ஆன்மிகம்

கர்மவினை மீது பழி போடாதீர்கள்!- சத்குரு ஜக்கி வாசுதேவ்

சத்குரு ஜக்கி வாசுதேவ்

என்னிடம் பலரும் கேட்கிற கேள்வி இது... ‘‘சத்குரு! விபத்துகள் ஏன் நிகழ்கின்றன? தொழில்நுட்ப வளர்ச்சி காரணமா அல்லது கர்மவினைகள் காரணமா?’’

அவர்களுக்கு என் பதில், ‘‘மோசமாக ஓட்டுபவர்கள்தான் காரணம்!’’

உடனே அவர்கள் கேட்பார்கள், ‘‘ஆனால் அடிபட்டவர் வெறுமனே நடந்து போய்க்கொண்டுதானே இருந்தார்?’’

ஆம், ஆனால் கர்ம வினை என்றால் நீங்கள் செய்யும் செயலாக மட்டும் இருக்க வேண்டியதில்லை. உங்களைச் சுற்றி நிகழ்வதாகக்கூட இருக்கலாம்.

‘நான் சரியாக இருக்கிறேன், முறையாக வாழ்கிறேன், விதிமுறைகளைப் பின்பற்றுகிறேன்’என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் உங்கள் வீட்டில் வசிப்பவர்கள் வேறு விதமாக வாழ்ந்தால், அந்தப் பாதிப்பு உங்களுக்கும் வரும்தானே!

சில ஆண்டுகளுக்கு முன்னால், மொரீஷியஸ் தீவிலிருந்து சில பேர் இந்தியா வந்திருந்தார்கள். ஐந்து தலைமுறைகளுக்கு முன்னர் அவர்களுடைய முன்னோர்கள் தமிழ்நாட்டிலிருந்து மொரீஷியஸுக்குக் கொத்தடிமைகளாகச் சென்றவர்கள். தங்கள் பாரம்பரியத்தின் ஆணிவேரைப் பார்க்க வேண்டுமென்று தாயகம் வந்தவர்கள், கோவில் கோவிலாக ஒரு வாரம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் போய்விட்டு, கோவைக்கு வந்தார்கள்.

“125 ஆண்டுகளுக்கு முன் உங்கள் முன்னோர் வசித்த தேசத்துக்கு வந்திருக்கிறீர்களே, இந்த அனுபவம் எப்படியிருக்கிறது?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.

“இந்தியாவில் கடவுள் ஓவர் டைம் வேலை பார்க்கிறார் என்று தோன்றுகிறது. இங்கே உள்ள வீதிகள், நீங்கள் வாகனங்களை ஓட்டுகிற முறை எல்லாம் பயங்கரம். வீதிகளிலேயே குடும்பம் குடும்பமாக பலர் வசிக்கிறார்கள். வாகனங்கள் வெறித்தனமான வேகத்தில் ஓடுகின்றன. ஆனால் யாரும் கொல்லப்படுவதில்லை” என்றார்கள்.

விபத்துகள் எல்லா இடங்களிலும் நிகழ்கின்றன. ஆனால், இங்கே நிகழ்வதுபோல் எங்கும் ஏற்படுவதில்லை. இங்கே நீங்கள் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்தால் அதுதான் விபத்து. போக்குவரத்தில் இருக்கிற நெரிசலையும் முந்திக்கொள்வதில் மக்கள் காட்டுகிற அவசரத்தையும் பார்க்கும்போது, காரில் சிறு கீறல்கூட இல்லாமல் வீடு போய்ச் சேர்ந்தால் அதுவே பெரிய அதிசயம்.

இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினை இதுதான். ஒரு மனிதன் செத்து விழுந்தால், உடனே அவனது பழைய கர்ம வினைகள் அன்று அவன் மீது எப்படியெல்லாம் செயல்பட்டன என்பதற்கு அபாரமான விளக்கங்களையெல்லாம் அள்ளி வீசுவீர்கள். சாலையோரங்களில் தூங்கிக்கொண்டிருப்பவர் மீது வாகனம் மோதினால், உடனே அதற்குக் காரணம் அவர்களது கர்ம வினைதான் என்று கதை சொல்வீர்கள்.

