ஆன்மிகம்

பைபிள் கதைகள் 52: கீழ்ப்படிதலே சிறந்த பலி!

அனிதா அசிசி

இஸ்ரவேலின் முதல் அரசனாகச் சவுலை கடவுள் தேர்தெடுத்தார். நல்ல உயரம், பொலிவுமிக்க தோற்றம் ஆகியவற்றுடன் செல்வந்தராகவும் இருந்தார் என்றும் மக்களில் பலர், “இவனா நம்மைக் காப்பாற்றப் போகிறான்?” என்று கேலிபேசி அலட்சியப்படுத்தினார்கள். இதை சவுல் தன் காதுபடக் கேட்டபோதும் அலட்டிக்கொள்ளவில்லை. கிபியாவிலிருந்த தன் வீட்டுக்கு வந்து ஒரு அரசனைப்போல் அலட்டிக்கொள்ளாமல் தனது வயலில் உழைத்துக்கொண்டிருந்தார். தன்னைத் தேர்தெடுத்த கடவுளிடமிருந்து தனக்கான சந்தர்ப்பம் வரும்வரை காத்திருந்தார். இந்தநேரத்தில் அம்மோன் (உழைத்து உண்ணாமல் போரை ஒரு தொழிலாகச் செய்த இனங்களில் அம்மோனியர்களும் அடங்குவர்) நாட்டின் அரசனாகிய நாகாஸ், இஸ்ரவேலின் நகரங்களில் ஒன்றாகிய கீலேயாத்தில் நாட்டில் உள்ள யாபேஸ் என்ற ஊருக்கு வந்து தனது படையுடன் முகாமிட்டான்.

யாபேஸ் பல வளமான ஊர்களில் ஒன்று. அங்கே கவர்ந்துசெல்ல ஏராளமான மந்தைகளும் விளைச்சலும் மக்களின் வீடுகளில் பொக்கிஷங்களும் இருந்தன. நாகாஸ் மிகக் கொடூரமான அரசன் என்பதை யாபேஸ் மக்கள் அறிவார்கள். அவர்கள் நாகாஸ் தங்களை அழித்துவிடும் முன் அவனுக்குப் பணிந்துபோய்விட நினைத்து அவனிடம் ஓடினார்கள், “யாபேஸ் வாசிகளாகிய நாங்கள் அனைவரும் உங்களுக்கு அடிமைகளாக இருப்போம், தயவுசெய்து எங்களைக் கொன்றுவிடாமல் எங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளுங்கள்”என்று கெஞ்சினார்கள்.

அதற்கு நாகாஸ், “உங்களோடு ஒப்பந்தம் செய்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை! முதலில் உங்கள் எல்லாருடைய வலது கண்களையும் நான் தோண்டியெடுத்து, இஸ்ரவேலர்கள் அனைவரையும் அவமானப்படுத்த வேண்டும். அதற்குச் சம்மதம் என்றால் நீங்கள் அனைவரும் உயிர் பிழைப்பீர்கள்?” என்று கூறிக் கொக்கரித்தான். இதைக் கேட்டு மேலும் பயந்த யாபேஸ் ஊரின் மூப்பர்கள், “அரசே எங்களுக்கு ஏழு நாட்கள் அவகாசம் கொடுங்கள். இஸ்ரவேல் தேசமெங்கும் தூதுவர்களை அனுப்பி உதவி கேட்கிறோம். எங்களைக் காப்பாற்ற யாரும் வராவிட்டால், அப்போது உங்களிடம் சரணடைகிறோம்” என்று சொன்னார்கள். அதற்கு நாகாஸ், “நானும் பார்க்கிறேன்.. உங்களைக் காப்பாற்ற யார் வரப்போகிறார்கள் என்று” என்று ஆணவமாகக் கூறினான்.

சவுலின் முதல் வெற்றி

யாபேஸ் மக்கள் அனுப்பிய தூதுவர்கள் சவுலின் ஊராகிய கிபியாவுக்கு வந்து அங்கிருந்த மக்களிடம் நாகாஸின் முற்றுகையை எடுத்துக்கூறி எல்லாரும் சத்தமாகக் குரலெடுத்து ஒப்பாரி வைத்து அழுதார்கள். அச்சமயத்தில் சவுல், தன்னுடைய வயலிலிருந்து மாடுகளை ஓட்டிக்கொண்டு தன் வீட்டுக்கு அவ்வழியே போய்க்கொண்டிருந்தார். மக்களின் அழுகுரல் கேட்டு அவர்களின் அருகே வந்தார். “என்ன நடந்தது? ஏன் எல்லாரும் அழுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், யாபேஸ் ஊர் முற்றுகையிடப்பட்டது குறித்துக் கூறினார்கள். இதைக் கேட்ட சவுல் பயங்கர கோபத்தோடு, ஒரு ஜோடிக் காளைகளைப் பிடித்து துண்டு துண்டாக வெட்டி, தூதுவர்களின் மூலம் இஸ்ரவேலர்களுடைய எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பிவைத்தார்.

