நிர்வாண மோட்சம் என்னும் வீடுபேற்றை அடைவதற்காக உடம்பையும் உயிரையும் பொருட்படுத்தாமல், அப்பிரணத் தியானத்தை மும்முரமாகச் செய்துவந்தார் கவுதம முனிவர். அவருடைய விடாமுயற்சியைக் கண்ட வசவர்த்தி மாரன் அந்தத் தியானத்தைக் கலைக்க எண்ணினான்.
மாரன் முடிவு
இந்த இடத்தில் மாரன் என்று குறிப்பிடப்படுவது, மனிதரைச் சிற்றின்பத்தில் ஈடுபடச் செய்து பாவம் செய்யத் தூண்டும் கற்பனைக் கதாபாத்திரம் என்று கொள்ளலாம்.
“சித்தார்த்தருடைய இந்த முயற்சி மிகப் பெரிது. இவர் செய்கிற தியானமும் தவமும் மிகப் பெரியவை. இதன் மூலம் ஒருநாள் இவர் புத்தப் பதவி அடைவது உறுதி. இவர் புத்தராவதை இப்போதே தடுக்க வேண்டும். இப்போதே இவர் மனத்தைக் கலைத்து, இவருடைய கடுமையான தவத்தை நிறுத்துவேன்.” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
எடுத்துக் கூறல்
இப்படி நினைத்துக்கொண்டே வசவர்த்தி மாரன் கவுதம முனிவரிடம் வந்தான். “சித்தார்த்தரே! உங்கள் உடல் பெரிதும் மெலிந்துவிட்டது. உடலின் நிறமும் மாறிவிட்டது. மரணம் உங்களை நெருங்கிவிட்டது. நீங்கள் செய்யும் அப்பிரணத் தியானம் மரணத்துக்குக் காரணமாகிவிடலாம்.
நீங்கள் ஏன் இறக்க வேண்டும்? இறப்பதைவிட உயிர்வாழ்வது எவ்வளவோ மேன்மையானது. உயிருடன் இருந்தால் புண்ணிய காரியங்களைச் செய்யலாம். பிரம்மச்சாரியாக இருக்கலாம். அக்கினி பூசை செய்து புண்ணியத்தைக் கூட்டிக் கொள்ளலாம்.
இதற்கு முன்பு, போதிசத்துவர்கள் புத்தப் பதவி அடையக் கடைப்பிடித்த வழிகள் மிகவும் கடினமாக இருந்தன. அத்தனைக்கும் பிறகு நீங்களும் ஏன் வீணாக முயல்கிறீர்கள்? இந்தக் கடுமையான முயற்சி மரணத்தை வரவழைக்கும். இதைக் கைவிட்டுவிடுங்கள்,” என்று போலியான அன்பை வெளிப்படுத்தி இனிமையாகப் பேசினான்.
புத்தர் பதிலுரை
வசவர்த்தி மாரனுடைய பொய் அன்பையும் போலிப் பேச்சையும் கேட்ட கவுதம முனிவர், அவன் மீது வெறுப்புகொண்டார். “மனஉறுதியற்ற சோம்பேறிகளை வசப்படுத்தும் மாரனே! என்னுடைய இந்த முயற்சியைக் கெடுத்து அழிப்பது உனக்குப் பயன் தரும் என்று நினைத்து இப்படிப் பேசுகிறாய். நீ புகழ்ந்து பேசுகிற அக்கினி பூசை முதலியவற்றால் பலன் ஒன்றும் இல்லை என்பது எனக்குத் தெரியும். அவை யாருக்குப் பயன்படுமோ அவர்களிடம் போய் அதைக் கூறு” என்றார். இருவருக்கும் இடையிலான அந்த விவாதம் அத்துடன் முடிவடையவில்லை.
நன்றி: மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘கவுதம புத்தர்'