ஆன்மிகம்

ஆன்மிகச் சுற்றுலா: புற்றிலிருந்து எடுக்கப்பட்ட நரசிம்மர்

பிருந்தா கணேசன்

ஆந்திர மாநிலம் கோதாவரி நதி தீரத்தில் கடலும் நதியும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் தலம்தான் அந்தர்வேதி. மூலவர் லட்சுமி நரசிம்மர். வளம் நிறைந்த கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோணசீமா பகுதி சோலைகள் நிறைந்து மனதைக் கொள்ளை கொள்கிறது. இதனால் அந்தப் பகுதி ஆந்திர கேரளா என்றே அழைக்கப்படுகிறது. கிழக்கிலும் தெற்கிலும் கடல் பொங்குகிறது. மேற்கில் கோதாவரியும் வடக்கில் ரக்தகுல்யா நதியும் அணி செய்கின்றன.

ஒரு சமயம் நாரதர், நான்முகனிடம் அந்தர்வேதி தோன்றிய கதையை கூறும்படி கேட்டார். வசிட்ட மகரிஷி கோதாவரியின் கிளை நதியை கலக்கச் செய்து அங்கு ஒரு ஆசிரமம் அமைத்தார். அந்த இடத்தில் ருத்திர யாகம் நடத்தி நீலகண்டேஸ்வரியின் பிரதிமையை நிறுவினார். யாகம் செய்த இடம் மேடை போல் அமைந்ததால் அது அந்தர்வேதி என்றாகியது. வேதிக் என்றால் யாக மேடை என்று அர்த்தம். இரண்டு நதிகளுக்கு நடுவில் அமைந்ததால் அந்தர்.

வரம் பெற்ற ரக்தவிலோசனன்

இரண்யாட்சனின் மகனான ரக்தவிலோசனன் என்பவன் பதினாயிரம் ஆண்டுகள் இந்த வசிட்ட நதிக் கரையில் கடும் தவம் புரிந்து சிவபெருமானிடம் ஒரு பிரமிக்கத்தக்க வரத்தைப் பெற்றான். போரில் தன் உடலில் இருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் எத்தனை மண் துகள்களை நனைக்கிறதோ அத்தனை ரக்த விலோசனார்கள் தோன்றி அவனுடன் இணைந்து போர் புரிவார்கள். இதுதான் வரம். இதனால் செருக்குற்ற அவன் முனிவர்கள்,அந்தணர்கள்,ஈரேழு பதினான்கு லோகங்கங்களை சேர்ந்தவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். வேள்விகளுக்கு இடையூறு விளைவித்தான்.

விசுவாமித்திரர் வசிட்டரை வஞ்சம் தீர்க்க, அவருடைய புதல்வர்கள் மீது திருப்பினாள். முனிவர் இல்லாத சமயம் அவருடைய மைந்தர்களைக் கொன்றான். இதை அறிந்த வசிஷ்டர் ஆசிரமம் திரும்பி, விசனமற்றிருந்த மனைவி அருந்ததியைக் கண்டார். நரசிம்மரைத் தொழுதார். லட்சமி நரசிம்மர் கருடன் மேல் தோன்றி அவர் குறை அறிந்து ரக்தவிலோசனைப் போருக்கு அழைத்தார். யுத்தம் மூண்டது. அதில் சக்கராயுதம் கொண்டு பெருமான் அவன் உடலில் பல காயங்களை ஏற்படுத்தினார். அதனால் வந்த ரத்தத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான ரக்தவிலோனார்கள் தோன்றினர். மாயசக்தியை ஏவி, அரக்கர்களின் குருதி பூமியில் படாமல் இருக்கச் செய்யுமாறு பணித்தார். அவளும் பூமி முழுவதும் தன்னுடைய நாக்கைப் பரப்பி விட்டாள்.

பின் சக்கராயுதத்தை விட்டு எல்லா அரக்கர்களையும் அழித்தார். மாயா சக்தி அப்படி நிறுத்திய குருதிப் புனலை பின் கீழே விட அது ரக்தகுலியா என்ற நதியாக ஓடியது. பின் தன் ஆயுதத்தையும் கையையும் சுத்தம் செய்வதற்காக சக்கர தீர்த்தம் என்ற குளத்தை உருவாக்கினார். இன்றும் இதில் நீராடுபவர்கள் எல்லா பாவங்களும் நீங்கப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. வசிட்டரின் விருப்பப்படி அங்கேயே லட்சுமி சமேதராக நரசிம்மர் கோவில் கொண்டார். இங்கு மட்டும் நரசிம்மர் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பு. மாய சக்தி குதிரை மேல் வந்ததால் அவள் குர்லகா என்றும் அசுவருத்தாம்பிகா என்றும் அழைக்கப்படுகிறாள்.

108 நரசிம்ம தலங்களுள் ஒன்று

கலியுகத்தில் இவருடைய உருவம் புற்றிலிருந்து கேசவதாஸ் என்பவரால் கண்டெடுக்கப்பட்டு கோவிலும் கட்டப்பட்டது. காலப்போக்கில் அவ்வப்போது அழிந்துபோய் பின் கட்டப்பட்டு , இப்போது இருக்கும் கோவில் பதினைந்து அல்லது பதினாறாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். இது 108 நரசிம்ம தலங்களுள் 32-ம் தலமாகும். இது ஐந்து அடுக்குள்ள விமான கோபுரத்தை உடைய கோவிலாகும். கோவிலில் நுழையும்போது ஒரு பக்கத்தில் கருடனும் மறு பக்கத்தில் அனுமனையும் காண முடிகிறது. கருவறையின் கூரையில் வட பத்ர சாயி தரிசனம் தருகிறார். இந்த விக்கிரகம் ஒரே கல்லில் ஆனது. கருவறையில் மூலவர் நரசிம்மர், லட்சுமியை மடி மீது அமர்த்தி காட்சி தருகிறார். பின் கருவறையை சுற்றி வந்தால் பிரகாரத்தின் கிழக்கு பக்கம் ராஜலட்சுமி மற்றும் வெங்கடேஸ்வரர்,

வடக்கில்பூதேவி மற்றும் ரங்கநாதஸ்வாமி, மேல் திசையில் சந்தான கோபாலர், கேசவர், தென் திசையில் ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும் சந்நிதி கொண்டுள்ளனர். சதுர்புஜ அனுமனுக்கும் தனி சந்நிதி. மூலவரை தவிர்த்து பிரம்மா,விஷ்ணு, சிவனும் காட்சி தருகிறார்கள். இங்கு வசிட்டருக்கும் ஒரு கோவில் உண்டு. 54 அடி உயரமுள்ள இந்தக் கோவில் பூமிக்கு கீழேயும் அத்தனை அளவு கட்டப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப் பகுதியில் sri சக்கரம் அமைந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.

SCROLL FOR NEXT