அந்தத் தூதுவர்கள் போய், “சவுலோடும் சாமுவேலோடும் வராதவர்களுடைய மாடுகளுக்கும் இந்தக் கதிதான் நேரும்!” என்று அறிவிப்பு செய்தார்கள். அப்போது, இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் பயபக்தியோடு ஒன்றுகூடி வரும்படியான உணர்ச்சியைக் கடவுள் அவர்களுக்குக் கொடுத்தார். அணியணியாகத் திரண்ட மக்கள் பேசேக்கு என்ற இடத்தில் ஒன்றுகூடினார்கள். அங்கே வந்த சவுல் அவர்களைக் கணக்கெடுத்தார். இஸ்ரவேலர்களில் மூன்று லட்சம் பேரும், யூதா குடும்பத்தின் வழிவந்த ஆண்களில் முப்பதாயிரம் பேரும் இருந்தார்கள்.

மறுநாள் தன்னுடைய படையை மூன்று பிரிவுகளாக சவுல் பிரித்தார். அவர்கள் நள்ளிரவு தாண்டிய மூன்றாம் சாமத்தில் (அதிகாலை மூன்றுமணி) எதிரியின் முகாமுக்குள் திடீரென்று நுழைந்து எதிர்பாராத நேரத்தில் தாக்குதலைத் தொடங்கினார்கள். அந்தத் தாக்குதல் நடுப்பகல்வரை நீடித்ததில் அம்மோனியர்களை வெட்டிச் சாய்த்தார்கள். உயிர் தப்பியவர்கள் ஆளுக்கொரு பக்கம் சிதறி ஓடினார்கள். சவுலுக்குக் கடவுள் முதல் வெற்றியைக் கொண்டுவந்தார். சவுலை அரசனாக அனைத்து இஸ்ரவேலர்களுக்கும் ஏற்றுக்கொண்டனர். அம்மோனியர்களுக்கு எதிரான வெற்றியை மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடினார்கள். அப்போது சவுல், “இன்று பரலோகத் தந்தையாகிய யகோவா இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார்” என்று கூறி கடவுளுக்கே புகழ்மாலை சூட்டினார்.

கீழ்ப்படிதலை மறந்த அரசன்

சவுலின் நல்ல குணங்களும் கடவுளின் ஆசிர்வாதமும் அவரை வழிநடத்தின. கடவுளின் சக்தியே தன்னை வழிநடத்துகிறது என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தார். ஆண்டுகள் பல கடந்தன. இஸ்ரவேலர்களின் எதிரிகளைத் தோற்கடித்துத் தம் மக்களுக்குப் பல வெற்றிகளைத் தேடித் தந்தார் சவுல். ஆனால் சவுலுக்கு பெலிஸ்தர்கள் பெரும் சவாலாக விளங்குக்கிறார்கள். அவர்கள் பெரும்படையோடு திரண்டு வருகிறார்கள். பெரும்படை என்றால் கொஞ்சநஞ்சமல்ல, ‘கடற்கரை மணலளவு வீரர்களோடு திரண்டுவந்தனர்.’ இஸ்ரவேல் வீரர்கள் இதைக்கண்டு நடுங்கிப்போய் குகைகளிலும், புதர்களிலும், பாறைகளிலும், பள்ளங்களிலும் ஒளிந்துகொண்டனர்.

பெலிஸ்தர்களுக்கு எதிரான போரைத் தொடங்கும் முன் கடவுளுக்குப் பலி செலுத்தத் தான் வரும்வரை கில்காலில் காத்திருக்கும்படி அரசன் சவுலிடம் தலைமை ஆசாரியாரான சாமுவேல் கூறியிருந்தார். ஆனால் சாமுவேல் வருவதற்குச் சற்றுத் தாமதமாகிறது. மிச்சமிருக்கும் வீரர்களும் பயந்து ஓடிவிடும் முன் போரைத் தொடங்க வேண்டும்; அதேபோல் தனக்கு முன் பெலிஸ்தர்கள் போரைத் தொடங்கி விடக் கூடாது என்றும் சவுல் பயந்தார். தன்னுடன் கடவுள் இருக்கிறார் என்பதையும் அவருக்குக் கீழ்ப்படிவதே அரசனாகிய தனது முதல் கடமை என்பதையும் சவுல் ஒரு கணம் மறுந்துவிடுகிறார். எனவே சாமுவேல் வருமுன்பு தாமே துணிந்து அந்தப் பலியைத் செலுத்திவிடுகிறார்.

அதன்பின், சாமுவேல் வந்துசேர்ந்தபோது, ஒரு தலைமை குரு செய்யவேண்டிய இறைக் கடமையை அரசன் செய்துவிட்டதை அறிந்து கடவுளுக்கு சவுல் கீழ்ப்படியாமல் போனது குறித்துப் பெரிதும் வருத்தப்படுகிறார். சாமுவேல் அவரிடம், “மிகச் சிறந்த செம்மறியாட்டைக் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்துவதைவிட அவருக்குக் கீழ்ப்படிவதே மேலானது. நீ கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் இனி உன்னை இஸ்ரவேலில் அரசனாக இருக்க கடவுள் உன்னை ஆசீர்வதிக்க மாட்டார்” என்று கூறினார். ஆனால் சாமுவேல் இல்லாத பட்சத்தில், தான் செய்தது சரியே என சவுல் நினைத்தார். ஆனால் கடவுள் எதிர்பார்க்கும் கீழ்ப்படிதலைத் தன் வாளால் வெட்டி வீழ்த்திவிட்டோம் என்பதை சவுல் உணரவில்லை. இதனால் சவுலுக்கு பதிலாக ஒரு சாமானியனை அரசனாகத் தேர்ந்தெடுக்கக் கடவுள் முடிவு செய்தார். அவரே தாவீது.

SCROLL FOR NEXT