அந்தச் சம்பவம் ஏன் நடந்தது என்று பார்ப்பதில்லை. அதற்காக ஏதும் செய்வதில்லை. ஏனென்றால், எல்லாம் கர்ம வினையின் சுழற்சி. கடவுளின் விருப்பம். தெய்வ சங்கல்பங்களை நாம் மாற்ற முயலக் கூடாது. அது நல்லதல்ல என்றெல்லாம் சொல்லித் தப்பித்துக்கொள்வீர்கள் இல்லையா?

நான் உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சோகத்துக்கு உவமை சேர்க்காதீர்கள். உங்கள் வாழ்க்கைக்கும் உங்களைச் சுற்றி நடைபெறுகிற வாழ்க்கைக்கும் ஏதாவது செய்யுங்கள். இது மிகவும் முக்கியம்.

யார் அதிக துரதிர்ஷ்டம் வாய்ந்தவர்?

விஜயநகர சாம்ராஜ்யத்தில் ஒரு முறை இப்படி நடந்தது. ரெட்டப்பா என்ற பெயரில் ஒரு நாவிதர் இருந்தார். அதிகாலையில் முதன்முதலாக ஒரு சவரத் தொழிலாளி அல்லது சலவைத் தொழிலாளியின் முகத்தில் விழிக்க நேர்ந்தால், அது தீய சகுனம் என்றொரு மூடநம்பிக்கை இருந்த காலம். குறிப்பாக, ரெட்டப்பாவின் முகத்தைப் பார்த்தால் அன்று நிச்சயம் ஏதாவது தீமை நடக்கும் என்ற கருத்து பரவி இருந்தது. ஏன் வம்பு என்று ரெட்டப்பா காலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை.

ஒருமுறை அரசர், வேட்டையாடு வதற்காக அருகிலிருந்த வனப் பகுதியில் முகாமிட்டிருந்தார். அதிகாலையில் ரெட்டப்பா தன் காலைக் கடன்களைக் கழிப்பதற்காக வனத்துக்குள் போக, அரசரும் அதே காரணத்துக்காக எதிரே வந்தார். இருவரும் நேருக்கு நேராகச் சந்தித்துக்கொண்டார்கள். அரசர் அலறினார். “அடக் கடவுளே! காலையில் முதலில் உன் முகத்தில்தான் விழித்துவிட்டேனே. என்ன தைரியம் இருந்தால் என் முன்னே வருவாய்?” என்று பொரிந்து தள்ளினார். அரசருக்கு எதிரே வந்ததால், அவருக்கு துரதிர்ஷ்டத்தைத் தந்ததால், ரெட்டப்பாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தக் கொடூரம் குறித்து தெனாலிராமனுக்குத் தெரியவந்தது. அரசர் விதித்த தண்டனையின்படி அரசரே மரண தண்டனைக்கு ஆளாகப் போகிறார் என்று சில சுவரொட்டிகளைத் தயார்செய்து தன் கையொப்பத்தோடு எல்லாப் பக்கங்களிலும் ஒட்டிவிட்டார் தெனாலிராமன். தகவல் தெரிந்ததும் அரசருக்குக் கோபம் தலைக்கேறியது.

தெனாலிராமனை அழைத்து, “என்ன இது பைத்தியக்காரத்தனம்?” என்று கேட்டார். “அரசே! காலையில் நீங்கள் ரெட்டப்பாவின் முகத்தில் விழித்தீர்கள். அதனால் சில சிறிய தீமைகள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால் ரெட்டப்பா உங்கள் முகத்தில் விழித்தததால் அவருக்கு மரண தண்டனையே கிடைத்தது. எனவே யாருடைய முகம் அதிக துரதிர்ஷ்டம் வாய்ந்தது?” என்று கேட்டார் தெனாலி.

எந்த அளவுக்கு நீங்கள் நிர்வகிக்கிறீர்களோ, அந்த அளவுக்கே வாழ்க்கை நன்றாக நடக்கும். சரியாக நிர்வகிக்கவில்லை என்றால், எல்லாமே தவறாகத்தான் போகும்.

சரியான நேரம்

கிருஷ்ண தேவராயருக்கும் தெனாலிராமனுக்கும் இடையில் இன்னொரு சம்பவம். படையெடுக்க வந்த மொகாலய அரசர்கள் கோதாவரி நதியின் மறு கரையில் முகாமிட்டிருந்தார்கள். நதி நிரம்பி வழிந்துகொண்டு இருந்ததால், கடக்க முடியவில்லை. வெள்ளம் வடிந்து நதியைக் கடந்தால், அவர்களால் கிருஷ்ண தேவராயரின் படைகளை அழித்து நாட்டைச் சூறையாட முடியும். ஆனால் வெள்ளம் வடிய இரண்டு மாதங்களாவது ஆகும்.

