யோசுவானின் தலைமையில் வென்றெடுத்த கானான் நாட்டின் நிலங்களை வளமாக்கி, விவசாயப் பெருங்குடிகளாக இஸ்ரவேல் மக்கள் வாழ்ந்து வந்தனர். கானான் நாட்டின் இன்னொரு பெயரே இஸ்ரவேல். அதன் முதல் நியாயாதிபதியாக யோசுவா இருந்தார்; அதன் பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு வெவ்வேறு நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆட்சிசெய்தனர்.
ஆனால் இஸ்ரவேலர்கள் மீது தொடர் படையெடுப்புகள் மூலம் அந்நியர்கள் பலரும் ஆதிக்கம் செலுத்திவந்தனர். அவர்களை வென்று இஸ்ரவேல் நாட்டைத் தக்கவைத்துக்கொள்ளக் காலம்தோறும் கடவுள் உதவிவந்தார். இப்படி அம்மோன் நாட்டின் மக்களாகிய அம்மோனியர்கள் இஸ்ரவேலர்கள் மீது 18 ஆண்டு காலம் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இரக்கமற்ற கொலைகள், கொள்ளையில் ஈடுபட்டுவந்தனர். அவர்களது அட்டூழியங்களுக்கு முடிவுகட்ட எண்ணிய இஸ்ரவேலர்கள் தங்கள் கடவுளாகிய பரலோகத் தந்தையிடம் கெஞ்சி மன்றாடினார்கள்.
யெப்தா செய்த சத்தியம்
அம்மோனியருடன் போர் செய்ய யெப்தாவைத் தேர்ந்தெடுக்கும்படி கடவுள் வழிகாட்டினார். பாலியல் தொழிலாளிப் பெண்ணுக்கு மகனாகப் பிறந்ததால் உறவுகளாலும் ஊர்க்காரர்களாலும் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டவர் யெப்தா. மாவீரனாகத் திகழ்ந்த அவரிடம் சென்று, “யெப்தாவே, கடந்த காலத்தில் நாங்கள் உனக்குச் செய்த அநியாயத்துக்காக வருந்துகிறோம். அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் நம் சொந்த நாட்டுக்குத் திரும்பி வா. நமக்குத் தொல்லை கொடுத்துவரும் அம்மோனியர்களை வென்று எங்களுக்கு நியாயாதிபதியாக இரு” என்று இஸ்ரவேலர்கள் கெஞ்சி அழைத்தனர். அதை ஏற்றுக்கொண்டார் யெப்தா.
“யாரால் புறக்கணிக்கப்பட்டோமோ அவர்களே வந்து நம்மைத் தலைவராக ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்களே… இது எத்தனை பெரிய தலைகீழ் மாற்றம். கடவுளாகிய யகோவா என் மீது காட்டிய கருணையன்றி இது வேறென்ன!” என்று கடவுளைப் புகழ்ந்த யெப்தா, போரில் வெற்றி பெறக் கடவுளின் உதவி தேவை என்பதை உணந்தார். கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்காக ‘மிஸ்பா’வுக்குச் சென்றார். அங்கே போய் முழந்தாளிட்டுக் கடவுளை நோக்கி, “கர்த்தாவே.. அம்மோனியரை வென்று அவர்களைத் தோற்கடிக்க எனக்கு வெற்றியைத் தாரும். நீர் எனக்கு வெற்றியைத் தந்தால் போர் முடிந்து நான் வீடு திரும்பும்போது, என் வீட்டிலிருந்து என்னை எதிர்கொண்டு வரவேற்க முதல் நபராக யார் வருகிறார்களோ...அவர்களை உமக்கு அர்ப்பணிப்பேன்” என்று சத்திய நேர்த்தி செய்து பிரார்த்தனை செய்தார்.
