சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியையும், எங்கும் நிறைந்த நுண்மைக்காட்சியையும் ஒரே சமயத்தில் காணமுடிந்த மணிவாசகர், இறைவனை அடைவதே பிறவியின் பயன் என்ற இறையுணர்வு பெற்ற மனிதர்கள் செய்யும் பல்வகைத் தவமுயற்சிகளையும் காண்கிறார்; இறைவனைக் காண இயலாத நிலையும், அதற்கான விடையும் மனிதகுலத்திற்குப் பயன்பெறும் அற்புதமான திருவாசகமாகப் பூத்தன. நேர்முக வர்ணனையாக இறைவனின் திருக்காட்சியை நமக்கெல்லாம் திருவாசகங்களால் காட்சிப்படுத்தும் அழகைக் காண்போம்.
அற்புதன் காண்க அநேகன் காண்க
சித்தமும் செல்லா சேட்சியன் காண்க
பத்தி வலையில் படுவோன் காண்க
(திருவாசகம்:அண்டப்பகுதி:39, 41-42)
பிரமனும், மாலும் காண இயலாத பெரியோன் பரமன்; சொல்லும், சொல்லின் பொருளுமான நிலையைக் கடந்து நிற்கும் அற்புதன் காண்க; அநேக வடிவங்களில் தோன்றும் ஒருவனேயான இறைவன் காண்க; புறமனம், உள்மனம், மேல்நிலைச் சித்தம் ஆகியன கடந்த ஆழ்நிலைச் சித்தத்தாலும் எட்ட முடியாத பரமன், அன்பர்களின் பக்தி என்னும் அன்பு வலையில் தானே வந்து சிக்கிக்கொள்வதைக் காணுங்கள் என்கிறார் பெருமான்.
தன் முனைப்பு இல்லாத முயற்சி
ஆழ்நிலைச் சித்தம் கொண்டு இறைவனைக் காணச் செல்வது ‘நான் முயற்சிக்கிறேன்’ என்னும் ‘தன் முனைப்பு’ காரணம் என்பதால் இறைவன் எட்டமுடியாதவனாகிறான். ஆனால், பக்தியால் உள்ளம் குழைந்து அன்பில் உருகுபவனிடம் ‘தன் முனைப்பு’ அறவே இல்லையாதலால், அருள் சுரந்து, தானே வந்து, பக்தனின் அன்புவலையில் அகப்படுகின்றான் இறைவன். இந்த நுட்பம் உணராமல், மனிதர்கள் இறைவனை அடையச் செய்யும் பல்வேறு முயற்சிகளையும், அவற்றால் இறைவனைக் காணமுடியாமல் அவர்கள் தவிப்பதையும் நமக்கு அறிவிக்கிறார் பெருமான்.
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்ஒளி கொண்ட பொன்ஒளி திகழத்
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்.
( திருவாசகம்:அண்டப்பகுதி:125-126)
தீப்பிழம்பாய் அம்மையப்பனிடம் தோன்றிய பச்சைமரகத மணியின் ஒளியும், மாணிக்கச் செம்மணியின் ஒளியும் அருளும் அறிவுமாய்ப் பெருகி, மின்னல் போன்ற பொன்ஒளி எங்கும் பரந்து விரிய, நான்கு முகங்களையுடைய திசைமுகனாம் பிரமன், எங்கும் சென்று தேடியும் காணக் கிடைக்காமல் தன்னை ஒளித்துக் கொண்டான் இறைவன் என்கிறார். உண்மையில், இறைவன் எங்கேயும் ஒளிந்து கொள்ளவில்லை; ‘நான் இறைவனது முடியைக் காண்பேன்’ என்னும் அகங்காரமே பிரமனின் கண்ணை மறைத்தது. பிரமனைப்போல் ‘நான்’ என்னும் 'தன்முனைப்பு' கொண்ட மனிதர்கள் அனைவரையும் குறிப்பதற்காகவே, ‘தேடினர்க்கு’ என்று பன்மையில் கூறினார் மணிவாசகர். (குவால்-மேடு, பிறக்கம்-பெருக்கம்)