நதியின் சில இடங்களைக் கடக்க முடியும் என்பது இந்தப் பக்கம் உள்ளூர்க்காரர்களுக்குத் தெரியும். “மொகலாயர்கள் அசந்திருக்கிற இந்த நேரத்தில், நாம் நதியைக் கடந்து போய் அவர்களை அழித்துவிடலாம்” என்று ஆலோசனை சொன்னார் தெனாலிராமன். அரசருக்கு ஆருடம் சொல்கிற ஜோதிடரோ, மொகலாய அரசரிடம் லஞ்சம் வாங்கியிருந்தார். அவர், “நாளும் கோளும் நன்றாக இல்லை. இப்போது போருக்குச் சென்றால் அரசருக்கு ஆபத்து” என்றார்.

தெனாலிராமன், அரசரிடம், ‘‘அவர் ஒரு ஜோதிடர். நட்சத்திரங்களையும் கிரகங்களின் சூழலையும் அவர் பார்க்கட்டும். நீங்கள் யுத்தச் சூழலைப் பாருங்கள். தாக்குதல் நடத்த இதுவே சரியான தருணம்” என்றார். அரசர் தயங்கினார். உடனே தெனாலிராமன், அந்த ஜோதிடரை அழைத்து வரச் சொல்லி, அவரோடு வெகுநேரம் வாதிட்டார். இப்போது போருக்குப் போனால் அரசர் இறந்துவிடுவார் என்றார் அவர் விடாப்பிடியாக.

ஜோதிடரிடம், “உங்களுக்கு எதுவரை ஆயுள்?” என்று தெனாலிராமன் கேட்க, “84 வயது வரை வாழ்வேன்” என்றார் அவர். உடனே உடைவாளை உருவிய தெனாலிராமன், “இல்லை! இப்போதே நீ சாகப்போகிறாய்” என்றதும் நடுங்கினார் ஜோதிடர். “ஏன் பயப்படுகிறாய்? எப்படியும் நீ சாக மாட்டாய். நீதான் 84 வயது வரை வாழ்வாயே!” என்றார்.

கிருஷ்ண தேவராயர், மொகாலயப் படைகளைத் தாக்கினார். வென்றார். பின்னொரு காலத்தில் மொகலாயப் படை அவரை வெற்றி கொண்டது என்றாலும், அந்த யுத்தத்தில் தேவராயர் வென்றதற்குக் காரணம் சரியான நேரத்தில் தாக்கியதுதான்.

உங்களைப் படைத்தவர் அறிவைக் கொடுத்ததன் காரணம், அதை உறைந்துபோக விடுவதற்கல்ல. உரிய நேரத்தில் பயன்படுத்துவதற்கே!

மனிதர்கள் தங்கள் மூளையின் 12% மட்டும்தான் பயன்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். அப்படியானால், மூளையின் பெரும்பகுதியை உறையவிட்டிருப்பதாக அர்த்தம். அப்படி உறையவிட்டிருப்பதற்கான காரணங்களில் ஒன்று, வாழ்க்கை குறித்த முட்டாள்தனமான அபிப்பிராயங்கள்தான். அவற்றைப் புறந்தள்ளுவீர்களென்றால், உங்கள் அறிவு துடிப்போடும் விழிப்போடும் இயங்கத் தொடங்கும்.

எப்போதும் எல்லாவற்றுக்கும் தயாராக ஏதாவது சில காரணங்களை வைத்திருப்பதாலேயே உங்கள் மூளையைத் தூங்கவிட்டு, அதன் 88% அளவை உறையவிட்டு, மனிதனாகப் பரிணாமம் கொண்டதை விரயமாக்குகிறீர்கள். இந்த மூளை உருவாகப் பல லட்சம் ஆண்டுகள் ஆயின. ஆனால் மனிதர்கள் அதை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. அடுத்து வரும் தலைமுறைகளுக்காகப் பாதுகாத்து வைக்கிறீர்களா என்ன?

உங்கள் மூளையை இப்போது பயன்படுத்தினால்தான் வருங்காலத் தலைமுறைக்கென்று இந்த பூமி இருக்கும். இல்லையென்றால், எதிர்காலத் தலைமுறைக்கென்று எதுவும் இருக்காது!

SCROLL FOR NEXT