துக்காராம் வழக்கம்போல் சந்திரபாகா நதியில் புண்ணியக் குளியலை முடித்துவிட்டு ‘விட்டலா’ நாமத்தைச் சொல்லிக்கொண்டே கோயிலுக்குச் செல்லலாம் என்று நினைத்தார். அதற்குள் மின்னல் வெட்டியது போல அவர் மனதில் ஓர் எண்ணம் இறையருளால் தோன்றியது. இகலோகத்தை விட்டு வைகுந்தம் சென்றுவிடலாம் என்பதே அது.ஸ்ரீயம்பதியான எம்பிரான் இருக்கும் மேல் உலகத்தை நோக்குவதுபோல, வானத்தைப் பார்த்து தலைக்கு மேல் கைதூக்கிக் கும்பிட்டார். அவர் வைகுந்தம் செல்லும் எண்ணம் உறுதியானது.
இவர் எண்ணம் போலவே வானில் இருந்து இரண்டு இறக்கைகள் கொண்ட அழகிய புஷ்பக விமானம் கீழிறங்கி வருகிறது. அந்த நேரத்தில் துக்காராம் மனதில் ஓர் எண்ணம். தன் மனைவி ஆவளியையும் தன்னுடன் அழைத்துச் செல்லலாமே என்று தோன்றுகிறது. அருகில் இருந்த சிறுவனிடம் வீட்டிலிருந்து ஆவளியை அழைத்து வரப் பணிக்கிறார். ஆவளி வர மறுத்துச் செய்தி அனுப்புகிறாள்.
``பிள்ளைக்குச் சமைத்து உணவு பரிமாற வேண்டும்... அவர்களைப் பசியாறச் செய்ய வேண்டும். அவர் ஏதாவது பினாத்திக்கொண்டு அலைந்து திரிவார். நான் வரவில்லை என்று சொல்” என்று கூறிவிடுகிறாள்.
ஆவளி வரவில்லை என்று அறிந்த பின்னும் தன் மன உறுதியை மாற்றிக் கொள்ளாமல், புஷ்பக விமானம் ஏறி வைகுந்தம் போகிறார் துக்காராம். ஊர் மக்களெல்லாம் நதிக்கரையில் நின்று, `விட்டலா.... விட்டலா’ என்று கோஷமிட... வானத்தில் மறைகிறார்.
இந்தச் செய்தி அறிந்த ஆவளி, பதறி அடித்துக்கொண்டு ஓடி வர... மக்கள் கூறிய தையெல்லாம் நம்பாமல், ஆற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாரோ என்று எண்ணி, ஆற்றில் இறங்கி துக்காராமைத் தேடச் சொல்கிறாள்.
அப்போது, வானில் இருந்து துக்காராமின் காலணிகளும் வஸ்திரமும் பறந்து வருகின்றன! துக்காராமின் வைகுந்த ஆரோகணம் இனிதே நிகழ்ந்து முடிகிறது.