கைகாட்டி மரமும் பயணமும்
ஆகமநூல்கள் கூறும் திருக்கோவில் திருத்தொண்டு, இறைவனுக்கு வீட்டில் செய்யும் பூசைகள், உள்ளத்தையும், உடலையும் ஒருநிலைப்படுத்தும் ‘யோகம் அல்லது யோகா’ ஆகிய ‘சரியை, கிரியை, யோகம்’ போன்ற படிநிலைகளை ‘முறையுளி’ என்பார்கள். இப் படிநிலைகளில் முயற்சிப்பாருக்கும் இறைவன் அகப்படவில்லை என்கிறார் மணிவாசகர். இப்படிநிலைகள், ‘மதுரைக்குச் செல்லும் சாலை’ என்பதுபோல, இறைவனை அடைவதற்கான வழிசொல்லும் கைகாட்டி மரமாகும்;
சாலையில் பயணிக்காமல், கைகாட்டிக் கம்பத்தின் அடியில் நின்றுகொண்டு மதுரையை அடைந்துவிட்டதாக நினைப்பவரைப்போல், படிநிலைச் சடங்குகளை மட்டுமே செய்துவிட்டு, ‘அன்புத்தொண்டு’ என்னும் உணர்வுபூர்வமான சாலையில் பயணம் செய்யாதவர்கள் இறைவனைச் சென்று அடையமுடியாது என்பதை ‘முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்’ என்றார் மணிவாசகர்.
மனம், சித்தம் போன்றவைகளை ஒருமைப்படுத்தி, உற்றார், உறவினர் கண்டு வருந்துமளவிற்கு உறைபனி நீரினில் நின்றும், தீயிடை நின்றும், உடலை வருத்திக் கடுந்தவம் புரிவோருக்கும் இறைவன் அகப்படுவதில்லை என்கிறார் பெருமான். இத்தகைய கடுந்தவத்தின் பயனாக, நீர்மேல் நடக்கும் ஆற்றலைப் பெற்ற சாதகன் ஒருவன் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று, கங்கைநதி நீரின்மேல் நடந்து காட்டினான். அத்தகைய ஆற்றல் எப்படிக் கிடைத்தது என்று ராமகிருஷ்ணர் வினவ, ஐம்பது ஆண்டுகள் அவன் செய்த பல்வேறு கடுந்தவங்களைப் பற்றி மூச்சுவிடாமல் கூறினான்.
ராமகிருஷ்ணர் பெருவியப்பு அடைந்து பாராட்டுவார் என்று எதிர்பார்த்தவனுக்குப் பெரும் ஏமாற்றம். ‘என் சாதனை தங்களை வியப்படையச் செய்யவில்லையா சுவாமி?” என்று பணிவாக வினவினான். ‘ஓட்டைக் காலணாவைக் கொடுத்தால் ஓடக்காரன் அக்கரைக்குக் கொண்டு சேர்த்துவிடுவான்; இத்தகைய அற்பமான காரியத்துக்காக விலைமதிப்பில்லாத வாழ்நாளின் ஐம்பது ஆண்டுகளை வீணடித்து விட்டாயே! இனி, எஞ்சிய வாழ்நாளையாவது பயனுற வாழ்வாயாக!” என்றார் பரமஹம்சர்.
கடும்தவம் செய்து இறைவனைக் காண முயற்சிப்பதைக் காட்டிலும் எளிதானதும் பயன் தருவதும் ‘அன்பு வழியிலான தொண்டு’ என்று உணர்வோம்.
வேதம், ஆகம நூல்களில் கூறப்பட்ட சாத்திர சடங்குகளின் அடிப்படையில் இறைவனைக் காண முயல்பவர்கள், அச்சடங்குகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதால், அன்பும், தொண்டும் வெளியேற்றப்படுகின்றன; அவற்றுடன் இறைவனும் வெளியேறிவிடுகிறான்.
இறைக்காட்சியினால் அனைத்து நிகழ்வுகளையும் காண இயன்ற மணிவாசகரின் திருவாசகத்தில் இன்னும் சில நிகழ்வுகளை அடுத்தவாரம் காண்போம்.
தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)