ஆன்மிகம்

பிரார்த்தனாமூர்த்தி கிருஷ்ணன்

வி.சுந்தர்ராஜ்

ஆகஸ்ட் 25: கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம்

சோழ சாம்ராஜியத்தின் பழைய தலைநகரான பழையாறை அருகே எவ்வித ஆரவாரமுமில்லாமல் இயற்கை எழில்சூழ ஸ்ரீகாளிங்கநர்த்தன கிருஷ்ணன் தனிக்கோயில் கொண்டிருக்கிறான். பக்தர்களின் குறைகளை தன்னுடைய குறைகளாக எண்ணி அவற்றைப் போக்கி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்து அருள்புரிந்து வருகிறான்.

கோயில்கள் நிறைந்த கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் ஊத்துக்காட்டில் ஸ்ரீகாளிங்கநர்த்தன பெருமாள் திருக்கோயில் உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவேதநாராயணபெருமாள் இத்தலத்தில் மூலவராக எழுந்தருளியுள்ளார்.

ருக்மணி, சத்தியபாமா சமேதராக  காளிங்கநர்த்தன பெருமாள் உற்சவ மூர்த்தியாகி எழுந்தருளியுள்ளார். கோயில் முன் தோற்றத்தில் ஆனந்த நர்த்தன விநாயகர் தனி சன்னதியில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்.

இங்குள்ள விக்கிரகத்தில் காளிங்கன் சிரசின் மீது, தன் பாதத்தை கிருஷ்ணன் வைத்துள்ளார். அவர் பாதத்திற்கும், சிரசிற்கும் ஒரு தாளை விட்டு எடுக்கும் இடைவெளிதான் உள்ளது. மற்றொரு பாதத்தை நர்த்தனக் கோலத்தில் தூக்கியபடி உள்ளார்.

ஒரு கையை அபயஹஸ்தமாகக் கொண்டு, மறுகையில் காளிங்கனின் வாலைப் பிடித்தபடி காட்சி தருகிறார். இந்த காளிங்கனின் வாலில் பகவானின் கட்டை விரல் மட்டுமே தொட்டு இருக்கும். மற்ற நான்கு விரல்கள் தொடாமலேயே இருக்கும். ஆக வாலிலும் பிடிமானமில்லை. கால் பாதத்திலும் சிரஸ் மீதும் பிடிமானம் இல்லை என்று இதன் தனிச் சிறப்பையும், பொலிவையும் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணனைப் பாடிய வெங்கடகவி

இந்த காளிங்க நர்த்த கிருஷ்ணனை மனமுருகி வெங்கடகவி என்பவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்த வெங்கடகவி தான் முன் காலத்தில் நாரதமாமுனிவர் என கூறப்படுகிறது.

சங்கீதமூம்மூர்த்திகளுக்கு முன்பே வாழ்ந்தவர் வெங்கடகவி. இவர் எளிய நடையில் தமிழில் பாடல்களை இயற்றியுள்ளார். இதனால் இவருக்கு தமிழ்க்கவி என்றொரு சிறப்பு பெயரும் உண்டு. திருவையாறில் ராமபிரானை நினைத்து தியாகராஜர் பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடினார். அதே போல் ஊத்துக்காட்டில் உள்ள கிருஷ்ணபகவானை நினைத்து வெங்கடகவி சப்தரத்தின கீர்த்தனைகள் எனும் ஏழு கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்களில் `அலைபாயுதே கண்ணா’, `ஆடாது அசங்காது வா கண்ணா’, `குழலூதி மனம் எல்லாம் கொள்ளை கொண்ட கண்ணா’, `தாயே யசோதாவுந்தன்’, `சுவாகதம் கிருஷ்ணா’, ஆகிய பாடல்கள் பிரபலமானவை. இதனால் இந்த வெங்கடகவிக்கு இத்தலத்தில் மரியாதை செய்யும் விதத்தில் தனிச்சன்னிதியில் கிருஷ்ணபகவானை நோக்கி அமர்ந்துள்ளார்.

இத்தலத்தில் ஸ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் பிரார்த்தனாமூர்த்தியாக விளங்கி வருகிறார். சங்கீதம், நாட்டியம் போன்ற கலைத்துறையில் உள்ளவர்கள், இத்தலத்திற்கு வந்து ஒருமுறை பிரார்த்தித்தால் நினைத்ததெல்லாம் நடக்குமென்று நம்பிக்கை உள்ளது. இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணிமாதம் கோகுலாஷ்டமியின் போது உறியடி உற்சவம் களைகட்டி ஊத்துக்காடு கிராமமே திருவிழாகோலம் பூண்டிருக்கும்.

SCROLL FOR NEXT