் சிரசில் வைத்து வணங்கிவிட்டு, சாப்பிடப் போய்விடுவார். இதுவே அவரது தினசரி வாடிக்கை.
பொன்மாலை வேண்டா பெருமாள்
ஒரு நாள் அந்த நாட்டை ஆண்ட மன்னன், பெருமாளை தரிசிக்க மலைக்கு வந்தான். அவனுக்கு ஒரு பிரார்த்தனை இருந்தது. பெருமாளுக்குப் பொன்மலர்களால் மாலை சூட்டுவதாக வேண்டிக்கொண்டிருந்தான். அர்ச்சகர், பெருமாளுக்கு பூசைக் காரியம் முடிந்த நிலையில் மன்னன் தான் கொண்டுவந்திருந்த பொன்மாலையை அவரிடம் கொடுத்துப் பெருமாளுக்குச் சூட்டச் செய்தான். ஆனால் அதைப் பெருமாள் ஏற்றுக்கொள்ளவில்லை. அர்ச்சகர், கற்பூரத் தட்டை ஆரத்திக்காக கையில் எடுத்த போது, அந்த பொன்மாலை அறுந்து கீழே விழுந்தது.
அர்ச்சகர் பதறிப்போனார். சன்னிதியில் நின்று கொண்டிருந்த மன்னனுக்கும், அவனது பரிவாரங்களுக்கும் ஒரே திகைப்பு. அர்ச்சகர் அந்த மாலையை எடுத்து முடிந்து மறுபடியும் சூட்டினார். அது மீண்டும் அறுந்து கீழே விழுந்தது. அர்ச்சகர் மாலையை மூன்றாவது முறையும் சூடப் பார்த்தார். இம்முறையும் அது அறுந்து விழுந்தது. மன்னன் சொல்ல முடியாத வருத்தத்துடன் அரண்மனைக்குத் திரும்பினான்.
பெருமாள் ஏன் எனது மாலையை ஏற்றுக்கொள்ளவில்லை, நான் என்ன அபசாரம் செய்தேன் என்ற கேள்விகள் அவன் நினைவில் மீண்டும் மீண்டும் எழுந்தன. அரைத் தூக்கத்தில் அவன் இருந்தபோது, பெருமாள் அவன் கனவில் தோன்றினார்.
குறும்பறுத்த நம்பி
“பக்தனே உன் அன்பில் குறை ஒன்றும் இல்லை. மலைக்கு வரும் பக்தர்களுக்கு எல்லாம் மண்பாண்டம் செய்து கொடுத்து எனக்கு தினமும் மண்ணில் மலர் செய்து சாத்தும் பக்தன், இந்த மலையில் ஒரு குடிசையில் வாழ்கிறான். அவனது மண் மலர், உனது பொன் மாலையை விட உயர்ந்தது. அவனது பெருமை உலகிற்குத் தெரிய வேண்டும். அவன் உயர்ந்த பக்தன். காமம், கோபம், மயக்கம் ஆகிய மூன்று குறும்புகளும் அவனை என்றும் தீண்டியதில்லை. அவன் `குறும்பறுத்த நம்பி’ என்னும் திருநாமத்தோடு இந்த உலகத்தால் அறியப்படுவான்” என்று கூறி மறைந்தார்.
விழித்தெழுந்த மன்னன் பொழுது விடிந்ததும் தனது பரிவாரத்தோடு திருமலைக் காட்டில் வசித்த நம்பியைத் தேடிக் கண்டுபிடித்தான். நம்பியை வணங்கி அவனுக்கு அனைத்து மரியாதைகளையும் செய்தான்.
பகவானுக்கு ஏதும் செய்யா எனக்கும் இத்தகைய சிறப்பா என்று குறும்பறுத்த நம்பி அளவற்ற மகிழ்ச்சி எய்தினார்.
மீண்டும் வேங்கடவன் கோயிலுக்கு மன்னன் சென்று தனது பொன்மலர் மாலைக் காணிக்கையைச் செய்தான். இந்த முறை பெருமாள் அதை ஏற்றுக்கொண்டு மன்னனுக்கு அருள் பாலித்தார்.