நாகப்பட்டினத்திற்குத் தென்மேற்கில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஓடம்போக்கி ஆற்றின் வடகரையில் உள்ளது பாப்பாவூர். அங்கு அடக்கமாகி அற்புதங்கள் புரியும் காஜா செய்கு அலாவுதீன் சிஷ்டி அவர்கள் வடக்கு ஆப்கானிஸ்தானில் ஆக்சஸ் நதிக்குத் தெற்கே பல்கு நாட்டில் ஹிஜ்ரி பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிறந்தார். இவருடைய தந்தை கலீபா அலி (ரலி) வழிவந்த சையிது மஷ்ஹுருதீன் பாலாபூரி.
காஜா செய்கு அலாவுதீன் முதலில் சையிது பஹாவுத்தீன் என்ற பெரியாரிடம் உற்றுழி உதவி, ஊழியம் புரிந்தபடியே கல்வி கற்றார்கள். மற்ற மாணவர்களைவிட அதிவேகமாகக் கற்ற அலாவூதினுக்கு ஆசிரியர் ஆழ்ந்த ஞானத்தைப் போதித்தார்.
ஆசிரியர் பஹாவுத்தீன் ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு கத்தியையும் ஒரு கோழியையும் கொடுத்து யாரும் பார்க்காத மறைவிடத்தில் கோழியை அறுத்துவரச் சொன்னார். எல்லா மாணவர்களும் கோழியை அறுத்து வர, அலாவுதீன் மட்டும் கோழியை அறுக்காது திருப்பிக்கொண்டு வந்தார். காரணம் கேட்டபோது, “ காணுமிடமெல்லாம் காட்சி தருகிறான் அல்லாஹ்; அவன் காணாத இடம் அகிலத்தில் இல்லையே, அல்லாஹ் அறியாது அறுக்க முடியவில்லையே” என்று பதிலளித்தார்.
பக்குவமடைந்த செய்கு அலாவுதீனை ஆசிரியர் சைய்து சம்சுல் உஸ்ஸாக் என்ற பெரியாரிடம் பெரு ஞானப்பயிற்சி பெறப் பணித்தார். அலாவுதீன் தனது ஆசிரியர் அறிவுறுத்தியபடி கிழக்கு நோக்கிச் சென்றார். ஆசிரியர் அறிவித்தவாறு ஆறு குறுக்கிட்டது. அல்லாஹ்-வைத் தொழுது, இறைஞ்சி மேலிருந்த துண்டை ஆற்றில் எறிந்து அத்துண்டில் அமர்ந்து ஆற்றைக் கடந்தார்.
இதனைக் கண்ட பெரியவர் சம்சுல் உஷ்சாக் மாணவரை வரவேற்று ஆழ்நிலைத் தியானம் புரிந்து ஊழையும் உட்பக்கம் காணும் உயரிய பயிற்சியை அளித்தார். பின்னர் மகான் சையிது முஹம்மது தாஹிர் பல்கி அவர்களிடம் அனுப்பினார். தாஹிர் பல்கியிடம் சீடராகச் சில காலம் தங்கி சிஷ்திய்யா தர்க்காவில் தீட்சை பெற்று தலைமைத்துவத்தை அடைந்தார்.
குருநாதர் பல்கி இறப்பதற்கு முன் அவருடைய மகன்கள் சையிது கமாலுத்தீன் மற்றும் சையிது இஸ்மாயில் ஆகிய இருவரையும் அழைத்து செய்கு அலாவுதீனிடம் ஒப்படைத்தார். தன் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்கவும் சொன்னார். அவரின் மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பத்தையும் அலாவுதீன் காப்பாற்றினார்.
பாக்தாத்திலிருந்து கீழக்கரைக்கு
குருவின் மனைவியும் இறந்த பின்னர், அவரது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பாக்தாத் சென்றார். பாக்தாத்தில் கோமான் கௌதுல் அஸ்லம் முஹைதீன் அப்துல் காதர் ஜீலானியைச் சந்தித்த பிறகு 500 சீடர்களுடன் தமிழகத்தில் உள்ள கீழக்கரைக்கு வந்தார் அலாவுதீன். பிறகு கேரளத்திலுள்ள பொன்னானிக்குச் சென்று அங்கேயே 50 சீடர்களைத் தங்கவைத்து இஸ்லாமிய சமயக் கல்வியைக் குழந்தைகளுக்குப் பாடம் புகட்ட ஏற்பாடு செய்தார்.
பொன்னானியிலிருந்து ஹஜ் பயணம் செய்து மதீனாவில் 40 நாட்கள் தவம் மேற்கொண்டு மீண்டும் பொன்னானிக்குத் திரும்பினார். செய்கு அலாவுதீன் வாழ்ந்த காலம் முழுவதும் நிலம், காடு, மலைகளைச் சீடர்களுடன் நடந்தே கடந்தார். நீர்நிலைகளைக் கடக்க மட்டுமே படகு மற்றும் கப்பலைப் பயன்படுத்தினார்.
பாப்பாவூர் பூந்தோட்டத்தில்
இலங்கை, அதிராம்பட்டினம் போன்ற இடங்களில் தங்கி இறை பணியாற்றிய செய்கு அலாவுதீன் மன்னார்குடி வழியில் உள்ள பாப்பாவூரில் ஒரு பூந்தோட்டத்தில் தங்க முடிவெடுத்தார். பாப்பாவூரில் ஓடம்போக்கி ஆற்றின் மறுகரையில் ஒரு பெண், தனது கணவன் மற்றும் புகுந்த வீட்டினரின் துன்பம் தாங்காமல் குளத்தில் குதித்தாள். அவள் அலாவுதீன் மகானால் காப்பாற்றப்பட்டு மகானின் சீடராக பின்னர் ஆனார். அவரது பெயர் உம்மு ஹபீபா.ஹிஜ்ரி 1025 முஹர்ரம் பிறை 20-ல் காஜா செய்கு அலாவுதீன் சிஷ்டி மறைந்தார்.
கற்பவனாயிரு, கற்பிப்பவனாயிரு, இல்லையேல் கற்பவனுக்கு உதவுபவனாயிரு என்ற முகம்மது நபிகளின் நன்மொழிக்கேற்ப வாழ்ந்தாள் முழுவதும் ஆசிரியராகவும், ஆசிரியர்களை உருவாக்குபவராகவும் இருந்தவர் இவர்.