கவுதமர் துறவு பூண்டதை அறிந்த சுத்தோதனரின் அமைச்சர்கள், ஆளாரகாலாமருடைய ஆசிரமத்துக்கு வந்தார்கள். போதி சத்துவர் எனப்பட்ட கவுதமரை அங்குக் கண்டார்கள். அவர்களை அன்புடன் வரவேற்ற கவுதமர், வந்த சேதியைக் கேட்டார். சுத்தோதனர் அடைந்துள்ள துயரத்தை எடுத்துக் கூறி, நாட்டுக்குத் திரும்பி வரும்படி கவுதமரை அவர்கள் அழைத்தார்கள்.
திரும்ப வாருங்கள்
"அரசர் உங்களை உயிர்போல நேசிக்கிறார். நீங்கள் துறவு பூண்டு வெளியேறியது பற்றிக் கேள்விப்பட்டது முதல், பெரும் துயரத்துடன் குற்றுயிராகக் கிடக்கிறார். உங்களுக்குப் பட்டாபிஷேகம் செய்துவைக்கும் ஆசையுடன் அவர் இருக்கிறார். சிறு வயதில் நீங்கள் துறவு பூண வேண்டியதில்லை; அரச பதவியேற்றுச் சில காலம் ஆட்சி செலுத்தி மக்களுக்கு நன்மை செய்த பிறகு துறவு மேற்கொள்ளலாம்.
இதற்கு முன்பும் சில அரசர்கள் துறவு பூண்டு, பிறகு திரும்பிவந்து அரசாண்டிருக்கிறார்கள். முற்காலத்தில் அம்பரீஷ மகாராசன் அரசாட்சியை வெறுத்துக் காட்டுக்குப் போனார். பிறகு அவருடைய அமைச்சர், நாட்டு மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கித் திரும்பிச் சென்று அரசாட்சி நடத்தினார். மனிதரின் கொடுஞ்செயல்களை வெறுத்த ராமராசன் என்னும் அரசர் காட்டுக்குச் சென்று வாழ்ந்திருந்தார். பிறகு திரும்பி வந்து அரசாட்சியை நடாத்தினார். வைசாலி நாட்டுத் துரூமராசனும் துறவு பூண்டு, பிறகு திரும்பி வந்து அரசாட்சியை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு நன்மை செய்தார்.
தாங்கள் இச்சிறு வயதில் துறவு கொள்வது தகாது. அருள்கூர்ந்து திரும்பிவந்து அரசாட்சியை ஏற்றுக்கொண்டு சில காலம் சென்ற பிறகு துறவு மேற்கொள்ளுங்கள்," என்று கூறிக் கவுதமரிடம் அமைச்சர்கள் வேண்டிக் கேட்டுக்கொண்டார்கள்.
குறிக்கோள்
அமைச்சர்கள் கூறியதைக் கேட்ட கவுதமர், "அறிவு சான்ற அமைச்சர்களே! நீங்கள் கூறியது உண்மைதான். எனது தந்தை என்னை எவ்வாறு நேசிக்கிறார் என்பதும் என் பிரிவு அவருக்கு எவ்வளவு துன்பத்தைத் தரும் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், நான் துறவு பூண்டது, நானும் மற்றவர்களும் சாந்தி நிலையை அடையும் வழியைக் கண்டுபிடிப்பதற்காகவே. அந்த வழியைக் கண்டறியாமல் நான் திரும்பி வரமாட்டேன். எனக்கு அரச பதவி வேண்டியதில்லை.
நீங்கள் கூறியதுபோல, துறவு பூண்டு பிறகு மீண்டும் போய் அரசாட்சி செலுத்திய அரசர்கள் மனஉறுதியற்றவர்கள். அவர்களை நான் உதாரணமாக ஏற்றுக் கொள்ளமாட்டேன்.
போதி ஞானத்தை அடையாமல் திரும்பி வரமாட்டேன். போதி ஞானம் பெறாவிட்டால் தீச்சுடரில் புகுவேனே அன்றி திரும்பி வந்து அரசாள மாட்டேன். இது உறுதி," என்று கவுதமர் கூறினார்.
திரும்பிய அமைச்சர்கள்
இதைக் கேட்ட அமைச்சர்கள் பெரிதும் வருத்தப்பட்டார்கள். அவருடைய உறுதியைக் கண்டு அவர்கள், கபிலவஸ்து நகரத்துக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். பிறகு, கவுதமர் முன்பு கூறியபடி ஆளாரகாலாமருடைய ஆசிர மத்தில் தங்கி யோக முறையில் பயிற்சி செய்தார். பிறகு, அது சாந்தி நிலையைத் தராது என்பதை அறிந்து அந்த ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்.
நன்றி: மயிலை சீனி. வேங்கடசாமியின் 'கவுதம புத்தர்'
தொகுப்பு: ஆதி