மானிடர்கள் அவரவருடைய எண்ணங்களின்படியே எழுப்பப்படுவார்கள். ஒருவர் நற்செயல்புரிய எண்ணி அதைச் செய்யாவிட்டாலும், அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். எண்ணம், சொல், செயல் மூன்றிலும் துாய்மையாக இருப்பவரைத் தவிர மற்ற யாரும் உண்மையாளர் அல்லர். தன்னை அறிந்தவனே தன் நடத்தையை ஒழுங்குபடுத்தத் தெரிந்தவனாக இருப்பான்.
நீங்கள் உள்ளும் புறமும் ஒருங்கிணைந்த நிலையில் எப்போதும் இறைவனுக்கு அஞ்சி செயல்படுங்கள். உங்கள் ஏழ்மையிலும் செல்வ நிலையிலும் நடுநிலையைப் பின்பற்றுங்கள். அவ்வாறே கோபதாபமான நேரத்திலும், மகிழ்ச்சியான நேரத்திலும் நியாயமாகவும், நீதியுடனும் நடந்துகொள்ளுங்கள். இந்த மூன்று செயல்களும் நற்பலனை, ஈடேற்றத்தை அளிக்கக்கூடியவை. இதற்கு எதிர்மாறான மூன்று விஷயங்களிலும் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். கடுமையான கஞ்சத்தனம், கீழ்த்தரமான மன இச்சை, அகந்தை ஆணவத்துடன் வீண்பெருமை அடித்துக்கொள்வது ஆகிய மூன்றும் நாசத்தையே தரும்.
விசுவாசிகள் ஒருவருக்கொருவர் சலாம் கூறிக்கொள்ள வேண்டும். பசித்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும். ஐந்து நேரத் தொழுகையையும் தொய்வில்லாமல் நிறைவேற்ற வேண்டும், இந்த மூன்று செயல்களும் பாவத்துக்குப் பரிகாரம் ஆகும்.
வேதனைகளையும் சோதனைகளையும் சகித்துக்கொண்டு இறைவழிபாட்டில் ஈடுபடுபவர்களுக்கு நன்மைகளை அவன் வழங்குகிறான். செல்வம் இல்லாதவர்களை அவனே செல்வந்தராக்குகிறான். பலம் இல்லாதவரையும் வெற்றியாளர் ஆக்குகிறான். சொந்தபந்தம் இல்லாதவருக்கும் உரிய இணைப்பை அளிக்கிறான்.
நாவைவிட அதிக விஷேடமானதாக மனிதனுக்கு இறைவன் எதையும் அமைக்கவில்லை. சுவனத்தை அடைவதும் நாவைக் கொண்டுதான்; நரகத்தை அடைவதும் அதைக்கொண்டுதான். நாக்கு பொல்லாத கடிநாய் போன்றது. அதை அடக்கியாள வேண்டும். பொய் பேசுதல், வாக்குறுதியைக் கைவிடுதல், நம்பிக்கைத் துரோகம் செய்தல் ஆகிய மூன்றும் நயவஞ்சகர்களின் செயலாகும்.