எதிர்கொண்டு வரவேற்ற மகள்
யெப்தா செய்த சத்திய நேர்த்தியைக் கடவுள் கேட்டார். அம்மோனியர்களுடனான போரில் யெப்தாவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கிறது. அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த 20 நகரங்களை யெப்தா மீட்டெடுத்தார். வெற்றிக் களிப்புடன் இஸ்ரவேலர்களுக்குத் தலைமையேற்பதற்காக ஊர் திரும்பினார். ஊருக்குள் நுழைந்ததும் அவரை வரவேற்க எதிர்கொண்டு வந்தவர்களில் முதலில் வந்தாள், அவருடைய ஒரே அன்பு மகள். யெப்தா அவளை மிகவும் நேசித்தார். தன்னை முதலில் எதிர்கொண்டு வந்து மகளே முதலில் வரவேற்பாள் என்று அவர் சிறிதும் நினைக்கவில்லை. மிகுந்த மனவேதனை கொண்டவராய், தனது ஆடையைக் கிழித்துக் கதறியழுதார். “ஐயோ…என் அன்பு மகளே! நீ என்னை மிகுந்த துக்கத்திற்குள்ளாக்கினாய். நான் கர்த்தருக்குக் கொடுத்த வாக்குறுதியை எப்படி மாற்றுவேன்?” என்று அழுது புலம்பினார்.
கடவுளுக்குக் கீழ்ப்படிந்த மகள்
யெப்தாவின் மகள் யகோவா தேவனை மிகுந்த பத்தியுடன் போற்றிப் பாடுகிறவள். மிகச் சிறந்த தம்புரா இசைக் கலைஞர். தனது தந்தையின் சத்திய நேர்த்தியைப் பற்றித் தெரிந்து கொண்டபோது முதலில் வருத்தப்பட்டாலும் பின்னர் அவள் வருந்தவில்லை. தந்தையையும் தோழிகளையும் பிரிய வேண்டியிருக்குமே என்று அவள் நினைத்தாலும் சீலோவிலிருக்கிற ஆசாரிப்புக் கூடாரத்தில் கடவுளுக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய முடியும் என்பதை நினைத்தபோது அவள் மனம் நிறைந்தது. பின்னர் தனது தந்தையைப் பார்த்து, “அப்பா நம் பரலோகத் தந்தைக்கு நீங்கள் சத்தியம் செய்திருந்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். என்னை மனக் கசப்பின்றி இறைச் சேவைக்காக அனுப்பி வையுங்கள்” என்று கேட்டுக்கொண்டாள். மகளின் மன உறுதியை எண்ணி யெப்தாவின் மனக் குழப்பம் தீர்ந்தாலும் மகளைப் பிரிய முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார். ஏனென்றால் அவருக்கு வேறு மகனோ, மகளோ கிடையாது.
பின்னர் கடவுளுக்குச் சத்தியம் செய்தபடியே யெப்தாவின் மகள் சீலோவுக்குப் போகிறாள். அங்கே யகோவாவின் ஆசாரிப்புக் கூடாரத்தில் தன் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்குச் சேவை செய்கிறாள். தந்தையைப் பிரிய முடிவு செய்த அவளது மன உறுதியை மக்கள் கண்டனர். கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது மிகச் சிறந்த வாழ்வு என அவள் கிளம்பிச் சென்றதைக் கண்டு இஸ்ரவேல் மக்கள் அவளை மிகவும் புனிதமான பெண்ணாக மதித்தார்கள். அவளை நேசிக்கத் தொடங்கினார்கள்.
அவளைப் பற்றி இஸ்ரவேலே புகழ்ந்து பேசியது. ஒவ்வொரு ஆண்டும் நான்கு நாட்கள் இஸ்ரவேல் பெண்கள் அவளைப் பார்க்க சீலோவுக்குச் சென்றார்கள், அவளுடன் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்தார்கள். ஆண்கள் மட்டுமே கடவுளுக்கு ஊழியக்காரர்களாய் இருந்து சேவை செய்ய முடியும் என்ற நிலை, யெப்தாவின் மகளால் மாறியது. அவள் மிகச் சிறந்த கடவுளின் புத்திரியாய் அவருக்கு இறைப் பணியாற்றினாள்.
(பைபிள் கதைகள் தொடரும்)