ஆன்மிகம்

விவேகானந்த நவராத்திரி

ஜி.விக்னேஷ்

நூறு வலிமை மிக்க இளைஞர்களைத் தாருங்கள்; இந்நாட்டை மாற்றிக் காட்டுகிறேன் என்று அறைகூவல் விடுத்தார் சுவாமி விவேகானந்தர். அமெரிக்காவில் இருந்து 1897ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் தாயகம் திரும்பினார். சென்னையில் தற்போதைய விவேகானந்தர் இல்லத்தில் அதே ஆண்டு பிப்ரவரி ஆறாம் தேதி முதல் பதினான்காம் தேதிவரை ஒன்பது நாட்கள் வரை தங்கி இருந்தார். அந்த நாட்களின் நினைவாக, விவேகனந்தர் நவராத்திரி விழா கடந்த மூன்று ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் நவராத்திரி விழா நிகழ்ச்சிகள் சுவாமி கெளதமானந்தர் தலைமையில் அதே நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒன்பது நாட்களிலும் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளைப் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீராமகிருஷ்ண மடம் விவேகானந்தர் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

அதையடுத்து, சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் மேலாளர் சுவாமி ஆசுதோஷானந்தர் அறிமுக உரை நிகழ்த்தினார். ஒழுக்கமும், மன ஒருமைப்பாடுமே கல்வி என்று சொற்பொழிவாற்றினார் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி அபவர்கானந்தர். இளைஞர்களின் வழிகாட்டி சுவாமி விவேகானந்தர் என்றார் சுவாமி சத்யப் பிரபானந்தர். பஜனை, நாட்டுப்புறக் கலைகளுடன் விவேகானந்த காவியம் என்ற தலைப்பில் கொளரி ராஜகோபாலன் கதா காலட்சேபம் செய்தார்.

விவேகானந்தர் கண்ட பெண் சிங்கம் சகோதரி ஆர்.எஸ். சுபலஷ்மி என்ற தலைப்பில், பால்ய விதவைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு அடிகோலிய ஆர்.எஸ். சுபலஷ்மியின் உணர்ச்சி ததும்பும் வாழ்க்கைச் சரிதத்தை, அவரது வம்சத்தில் வந்த நித்யா பாலாஜி மற்றும் காவேரி பரத் ஆகியோர் அரிய படங்களுடன் பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன் செய்தார்கள்.

சுவாமி விவேகானந்தரும் இந்திய கலாசாரமும் என்ற தலைப்பில் தி வேதாந்த கேசரி பத்திரிக்கை ஆசிரியர் சுவாமி ஆத்மசாரதானந்தா சொற்பொழிவையடுத்து, வெள்ளியன்று சுவாமி விவேகானந்தர் நாட்டிய நாடகத்தைக் காஞ்சி காமகோடி நாட்டியாலயக் குழுவினர் சிறப்பாக நிகழ்த்தினார்கள். சுவாமி விவேகானந்தரைப் பல கோணங்களில் அறிந்துகொள்ளவும் நினைவுகூரவும் இவ்விழா பெரும் உதவியாக இருந்ததாகப் பார்வையாளர்கள் பலரும் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT