யட்சர்கள் மனிதர்கள் போலவே உருவம் கொண்டவர்கள். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோருக்கும் நன்மைகள் செய்ய விரும்புபவர்கள். இவர்களின் சக்தி அசாத்தியமானது. அன்பும் தெய்வ நம்பிக்கையும் கொண்ட இவர்கள் மனித குலத்தின் நண்பர்கள் என்றே சொல்லலாம். இல்லத்திலேயே ஒரு வேலை துரிதகதியில் முடிந்துவிட்டால், இது என்ன யட்சினி வேலையாக இருக்கிறதே என்று சொல்வது கிராம வழக்கம். நல்லவற்றைச் செய்பவர்களிடம் நவநிதி மட்டுமல்ல, கொடுக்கும் எண்ணமும் இருந்தால், வேறு என்ன வேண்டும்? வேண்டி விரும்பிப் பெற வேண்டியதுதான். இப்படிப்பட்ட யட்சர் கூட்டத்திற்குத் தலைவர் குபேரன். இவரது செயலுக்குப் பொருத்தமாக இவரை ஸ்ரீலட்சுமி குபேரர் என்று அழைப்பார்கள்.
பிறந்தார் குபேரர்
விஸ்வரசு என்ற மகா முனிவர் பல யாகங்கள் செய்ய விரும்பினார். திருமணம் செய்துகொண்டவர்கள்தான் செய்ய முடியும் என்ற சாஸ்திரம் இருந்ததால், அவர் பரத்வாஜ மகரிஷியின் மகளை மணந்துகொண்டார். இத்தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்க, அக்குழந்தைக்கு வைஸ்ரவணன் எனப் பெயர் வைத்தார்கள். இவரே பின்னர் குபேரர் ஆனார்.
தவ வாழ்க்கை
சிறு வயதிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய வைஸ்ரவணன், குறிப்பிட்ட காலம் வந்தபின் சிவனைக் குறித்து தவம் செய்ய விரும்பினார். இதற்குப் பெற்றோரின் அனுமதி கிடைக்க, கைலாய மலை அடிவாரம் சென்று தவ நிலையை அடைந்தார். இவரது தவத்தை மெச்சிய சிவன், இவருக்கு வரமளிக்க தேவர் குழாமுடன் இவர் முன் தோன்றினார்.
இறையருள் போதுமே
என்ன வரம் வேண்டுமென சிவன் வைஸ்ரவணனைக் கேட்க, தேவாதி தேவர்களும் சிவனும் எதிரில் தோன்றி காட்சி அளிக்க, வேண்டுவனவும் உண்டோ என்று கூறி ஒன்றும் கேட்காமல் ஆனந்த மான திருமுக மண்டலத்துடன் காட்சி அளித்தார் வைஸ்ரவணன். ஆனால் சிவன் அவரை வடதிசைக்கு அதிபதியாக்கி, மலையடிவாரங்களில் வாழும் யட்சர்களின் தலைவனாக்கினார். இறைவனிடம் வேண்டும்பொழுது, எதையும் நாமாகக் கேட்காமல் இறைவனிடமே பொறுப்பை விட்டுவிடுதல் கூடுதல் நலனைத் தரும்.
குபேரனின் சிறப்பு
அஷ்ட ஐஸ்வர்யத்தையும், பதினாறு வகை செல்வத்தையும் அளிப்பவர் குபேரன். இக உலக வாழ்விற்குத் தேவையான தனம், தான்யம், பிள்ளைப்பேறு, பொன், பொருள், ஆரோக்கியம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, நீண்ட ஆயுள் ஆகியவற்றை அருளுபவர் குபேரன்.
திருக்கோயில்களில் நடைசாற்றுவதற்கு முன்பு குபேரனைத் துதிப்பதைத் தவறாமல் செய்வார்கள். இத்தகைய சிறப்புடைய குபேரனுக்குத் தனிக் கோயில் சென்னையையடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அருகில் உள்ள ரத்தின மங்கலம் என்ற இடத்தில் உள்ளது. இங்கே கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீலஷ்மி குபேரர்.
திருக்கோயில் வலம்
நுழைவாயிலில் ராஜகணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இங்குள்ள கிணற்றைச் சுற்றி, விநாயகரின் ஷோடச மந்திரங்களுக்குரிய பதினாறு கணபதி சிலாரூபங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதனருகில் ஈசான மூலையில் குபேரலிங்கம் உள்ளது.
நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் இங்கு தத்தமது மனைவியருடன் அழகிய கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். பிரம்மா, சரஸ்வதியுடன் தனிச்சந்நிதியில் அருள்புரிகிறார். வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகம், பேனா ஆகியவை வழங்கப்படுகின்றன. குபேர பூஜையின்போது பயன்படுத்தப்படும் நாணயம் பிரசாதமாகத் தரப்படுகிறது. குபேரனின் காவல் தெய்வமான ஸ்வர்ணாகர்ஷண பைரவரும் அருள்பாலிக்கிறார்.
குபேரன், திருவேங்கடமுடையான் திருக்கல்யாணத் திற்குக் கடன் கொடுத்தவர் என்பதால் இங்கு பத்மாவதி தாயாருடன் காட்சி அளிக்கிறார். அருகே அறுபடை வீடு தலங்களில் உள்ள திருவுருவங்களை குறுவடிவில் தரிசிக்கலாம். குபேரர், தனது மனைவி சித்திரலேகாவுடன் அமர்ந்திருக்க, இவர்களுக்கு மேலே உள்ள பீடத்தில் ஸ்ரீமகாலஷ்மி ஐஸ்வர்யத்தை அருள்பாலிக்க தனிச்சன்னிதியில் கோயில் கொண்டுள்ள காட்சி அற்புதம். ஸ்ரீஅதிஷ்ட தேவியும், ஸ்ரீசொர்ண கெளரியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது புதுமை.
குபேர யாகம்
செப்டம்பர் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு குபேர யாகம், ரத்ன மங்கலம் ஸ்ரீலக்ஷ்மி குபேரர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது. பின்னர் பன்னிரெண்டு மணியளவில் சிறப்பு கோ பூஜை, ராஜ உபசாரத்துடன் கூடிய குபேர பூஜை ஆகியவை நடைபெறும். உலக நன்மைக்காக இந்த யாகம் நடத்தப்படுவதால் இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நன்மை அடையலாம். அன்னதானம் நடைபெறும்.
கோயில் எங்குள்ளது?
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டி இடதுபுறம் கேளம்பாக்கம் செல்லும் சாலையில் திரும்பி ரத்னமங்கலம் செல்லலாம். பாரீசில் இருந்து செல்ல 18, G18 ஆகியவற்றில் தாம்பரம் வர வேண்டும். பின்னர் தாம்பரத்தில் இருந்து செல்லும் பேருந்து எண் 55c. மூலம் ரத்னமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் செல்ல வேண்டும்.