ஆன்மிகம்

ஆன்மிக சொற்பொழிவு: மதுரையில் ராமாயணம்

குள.சண்முகசுந்தரம்

வைகை நதிக்கரையில் ஓராண்டு ராமாயணத் தொடர் சொற்பொழிவை, ஆகஸ்ட் 7-ம் தேதியிலிருந்து தொடங்கியிருக்கிறார் உபன்யாசகர் திருச்சி கே.கல்யாணராமன்.

இதற்கு முன்பு 2013-ல் நெல்லையம்பதியில் ஓராண்டு கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவை நிகழ்த்தியிருக்கும் இவருக்கு இது இரண்டாவது வேள்வி. “தினமும் ராம நாமத்தை உச்சரிப்பதால் நான் நலமாக இருக்கிறேன். அதுபோல, இந்த உலகத்தில் உள்ள அனைத்து நதிகளும் கங்கையைப் போலக் கரை ததும்ப ஓடி உலகின் அனைத்து ஜீவராசிகளும் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராமாயணத்தை மற்றவர்கள் கேட்கப் படித்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் கல்யாணராமன்.

382 நாட்கள் 764 மணி நேர உபன்யாசம்

கம்பராமாயணத்தில் வரும் 12 ஆயிரம் செய்யுள்களையும் மொத்தம் எட்டு மண்டலங்கள், ஆறு காண்டங்களாகப் பிரித்து மொத்தம் 382 நாட்களுக்கு 764 மணி நேரம் இந்தத் தொடர் சொற்பொழிவை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார் கல்யாணராமன். மதுரை தெற்கு வெளி வீதியில் உள்ள குட்டையா சுவாமிகள் மடாலயத்தில் தினந்தோறும் மாலை ஆறரை மணிக்கு இவரது ராமாயணச் சொற்பொழிவைக் கேட்கலாம்.

பட்டாபிஷேகம் முடிந்ததும் ராமபிரான் தனது அன்பர்களுக்கு எல்லாம் பரிசுப் பொருட்களைக் கொடுத்தார். அப்போது அனுமனிடம், “உனக்கு என்ன வேண்டும் கேள்” என்றார். அதற்கு அனுமனோ, “எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் கை கட்டி அமர்ந்துகொண்டு, கண்ணீர் விட்டு ராமநாமத்தை நான் கேட்க வேண்டும்; அது போதும் எனக்கு” என்று அனுமன் சொன்னார்.

அதுபடியே, ராமாயணம் படிக்கும் இடங்களில் ஒரு பலகை போட்டு அதற்குக் கோலமிட்டு அலங்கரித்து வைத்திருப்பார்கள். இந்த இருக்கையில் அனுமன் கை கட்டி அமர்ந்திருந்து கண்ணீர் விட்டு ராமாயணத்தைக் கேட்பதாக ஒரு ஐதீகம். கல்யாணராமனின் மேடையிலும் அனுமனுக்கான இருக்கை கம்பீரமாகக் காத்திருக்கிறது.

அவசர வேலை இருந்தாலோ, வெளியூர் செல்ல வேண்டியிருந்தாலோ சொற்பொழிவு நேரத்தைக் காலை நேரத்துக்கு மாற்றிக்கொள்கிறார். ஞாயிற்றுக் கிழமைகளில் ஜெயதேவர் அஷ்டபதி பஜனையும் உண்டு. திருமணம் தடைப்பட்டு நிற்பவர்கள், தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் தங்களது ஜாதகங்களை இந்தப் பூஜையில் வைத்து பஜனை செய்தால் காரியம் கைகூடிவரப் பெறலாம் என்பது நம்பிக்கை.

ராமன் வருவான்

தொடர்ச்சியாக ஒரு வருடம் ராமாயணம் படித்தால் அலுப்பும் களைப்பும் ஏற்பட்டுவிடாதா என்று கேட்டால், “நிச்சயம் இல்லை. கொட்டும் மழையானாலும் எனது உபன்யாசத்தைக் கேட்க இருநூறு பேர் காத்திருக்கிறார்கள். எப்படா மாலை ஆறு மணி ஆகும் என்று நான் தினமும் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று ஆர்வத்துடன் பேசுகிறார் கல்யாணராமன்.

SCROLL FOR NEXT